அவசர காலங்களில் உதவுவதற்காக தேசிய நெடுஞ்சாலையில் ‘ஹெலிபேடு’ வசதி: ஒன்றிய விமான துறை அமைச்சர் தகவல்

புதுடெல்லி: அவசர காலங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக தேசிய நெடுஞ்சாலைகளில் ஹெலிபேடு வசதி ஏற்படுத்தப்படும் என்று ஒன்றிய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கூறினார். டெல்லியில் சிவில் விமான போக்குவரத்து அமைச்சக பிரதிநிதிகளின் மாநாட்டில் ஒன்றிய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா பேசுகையில், ‘நாடு முழுவதும் புதியதாக கட்டமைக்கப்படும் தேசிய நெடுஞ்சாலைகளில் ஹெலிகாப்டர் தரையிறங்க வசதியாக ஹெலிபேடுகள் வசதிகள் செய்யப்படும்.

நெடுஞ்சாலைகளில் ஏற்படும் விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்காகவும், அவசர காலங்களில் உதவுவதற்காகவும் இந்த ஹெலிபேடுகள் உதவும். இதற்காக சாலை போக்குவரத்து அமைச்சகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். மேற்குவங்கம், டெல்லி, பஞ்சாப் ஆகிய 8 மாநிலங்களில் விமான இணைப்பை எளிதாக்க வசதியாக, ஏர் டர்பைன் எரிபொருள் மீதான வாட் வரியை மாநில அரசுகள் குறைக்க வேண்டும். அவ்வாறு செய்தால், இந்த எட்டு மாநிலங்களுக்கும் விமான இணைப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கொரோனா காலத்திற்கு முன்பு இந்தியாவில் தினமும் 4 லட்சம் பயணிகள் விமானத்தில் பயணித்தனர். இந்த சாதனை தற்போது இரண்டு முறை முறியடிக்கப்பட்டுள்ளது. தற்போது 4.1 லட்சம் பயணிகள் வரை எட்டியுள்ளோம்’ என்றார்.

Related Stories: