சிற்ப கூடத்தில் பஞ்சலோக அம்மன் சிலை திருட்டு: குடந்தை அருகே துணிகரம்

கும்பகோணம்: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் முக்கண்ணன் தெருவில் வசிப்பவர் பாபுராவ் மகன் ராம்குமார் (33). மாற்றுத்திறனாளியான இவர் கும்பகோணம் அடுத்த, வளையப்பேட்டை ஊராட்சி, அக்ரஹாரம் தெருவில் உள்ள ஜெயலட்சுமி நகரில் கடந்த 6 வருடங்களாக சிற்ப சாலை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் சென்னையில் உள்ள ஒரு கோயிலுக்காக கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள இரண்டரை அடி உயர பஞ்சலோக காமாட்சி அம்மன் சிலை செய்வதற்காக ஆர்டர் பெற்றார். பணிகள் நிறைவு பெற்று கோயிலுக்கு அனுப்ப சிலை தயார் நிலையில் இருந்தது.

இந்நிலையில் கடந்த 12ம் தேதி இரவு பணிகளை முடித்துவிட்டு வழக்கம் போல் ராம்குமார் வீட்டுக்கு சென்றார். பின்னர் மறுநாள் காலை சிற்ப சாலையை திறந்து பார்த்தபோது அந்த காமாட்சி அம்மன் சிலை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இது குறித்து கும்பகோணம் தாலுகா போலீசில் ராம்குமார் புகார் மனு அளித்தார். அதன்பேரில் தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: