×

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியினை நிறைவேற்றிய அலுவலர்களைப் பாராட்டி சான்றிதழ்களை வழங்கினார் தேர்தல் அலுவலர் ககன்தீப் சிங் பேடி

சென்னை: சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்றத் தொகுதிகளில் 80% முதல் 100% வரை வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியினை நிறைவேற்றியுள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்களைப் பாராட்டி மாவட்ட தேர்தல் அலுவலர்/முதன்மைச் செயலாளர்/ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி சான்றிதழ்களை வழங்கினார்.  

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி, வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நாடு முழுவதும் கடந்த 01.08.2022 அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில், சென்னை மாவட்டத்தில் உள்ளடக்கிய 16 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்காளர் அடையாள அட்டையினை ஆதார் எண்ணுடன் இணைப்பது தொடர்பான சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது.  

சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டமன்றத் தொகுதிகளில் 38,92,457 வாக்காளர்கள் உள்ளனர்.
வாக்காளர்களின் ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள எண்ணுடன் இணைக்கும் பணிகள்  3750 வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  

இந்த வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியினை மேற்கொண்டு வருகின்றனர்.  இதுவரை 7,45,662 வாக்காளர்கள் தங்களுடைய ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள எண்ணுடன் இணைத்துள்ளனர்.

எனவே, வாக்காளர்கள் அனைவரும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடுவீடாக வரும்பொழுது, அவர்களுக்கு முழு ஒத்துழைப்பினை வழங்கி தங்களுடைய வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
    
சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டமன்றத் தொகுதிகளில் டாக்டர் இராதாகிருஷ்ணன் நகர், பெரம்பூர் மற்றும் துறைமுகம் சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் சிறப்பாகச் செயல்புரிந்துள்ளனர்.  

சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்றத் தொகுதிகளில் 80% முதல் 100% வரை வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியினை நிறைவேற்றியுள்ள 12 வாக்குச்சாவடி நிலை அலுவலர்களை கௌரவிக்கும் பொருட்டு அவர்களின் பணியினைப் பாராட்டி மாவட்ட தேர்தல் அலுவலர்/முதன்மைச் செயலாளர்/ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி 18.10.2022 அன்று சான்றிதழ்களை வழங்கினார்.  

இந்நிகழ்ச்சியில் கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர்/துணை ஆணையாளர் (வருவாய் (ம) நிதி) விஷூ மஹாஜன், மாவட்ட வருவாய் அலுவலர் (தேர்தல்) குலாம் ஜீலானி பாபா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Electoral Officer ,Gagandeep Singh Bedi , Electoral Officer Gagandeep Singh Bedi felicitated the officers who completed the task of linking the Aadhaar number with the voter ID card and gave certificates.
× RELATED தேசிய சராசரியைவிட தமிழகத்தில்...