விஷம் கலந்த குளிர்பானம் குடித்து மாணவன் உயிரிழந்த சம்பவத்தில் சிபிசிஐடி விசாரணை-உடலை வாங்க குடும்பத்தினர் மறுப்பு

நாகர்கோவில் : களியக்காவிளை அருகே பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்த உள்ளனர். குமரி மாவட்டம் களியக்காவிளை அருகே உள்ள மெதுகும்மல் பகுதியை சேர்ந்தவர் சுனில். இவரது மகன் அஸ்வின் (11). அதங்கோடு தனியார் பள்ளியில், 6ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த இரு வாரங்களுக்கு முன் திடீரென அஸ்வினுக்கு காய்ச்சல் வந்து வயிற்று வலியும், வாந்தியும் ஏற்பட்டது. ஜீரண கோளாறு, மூச்சு திணறலும் ஏற்பட்டு மிகவும் சிரமப்பட்டு வந்தான்.

நாக்கு பகுதியும் வெந்தது போல் மாறியது. உடனடியாக நெய்யாற்றின்கரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுவனுக்கு வயிற்று பகுதியை ஸ்கேன் செய்து பார்த்தனர். அப்போது தான், வாயில் இருந்து குடல் வரை வெந்து இருந்தது தெரிய வந்தது. ஆசிட் போன்று ஏதோ திரவத்தை குடித்ததால் இந்த பாதிப்பு வந்திருக்கலாம் என டாக்டர்கள் கூறினர். மேலும் சிறுநீரகமும் செயல் இழந்த நிலையில் இருந்தது. தொடர்ந்து டயாலிசிஸ் செய்யப்பட்டது.

இது குறித்து மாணவன், தனது பெற்றோரிடம் கூறுகையில், கடந்த 24ம் தேதி காலாண்டு தேர்வு முடிந்த அன்று வீட்டுக்கு வருவதற்கு முன், பள்ளியின் கழிவறைக்கு சென்றதாகவும், அந்த பகுதியில் நின்ற பள்ளி சீருடை அணிந்திருந்த மற்றொரு மாணவன், வலுக்கட்டாயமாக குளிர்பானத்தை கொடுத்து குடிக்க செய்ததாகவும் கூறினான். இதை கேட்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். அந்த குளிர்பானத்தில் தான் ஆசிட் கலந்து இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இது தொடர்பாக மாணவன் அஸ்வினின் தாயார் களியக்காவிளை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பள்ளியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. மற்றும் ஊர் பொதுமக்கள் அஸ்வினுக்கு நேர்ந்த சம்பவம் குறித்து விசாரணை கமிஷன் அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் கலெக்டர், எஸ்.பி.க்கு மனு அளித்தனர்.

இந்த நிலையில் நெய்யாற்றின் கரையில் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்த அஸ்வின் நேற்று முன் தினம் மாலை  பரிதாபமாக இறந்தான். இது குறித்து அறிந்ததும் அவனது பெற்றோர், உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மாணவன் அஸ்வின் இறந்த தகவல் அறிந்ததும் ஊர் பொதுமக்களும் திரண்டனர். இதனால் அதங்கோடு, மெதுகும்மல் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர். இதற்கிடையே நேற்று மதியம் 3.15 மணியளவில் மாணவன் அஸ்வின் உடல், நெய்யாற்றின்கரை மருத்துவமனையில் இருந்து கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு வரப்பட்டது. அப்போது அங்கு வந்த மாணவனின் உறவினர்கள் பிரேத பரிசோதனை நடந்தாலும் உடலை வாங்க மாட்டோம் என கூறினர். இதையடுத்து டி.எஸ்.பி. நவீன்குமார், இன்ஸ்பெக்டர்கள் ஜெயலெட்சுமி, திருமுருகன் மற்றும் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் பேச்சு வார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை. இதையடுத்து உறவினர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். மாணவன் அஸ்வின் உடல் பிரேத பரிசோதனை அறையில் வைக்கப்பட்டது.

இதற்கிடையே மாணவன் மரணம் தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற உள்ளது. இது தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் சிபிசிஐடி போலீசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு விரைவில் உத்தரவு வரும் என போலீசார் கூறி உள்ளனர். சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் பார்வதி தலைமையில் இது தொடர்பான விசாரணை நடத்தப்பட உள்ளது. இது பற்றி போலீசார் கூறுகையில், கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி விடுதியில் நடந்த மாணவியின் மரண சம்பவத்துக்கு பின் பள்ளி, விடுதியில் நடக்கும் மாணவ, மாணவிகள் மரணம் தொடர்பான வழக்கில் சிபிசிஐடி போலீசாரும் விசாரணை நடத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி மாணவன் அஸ்வின் மரணம் தொடர்பாக சிபிசிஐடி போலீசாரும் விசாரணை நடத்த உள்ளனர் என்றனர்.

குற்றவாளிகளை கைது செய்ய கோரிக்கை

கருங்கல்: ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. தமிழக முதலமைச்சரிடம் வழங்கியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, மெதுகும்மல் ஊராட்சி, அதங்கோடு, அனந்தநகர் என்னும் இடத்தில் செயல்பட்டு தனியார் உயர்நிலை பள்ளியில்   6ம் வகுப்பு பயின்று வந்த மாணவன் அஸ்வின் கடந்த 24-09-2022 அன்று மதியம் பள்ளி வளாகத்தில் வைத்து  குளிர்பானத்தில் திராவகம் ஆசிட் கலந்து மர்ம நபர்களால் கொடுக்கப்பட்ட குளிர்பானத்தை குடித்த மாணவன் அஸ்வின் சிகிட்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதற்கு காரணமான சமூக விரோதிகளை உடனடியாக காவல்துறை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். முதலமைச்சர் இக்கடிதம் மீது தனி கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க ஆவன செய்யவேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

3 பேர் கொண்ட  குழு பிரேத பரிசோதனை

உயிரிழந்த மாணவன் அஸ்வின் உடல் நேற்று மாலை, கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. டாக்டர்கள் ராஜேஷ், பெஞ்சமின், சுந்தரமூர்த்தி ஆகியோர் கொண்ட குழு பிரேத பரிசோதனை நடத்தியது. இந்த பிரேத பரிசோதனை வீடியோ பதிவும் செய்யப்பட்டது. உறவினர்கள் உடலை வாங்க மறுத்து சென்று விட்டதால், பிரேத பரிசோதனை முடிந்து உடல், பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.

காங். ஆர்ப்பாட்டம்

களியக்காவிளை: மெதுகும்மல் பகுதியை சேர்ந்த மாணவன் உயிரிழந்த விவகாரத்தில், உயிர்ப்பலிக்கு காரணமான நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசை வலியுறுத்தியும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க கேட்டும் குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் அதங்கோடு ஜங்ஷனில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் டாக்டர் பினுலால் சிங் தலைமை வகித்தார்.

மாநில மீனவரணி செயலாளர் ஜார்ஜ் ராபின்சன் முன்னிலை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் பால்ராஜ், மாவட்ட கவுன்சிலர்கள் லூயிசாள், செலின் மேரி, குழித்துறை நகர தலைவர் அருள்ராஜ், வட்டார தலைவர்கள் மோகன்தாஸ்,  கிறிஸ்டோபர், பால்ராஜ், மாவட்ட பொதுச்செயலாளர் கோபன், இளைஞர் காங்கிரஸ் தலைவர் திபாகர் மற்றும் நூற்றுக்கணக்கான கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தின் போது,  உயிரிழந்த மாணவன் குடும்பத்தினருக்கு நீதி வேண்டும்,  மாணவனை இழந்த குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க வேண்டும்  என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டம் காரணமாக அதங்கோடு பகுதியில் அதிகளவில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

Related Stories: