×

தறிகெட்டு ஓடிய சொகுசு கார் தடுப்பில் மோதி கவிழ்ந்தது அண்ணன், தம்பி உள்பட 3 பேர் உடல் நசுங்கி சாவு: மேலும் இருவர் படுகாயம், குன்றத்தூர் அருகே பயங்கரம்

சென்னை: வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் நேற்று காலை தறிகெட்டு ஓடிய சொகுசு கார் ஒன்று, தடுப்பு கம்பிகளை உடைத்துக்கொண்டு  பள்ளத்தில் கவிழ்ந்து நொறுங்கியதில் தொழிலதிபர்களான அண்ணன், தம்பி உள்பட 3 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இருவர் படுகாயம் அடைந்தனர். சென்னை வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் குன்றத்தூர் அடுத்த மலையம்பாக்கம் பகுதியில் நேற்று காலை அதிவேகமாக சென்று கொண்டிருந்த கார் ஒன்று திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர இரும்பு தடுப்பு கம்பி மீது பலமாக மோதியது. இதில், மோதிய வேகத்தில் கார் எரிந்து கொண்டே, அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.  இதில், காரில் பயணம் செய்தவர்கள் உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தனர்.

இதனை கண்டதும் அருகில் உள்ள பொதுமக்கள் மற்றும் அந்த வழியாக சென்ற மற்ற வாகன ஓட்டிகள் உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டனர். மேலும், இதுகுறித்து  பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்துசென்ற போலீசார் காரில் சிக்கி, உயிருக்கு போராடிய 2 பேரை மீட்டனர். அவர்களை சிகிச்சைக்காக பூந்தமல்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், 3 பேர் காரின் உள்ளே இடிபாடுகளில் சிக்கி இறந்த நிலையில் இருப்பது தெரியவந்தது. அவர்களது சடலங்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், விபத்தில் சிக்கியவர்கள் கும்மிடிப்பூண்டியை சேர்ந்த சகோதரர்கள் ரமேஷ் பாபு, சுரேஷ் பாபு என்பது தெரியவந்தது.

தொழிலதிபர்களான இவர்கள், இருவரும் அதிமுகவை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. மேலும், இவர்களுக்கு மதுராந்தகம் அடுத்த வேடந்தாங்கல் பகுதியில் சொந்தமாக பொக்லைன் மற்றும் ஜேசிபி இயந்திரங்கள் உள்ளன. அவற்றை வாடகைக்கு விட்டு வந்த நிலையில், அவைகள் பழுதாகி உள்ளது. அதை சரி செய்வதற்காக சென்னை, பூந்தமல்லியில் இருந்து மெக்கானிக்கை அழைத்துச் சென்று, பழுதடைந்த வாகனத்தை சரி செய்துள்ளனர். மீண்டும் மெக்கானிக்கை பூந்தமல்லியில் இறக்கி விடுவதற்காக, ரமேஷ் பாபு மற்றும் அவரது சகோதரர் சுரேஷ்பாபு உள்ளிட்ட 5 பேர் காரில் வந்துள்ளனர்.

இந்நிலையில் தான் கார் மலையம்பாக்கம் பகுதியில் வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர இரும்பு தடுப்பில் மோதி தீப்பிடித்து எரிந்து பள்ளத்தில் கவிழ்ந்ததில் அண்ணன் தம்பிகள் ரமேஷ் பாபு, சுரேஷ் பாபு மற்றும் சுதாகர் உள்ளிட்ட மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளனர். மேலும், இவர்களுடன் வந்த வெங்கடேசன், ராஜவேலு ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் ஏற்பட்ட விபத்தில் அண்ணன், தம்பி உள்ளிட்ட 3 பேர் ஒரே நேரத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Tags : Padugayam ,Kunradthur , 3 persons, including brother and sister, were crushed to death when a luxury car hit a barrier and overturned.
× RELATED பைக் சாகசத்தில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் பரிதாப பலி