கள்ளக்காதலி வீட்டில் கணவர் தஞ்சம்; 2 குழந்தைகளுடன் மனைவி தற்கொலை முயற்சி: வியாசர்பாடியில் பரபரப்பு

பெரம்பூர்: வியாசர்பாடியில் கள்ளக்காதலி வீட்டில் கணவர் தஞ்சம் அடைந்ததால் மனமுடைந்த மனைவி, 2 குழந்தைகளுக்கும் தூக்க மாத்திரை கொடுத்து தானும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. சென்னை வியாசர்பாடி, கஸ்தூரிபாய் காந்தி நகரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (45). இவருக்கு மனைவி ஜெயலட்சுமி (40), தருண் (13), பூபேஸ்வரன் (8) என்ற 2 மகன்கள் உள்ளனர். இதில், அங்குள்ள பள்ளியில் தருண் 8ம் வகுப்பும், பூபேஸ்வரன் 3ம் வகுப்பும் படித்து வருகின்றனர். இதற்கிடையே வியாசர்பாடியை சேர்ந்த கவுதமி என்ற பெண்ணுடன் பாலசுப்பிரமணியனுக்கு நெருங்கிய நட்பு ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது.

இதனால் கவுதமி வீட்டுக்கு பாலசுப்பிரமணியன் அடிக்கடி சென்று ஜாலியாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதை மனைவி ஜெயலட்சுமி பலமுறை கண்டித்தும், அவர் திருந்தாமல் கள்ளக்காதலியிடம் தஞ்சமடைந்துள்ளார். இதுகுறித்து எம்கேபி நகர் அனைத்து மகளிர் போலீசில் கடந்த 3ம் தேதி ஜெயலட்சுமி புகார் அளித்துள்ளார். இப்புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பாலசுப்பிரமணியனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதற்கிடையே, கடந்த 12ம் தேதி ஜாமீனில் வெளிவந்த பாலசுப்பிரமணியன், தனது குடும்பத்தை மறந்து, கவுதமி வீட்டிலேயே தஞ்சமடைந்துள்ளார்.

வீட்டுக்கு வரும்படி மனைவி ஜெயலட்சுமி போனில் அழைத்தும் வரவில்லை. இந்நிலையில், நேற்றிரவு 11 மணியளவில் ஜெயலட்சுமியின் வீட்டுக்கு கள்ளக்காதலி கவுதமி வந்து தகாத வார்த்தைகளில் திட்டி சண்டை போட்டுவிட்டு சென்றுள்ளார். இந்நிலையில், தன்னை கள்ளக்காதலி வந்து திட்டி சண்டை போட்டதால் மனமுடைந்த ஜெயலட்சுமி, தனது 2 மகன்களுக்கும் தூக்க மாத்திரை தந்து சாப்பிட வைத்து, தானும் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். பின்னர் மேல்மாடியில் வசிப்பவர் கீழே வந்து பார்த்தபோது, கீழ்வீட்டில் இருந்த ஜெயலட்சுமி மற்றும் 2 மகன்களும் மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சியானார்.

பின்னர் சுயநினைவின்றி கிடந்த 3 பேரையும் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ஜெயலட்சுமி மற்றும் அவரது 2 மகன்களுக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் 8 வயதான பூபேஸ்வரன் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. இப்புகாரின்பேரில் வியாசர்பாடி இன்ஸ்பெக்டர் சதீஷ் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஜெயலட்சுமியின் கணவர் பாலசுப்பிரமணியன் மற்றும் அவரது கள்ளக் காதலி கவுதமி ஆகியோரிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Related Stories: