×

தமிழகத்தில் நிதி பற்றாக்குறை குறைந்தது: நிதியமைச்சர் பழனிவேல்ராஜன் தகவல்

தமிழகத்தில் நிதிப் பற்றாக்குறையை குறைத்ததால் ஆண்டுக்கு ரூ.1249 கோடி வட்டி தொகையை குறைத்துள்ளோம் என்று நிதி அமைச்சர் பழனிவேல்ராஜன் கூறினார். பேரவையில் 2022-2023ம் நிதி ஆண்டின் கூடுதல் செலவினங்களுக்காக ரூ. 3,796 கோடிக்கு துணை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.  இந்த பட்ஜெட் மீது நடந்த விவாதத்தில் உறுப்பினர்கள்  பேசினர். இதற்கு பதிலளித்து நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாவது: வருவாய் மற்றும் நிதிப் பற்றாக்குறை கூடுதலாக ரூ. 9 ஆயிரம் கோடி குறைந்துள்ளது.

இது கடந்த வருடம் இருந்த 4.61 சதவீத நிதிப் பற்றாக்குறை 2021-2022ம் ஆண்டில் இருந்தது. தற்போது 3.38 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.  ஒன்றிய அரசு அறிவித்த கடன் எல்லைக்குள் மிகவும் குறைவாக  வந்ததால், மாநிலத்தின் சுயமரியாதையையும், இனி வரும் காலத்தில் கடன் வாங்கும் சக்தியையும் கூட்டியுள்ளோம். உலக அளவில்பொருளாதார நெருக்கடி வரும் என்ற அச்சம்  இருப்பதால், இனி வரும் காலங்களில் அதுபோன்ற நெருக்கடி வந்தாலும் தேவையான கடனை வாங்குவதற்கான திறனை தமிழகம் உருவாக்கியுள்ளது. தமிழகத்தில் நிதிப் பற்றாக்குறையை குறைத்ததால் ஆண்டுக்கு ரூ. 1,249 கோடி வட்டி தொகையையும் குறைத்துள்ளோம்.

7 ஆண்டுகள் சரிவிகித பற்றாக்குறையை குறைத்துள்ளோம் என்றால் இது சாதாரண காரியம் அல்ல.  முதல்வர் கொடுக்கின்ற ஆலோசனை மற்றும் பாதுகாப்பின் காரணமாக இது முடிந்தது. தலைவர் மு.க.ஸ்டாலின் மேல் நான் வைத்துள்ள நம்பிக்கை மற்றும் அவர் என்மேல் வைத்துள்ள நம்பிக்கையின் பேரில் 2 உறுதி மொழிகளை என்னால் கொடுக்க முடியும்.  ஒருவேளை உலக பொருளாதார  சரிவு வராமல் இருந்தால், ஒவ்வொரு ஆண்டும் உற்பத்தி சதவீதம் அதிகரிக்கும். பற்றாக்குறை என்பது குறையும்.  ஒருவேளை பொருளாதார சரிவு  வந்தால், நாம் ஏற்கெனவே எடுத்த பாதுகாப்பு நடவடிக்கைகளால்  மற்ற மாநிலங்களை விடவும், ஒன்றிய அரசை விடவும்  தமிழகத்தில் பாதிப்பு வராது. அப்படியே இருந்தாலும் குறைவாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Tamil Nadu ,Finance Minister ,Palanivelrajan , Fiscal deficit reduced in Tamil Nadu: Finance Minister Palanivelrajan informed
× RELATED கழுகுகள் மரணத்துக்கு காரணமாக உள்ள...