தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் மற்றும் சாலை போக்குவரத்து நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள“ஓட்டுநர் கையேட்டை” வெளியிட்டார் அமைச்சர் சிவசங்கர்

சென்னை: போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் இன்று (19.10.2022), தலைமைச்  செயலகத்தில், அனைத்து போக்குவரத்துக் கழகங்களின் ஓட்டுநர்கள் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் மற்றும் சாலை போக்குவரத்து நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள “ஓட்டுநர் கையேட்டை” வெளியிட்டார்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் மக்களின் சேவையைக் கருத்தில் கொண்டு பொது மக்கள் எவ்வித இடர்பாடும், சிரமமும் இன்றி எளிதாக பயணம் செய்யும் பொருட்டு தமிழகம் மற்றும் அண்டைய மாநிலங்களுக்கு நகர மற்றும் புறநகர் பேருந்து சேவையை இயக்கி ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. அதற்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் நாள் ஒன்றுக்கு 20,000க்கும் மேற்பட்ட பேருந்துகளை சராசரியாக 80 லட்சம் கிலோ மீட்டர் இயக்குவதன் மூலம் சுமார் 1.40 கோடி மக்கள் பயன் பெறுகின்றனர்.

அரசு போக்குவரத்து கழகங்களில் பேருந்தினை திறம்பட மற்றும் பாதுகாப்பாக இயக்குவதில் சுமார் 48,000க்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர், அவர்களது பணியில் சிறப்பாக மற்றும் பாதுகாப்பாக விபத்தின்றி செயல்பட அவ்வப்பொழுது சாலை போக்குவரத்து நிறுவனம் மற்றும் போக்குவரத்து கழகங்கள் மூலம் புத்தாக்க பயிற்சி வருடம் முழுவதும் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது.

தற்போது, ஓட்டுநர்கள் ஏற்கனவே அறிந்த விஷயங்களை நினைவூட்டும் விதமாக, வாகனங்கள் ஓட்டும் விதம், பேருந்துகள், சாலைகள் மற்றும் ஓட்டுநர்களின் பொதுவான தவறுகள், அபாயகரமான நடத்தை மற்றும் அவற்றை நிர்வகித்தல், பாதுகாப்பான இயக்கம், எரிபொருள் சிக்கனம், உடல் நலம் மற்றும் மனநலம், தொழில் முறை இன்னல்கள் மற்றும் வாகன பராமரிப்பு பற்றி அறிந்துகொள்ளும் பொருட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் மற்றும் சாலை போக்குவரத்து நிறுவனம் இணைந்து ஓட்டுநர் கையேடு ஒன்று வடிவமைத்துள்ளது. இக்கையேடானது மேற்கூறிய தகவல்களை உள்ளடக்கி எளிதாக புரியும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அனைத்து போக்குவரத்துக் கழகங்களின் ஓட்டுநர்கள் பயன்பெறும் வகையில் இன்று (19.10.2022) போக்குவரத்து துறை அமைச்சர் தலைமைச்  செயலகத்தில், ஓட்டுநர் கையேட்டை வெளியிடும் விதமாக, மாநகர போக்குவரத்து மற்றும் அரசு விரைவு போக்குவரத்துக் கழகங்களின் 10 ஓட்டுநர்களுக்கு ஓட்டுநர் கையேட்டை வழங்கினார். அனைத்து போக்குவரத்துக் கழகங்கள் தங்கள் பணிமனைகளின் கீழ் உள்ள பகுதிக்கு ஏற்ப முக்கிய குறிப்புகள் மற்றும் தொலைபேசி எண்களை உள்ளடக்கி தனித்தனியாக அச்சிட்டு அனைத்து ஓட்டுநர்களுக்கும் வழங்குவர்.

இந்நிகழ்ச்சியில் போக்குவரத்து துறை அரசு முதன்மைச் செயலாளர் டாக்டர். கே. கோபால், இ. ஆ.ப., மற்றும் துறை உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Related Stories: