சென்னை மாநகராட்சி பகுதியில் சாலைப் பள்ளங்களை சீர்செய்யும் பணிகள் தீவிரம்: மண்டலம் வாரியாக தார் கலவை அனுப்பி வைப்பு

சென்னை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாலைகளில் உள்ள பள்ளங்களை சீர் செய்யும் பணியை மண்டலம் வாரியாக மாநகராட்சி தீவிரப்படுத்தியுள்ளது. சென்னை பெருநகர சாலைகளை பராமரித்தல் என்பது முக்கியமானதும் மற்றும் சவாலான பணியும் ஆகும். கடந்த சில வருடங்களாக சென்னை நகர சாலைகளின் தரத்தை உயர்த்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கு சிறந்த தொழில்நுட்ப நிறுவனங்களான இந்திய தொழில்நுட்ப கழகம், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையம் போன்ற நிறுவனங்கள் உலகத் தரம் வாய்ந்த வசதிகளை பொதுமக்களுக்கு அளிப்பதற்கு உறுதுணை புரிந்து வருகின்றன.

சாலைகளை மேம்படுத்துவதை தவிர சாலைகளில் மழையாலும், இயற்கை சீற்றங்களினாலும், மற்ற துறைகளால் ஏற்படுத்தப்படும் சாலை வெட்டுகளினாலும் ஏற்படும் பள்ளங்கள், பெருநகர சென்னை மாநகராட்சியின் சேத்துப்பட்டில் உள்ள தார் கலவை நிலையத்தில் தயாரிக்கப்பட்ட தார் கலவைகள் மூலம் சமன் செய்யப்படுகிறது. இவ்வாறு தினந்தோறும் தயாரிக்கப்படும் தார் கலவைகள், தேவையான சம்பந்தப்பட்ட கோட்டங்களுக்கு ஒட்டு வேலைப்பணிக்காக அனுப்பி வைக்கப்படுகின்றது.

சென்னை மாநகரத்தில் சுமார் 387.35 கி.மீ. நீளமுள்ள பேருந்து சாலைகளும், 5623 கி.மீ நீளமுள்ள உட்பிரிவு சாலைகளும் உள்ளன. இந்த பேருந்து சாலைகள்  சென்னை மாநகராட்சியால் பேருந்து சாலைகள் துறை மூலமாக பராமரிக்கப்பட்டு வருகிறது. பேருந்து சாலைகள் ஐந்து வருடத்திற்கு ஒருமுறை பேவர் மூலம் மேம்படுத்தப்படுகிறது. பேருந்து சாலைகள் மேம்படுத்துதல் என்பது, 40 மி.மீ. கனமுள்ள அழுத்த தார் கலவை (சி.பி.சி.) மற்றும் சாலையின் அடி பரப்பு பழுதுபட்டு இருந்தால் 50 மி.மீ. கனமுள்ள அடர்ந்த தார் கலவை (டி.பி.எம்.) ஆகியவை அடங்கும்.

சென்னையில் வடகிழக்கு பருவ மழை பெய்ய தொடங்கி உள்ள நிலையில், சென்னையில் சாலைகளில் உள்ள பள்ளங்களை சென்னை மாநகராட்சி சீர் செய்து வருகிறது. மழைக்காலங்களில் சாலைகளில் மழைநீர் தேங்குவது என்பது இயல்பாகி வருகிறது. மழை பெய்தால் சாலைகளில் உள்ள பள்ளங்களில் தண்ணீர் தேங்கி அது வாகன ஓட்டிகளுக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது. இது குறித்து பொதுமக்களும் சென்னை மாநகராட்சிக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். இதற்கு சென்னை மாநகராட்சி சார்பில் வார்டுக்கு தலா ரூ.5 லட்சம் என ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை மாநகராட்சி  சென்னை சாலைகளில் உள்ள பள்ளங்களை சரி செய்வதற்காக 110 மெட்ரிக் டன் அளவுள்ள 4400 குளிர் தார் மூட்டைகள் மண்டல வாரியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இச்சூழலில்,  சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சாலைகளில் இருக்கும் பள்ளங்களை நிரப்புவதற்காக குளிர்ந்த தார் மூட்டைகளை மண்டல வாரியாக அனுப்பி வைத்துள்ளது. 110 மெட்ரிக் டன் அளவுள்ள 4400 மூட்டை குளிர் தார் கலவை மண்டல வாரியாக வழங்கப்பட்டுள்ளது. இதைக்கொண்டு உடனடியாக சாலைகளில் உள்ள பள்ளங்களை சரி செய்யும் பணிகளை மேற்கொள்ள மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, 1, 2, 3, 7, 11, 12, 14, 15 ஆகிய மண்டலங்களுக்கு தலா 120 மூட்டைகளும், 4, 5, 6, 8, 9, 10, 13 ஆகிய மண்டலங்களுக்கு தலா 400 மூட்டைகளும் மாநகராட்சி சார்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மெட்ரிக் டன் அளவை பொறுத்தவரை 1, 2, 3, 7, 11, 12, 14, 15 ஆகிய மண்டலங்களுக்கு 3 மெட் ரிக் டன்  தாரும், 4, 5, 6, 9, 10, 13 ஆகிய மண்டலங்களுக்கு 10 மெட்ரிக் டன் தாரும் வழங்கப்பட்டுள்ளது.  குறிப்பாக பேருந்துகளுக்கான சாலைகளில்  உள்ள பள்ளத்திற்கு 16  மெட்ரிக் டன் அளவு கொண்ட  640 மூட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, சென்னை மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘வடகிழக்கு பருவமழை இந்த வாரத்தில் ஆரம்பமாக உள்ளது. இதனால் சாலைகளில் உள்ள பள்ளங்களில் நீர் தேங்க வாய்ப்புள்ளது. கடந்த வாரம் மாநகராட்சி சார்பில் அதிகாரிகளுடன் கூட்டம் நடத்தப்பட்டது. இதுவரை 800க்கும் மேற்பட்ட பள்ளங்கள் சீர்செய்யப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து பகுதிகளிலும் பள்ளங்கள் சீரமைக்கப்படும்’’ என்றார்.

Related Stories: