அந்தமான் அருகே ஏற்பட்டுள்ள காற்றழுத்தத்தால் தமிழகத்தில் மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: அந்தமான் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தென் கிழக்கு  மற்றும் அதை ஒட்டிய மத்திய வங்கக் கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி  இன்று உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, நாளை மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் புயலாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்வு காரணமாக தமிழகத்தில் 26 மாவட்டங்களில்  மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழ்நிலை உருவாகியுள்ளது. அதன் காரணமாக அந்தமான் பகுதியில் ஒரு வளி மண்டல மேல் அடுக்கில் காற்று சுழற்சி உருவாகியுள்ளது.

அத்துடன், தென் கிழக்கு இலங்கைப் பகுதியிலும் வலுவான காற்று சுழற்சி உருவாகியுள்ளதால் குமரிக் கடல் பகுதியில் மழை பெய்யும் வாய்ப்பு உருவாகியுள்ளது. இந்த இரண்டு நிகழ்வின் காரணமாக தமிழகத்தில் நேற்றும் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக நீலகிரியில் 100 மிமீ மழை பதிவாகியுள்ளது. இந்நிலையில், தென்மேற்கு பருவமழை முடிவுக்கு வரவுள்ளதால், தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழ்நிலைகள் உருவாகியுள்ளது. அதன் படி அந்தமான் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தென் கிழக்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று உருவாகும். இது மேலும் மேற்கு- வட மேற்கு திசையில் நகர்ந்து இரண்டு நாட்களில் காற்றழுத்த  தாழ்வு மண்டலமாக வலுவடையும். பின்னர் அடுத்த இரண்டு நாளில் மத்திய மேற்கு பகுதியில் புயலாக மாறும்  என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக தமிழகத்தில், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், பெரம்பலூர், கடலூர், அரியலூர், கரூர், நாமக்கல், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சிவகங்கை, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி,  மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்யும். சென்னையில் பொதுவாக மேகமூட்டம் காணப்படும். நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும். இது தவிர, தென்மேற்கு வங்கக் கடலின் தெற்குப் பகுதிகள், தென் கிழக்கு வங்கக் கடல் பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 65 கிமீ வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் அந்தப குதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.

Related Stories: