×

தொழிலதிபரை கடத்தி நில அபகரிப்பு செய்த விவகாரம் போலீஸ் அதிகாரிகள் மீதான வழக்கு சிபிஐக்கு மாற்றம்: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சென்னை தொழிலதிபரை கடத்தி நில அபகரிப்பில் ஈடுபட்ட காவல் துறை  அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கை சிபிஐக்கு மாற்றம் செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை அயப்பாக்கத்தை  சேர்ந்தவர் ராஜேஷ். கோவை ஓட்டலில் இருந்த ராஜேஷ் மற்றும் அவரது வருங்கால மனைவியை, அப்போது, திருமங்கலம் எஸ்.ஐ. பாண்டியராஜன் தலைமையில் 2 போலீசார் பிடித்து வந்து சென்னை அருகே உள்ள பண்ணை வீட்டில் அடைத்தது வைத்தனர். பின்னர் பண்ணை வீட்டிற்கு வந்த திருமங்கலம் உதவி கமிஷனர் சிவக்குமார், கோடம்பாக்கம் ஸ்ரீ மற்றும் ஆந்திரா கும்பலுடன் சேர்ந்து ராஜேசை மிரட்டி சொத்துகளை எழுதி வாங்கியுள்ளனர்.

கடந்த 2019ம் ஆண்டு ராஜேஷ் மற்றும் அவரது குடும்பத்தினரை கடத்தி செங்குன்றம் அருகே உள்ள பண்ணை வீட்டில் அடைத்து வைத்து, சொத்துகளை  அபகரித்ததாக திருமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த வழக்கு பின்னர் சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றப்பட்டது இதையடுத்து, தொழிலதிபர் கடத்தல் மற்றும் சொத்துகள் அபகரித்த விவகாரத்தில் தொடர்புடைய திருமங்கலம்  போலீஸ் உதவி கமிஷனர் சிவக்குமார், இன்ஸ்பெக்டர் சரவணன், சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியராஜன், அப்போது காவலர்களாக இருந்த கிரி, பாலா, சங்கர் மற்றும் அனைத்திந்திய இந்து மகா சபா கட்சித் தலைவர் கோடம்பாக்கம் ஸ்ரீகண்டன், அவரது  மகன் தருண் கிருஷ்ணபிரசாத், சிவா ஆகியோர் மீது சிபிசிஐடி போலீசார் கடத்தல், மோசடி, காயம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.

அதில் உதவி கமிஷனர் சிவக்குமார் தவிர மற்றவர்கள் கைது  செய்யப்பட்டனர். சிவக்குமார் மட்டும் முன் ஜாமீன் பெற்றார். இந்நிலையில், இந்த வழக்கில் அப்போது கூடுதல் கமிஷனராக இருந்த தினகரன், தன்னை மிரட்டினார். அவரது உத்தரவின்பேரில்தான் போலீசார் இப்படி நடந்து கொண்டனர். இதனால் இந்த வழக்கில் உயர் அதிகாரிகளுக்கு தொடர்பு உள்ளதால், சிபிசிஐடி போலீஸ் விசாரணை முறையாக நடைபெறவில்லை. வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி தொழிலதிபர் ராஜேஷ், சென்னை  உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அதேபோல் தங்களுக்கு எதிரான  வழக்கை ரத்து செய்யக் கோரி குற்றம் சாட்டப்பட்ட சிவகுமார் உள்ளிட்ட  போலீசாரும் மனுதாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் நீதிபதி  இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. தொழிலதிபர் சார்பில் வழக்கறிஞர் விஜயேந்திரன் ஆஜராகி வாதிட்டார்.

வழக்கை விசாரித்த நீதிபதி,  அலகாபாத் உயர் நீதிமன்ற உத்தரவின்படி மாநில போலீசாருக்கு எதிரான வழக்கை  மாநில போலீசார் விசாரிக்க முடியாது. எனவே, இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற முகாந்திரம் உள்ளது என்று கருத்து தெரிவித்து இரு தரப்பு மனுக்கள் மீதான  தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார். இந்நிலையில் இந்த வழக்கில் நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். அதில், புலன் விசாரணையின்போது சாட்சிகளின் வாக்குமூலத்தில் தொழிலதிபரையும் அவரது குடும்பத்தினரையும் கடத்தி செங்குன்றம் அருகே உள்ள பண்ணை வீட்டில் அடைத்து வைத்தது தெரியவந்துள்ளது. ராஜேஷ் மற்றம் அவரது தாய் அந்த பண்ணை வீட்டில் 5 நாட்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

அப்போது, ராஜேஷின் நண்பரான ரமேஷ் என்பவரிடம் ரூ.1 கோடியே 25 லட்சத்திற்கான நிரப்பாத செக்கை போலீசார் வாங்கியுள்ளனர். பின்னர் ராஜேசை பண்ணை வீட்டிலிருந்து விருகம்பாக்கத்தில் உள்ள ஹாட் ஸ்பீட் செக்யூரிட்டி சிஸ்டம் என்ற நிறுவனத்திற்கு அழைத்து சென்று வலுக்கட்டாயமாக 100 வெற்று பத்திரங்களில் கையெழுத்து பெற்றுள்ளனர். இந்த வழக்கில் கோடிக்கணக்கான பணத்தை குற்றம்சாட்டப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மோசடி செய்துள்ளனர் என்றும் குற்றம் செய்த ஒருவருக்கு தரப்படும் தண்டனையைவிட அதுபோன்ற குற்றத்தை செய்யும் போலீசாருக்கு இருமடங்கு தரவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் பல வழக்குகளில் கூறியுள்ளதாக மனுதாரர் வழக்கறிஞர் வாதிட்டுள்ளார்.  புகார் கொடுத்தவருக்கும் ராஜேசுக்கும் இடையில் சமரசம் ஏற்பட வாய்ப்பிருந்தால் கூட போலீசார் அதற்கு தடையாக இருந்திருப்பார்கள் என்றே இந்த நீதிமன்றம் கருதுகிறது.

முதல் தகவல் அறிக்கையில் குற்றச்சாட்டுகளுக்கு போதிய முகாந்திரம் உள்ளதால் விசாரணையில் குறுக்கிட இந்த நீதிமன்றம் விரும்பவில்லை. இந்த வழக்கில் போலீஸ் உயர் அதிகாரிகள் சம்பந்தப்பட்டுள்ளதால் முழுமையான நீதியை பெற சரியான விதத்தில் விசாரணை நடைபெறாது என்று இந்த நீதிமன்றம் கருதுகிறது. மாநில போலீசார் இந்த வழக்கை விசாரித்தால் சரியான விசாரணையாக இருக்காது. எனவே, இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம் செய்து உத்தரவிடப்படுகிறது. சிபிசிஐடி வழக்கு தொடர்பான ஆவணங்களை சிபிஐயிடம் உடனடியாக ஒப்படைக்க வேண்டும். வழக்கு ஆவணங்கள் கிடைத்ததும் விசாரணையை தொடங்கி 6 மாதங்களுக்குள் இறுதி அறிக்கையை சிபிஐ தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்று கூறியுள்ளார்.

Tags : CBI , Case against police officials transferred to CBI in case of abducting businessman and land grabbing: HC orders
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான...