மெரினா கடற்கரைக்கு வரவழைத்து கத்திமுனையில் தொழிலதிபரை கடத்தி ரூ.25 கோடி மதிப்பு சொத்து அபகரிப்பு: ரவுடிகள் மூலம் வீடியோ காலில் குடும்பத்தினருக்கு மிரட்டல், பெண் கவுன்சிலர் உள்பட 10 பேர் மீது போலீஸ் வழக்கு பதிவு

சென்னை: மெரினா கடற்கரைக்கு தொழிலதிபரை வரவழைத்து கத்திமுனையில் கடத்தி ரூ.25 கோடி மதிப்புள்ள சொத்தை எழுதி வாங்கிய பெண் கவுன்சிலர் உள்பட 10 பேர் மீது மெரினா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொழிலதிபரின் குடும்பத்தினரை ரவுடிகள் மூலம் வீடியோ காலில் பேச வைத்து மிரட்டி கையெழுத்து வாங்கியதும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. சென்னை சோழிங்கநல்லூர் பகுதியை சேர்ந்தவர் அமர்ராம் (53), தொழிலதிபரான இவர், அதே பகுதியில் அடகுகடை நடத்தி வருகிறார். கடந்த 2017ம் ஆண்டு நாவலூர் பகுதியில் உள்ள 58 சென்ட் நிலத்தை கிருஷ்ணமூர்த்தி என்பவரிடம் ரூ.60 லட்சத்திற்கு வாங்கினார். பிறகு 2018ம் ஆண்டு நிலத்திற்கான முழு தொகையும் கொடுத்து பத்திரப்பதிவு அலுவலகத்தில் கிரயம் செய்துள்ளார்.

இதற்கிடையே, கிருஷ்ணமூர்த்திக்கும் அவரது சகோதரர் மனோகரன் என்பவருக்கும் இடையே சொத்து பிரச்னை இருந்துள்ளது. இதனால் மனோகரன் தனது சகோதரர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் நிலத்தை வாங்கிய தொழிலதிபர் அமர்ராம் மீது செங்கல்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 58 சென்ட் நிலம் தொடர்பான வழக்கு தற்போது நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

இந்நிலையில், தொழிலதிபர் அமர்ராம் மெரினா காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் பரபரப்பு புகார் ஒன்று அளித்தார். அதில், தனக்கு தெரிந்த வழக்கறிஞர் செந்தமிழ் என்பவர் கடந்த 16ம் தேதி பிரச்னைக்குள்ளான நிலம் தொடர்பாக பேச வேண்டும் என்று மெரினா கடற்கரைக்கு அழைத்தார். அதன்படி நான், எனது பைக் மூலம் மெரினா கலங்கரை விளக்கம் சென்றேன். அப்போது காரில் வந்த அடையாளம் தெரியாத 4 பேர் திடீரென கத்தியை காட்டி மிரட்டி என் கண்களை கட்டி காரில் திருப்போரூர் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு கடத்தி சென்றனர்.

ஏற்கனவே, அங்கு காத்திருந்த எனக்கு நிலத்தை விற்பனை செய்த கிருஷ்ணமூர்த்தி மற்றும் கவுன்சிலரான அவரது மனைவி விமலா உள்பட 10 பேர் என்னை மிரட்டி கத்தியால் உடலில் கீறி, கடந்த 2017ம் ஆண்டு அவர்களிடம் இருந்து வாங்கிய தற்போது ரூ.25 கோடி சந்தை மதிப்பிலான நிலத்தின் கிரய ஒப்பந்த ரத்து சான்றிதழில் கையெழுத்து பெற்றுக் கொண்டு மீண்டும் காரில் ஏற்றி வந்து பாதி வழியில் தள்ளிவிட்டு சென்றனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து எனது சொத்தை மீட்டு தர வேண்டும் என கூறியிருந்தார். புகாரின்படி, மெரினா போலீசார் சிசிடிவி பதிவுகளுடன் விசாரணை நடத்தினர். அதில், சம்பவத்தன்று தொழிலதிபர் அமர்ராமை ஒரு கும்பல் கத்திமுனையில் காரில் கடத்தி சென்றது தெரியவந்தது. நிலத்தை விற்பனை செய்த கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவரது சகோதரர் மனோகரன் ஆகியோர் தொழிலதிபருக்கு விற்பனை செய்யப்பட்ட 58 சென்ட் நிலம் தற்போது ரூ.25 கோடிக்கு போவதால், சகோதரர்கள் இருவரும் கூட்டு சேர்ந்து அந்த இடத்தை கட்டுமான நிறுவனம் நடத்தும் ஒருவருக்கு விற்பனை செய்து பணத்தை பங்கு போட முடிவு செய்தது தெரியவந்தது.

மேலும், அந்த நிலத்திற்கான முழு அதிகாரத்தை பில்டருக்கு வாங்க வேண்டி கிருஷ்ணமூர்த்தி தனது ஆட்களை வைத்து தொழிலதிபர் அமர்ராமை கடத்தி சார் பதிவாளர் அலுவலகத்தில் வைத்து மிரட்டி கையெழுத்து பெற்றதும் விசாரணையில் தெரியவந்தது. அப்போது, தொழிலதிபர் அமர்ராம் கையெழுத்து போடவில்லை என்றால் குடும்பத்தை கொன்றுவிடுவோம் என கூறி வீடியோ கால் மூலம் அவரது வீட்டின் அருகே இருந்த ரவுடிகள் மூலம் மிரட்டியதும் தெரியவந்தது. இதை தொடர்ந்து மெரினா போலீசார் தொழிலதிபர் அமர்ராமை கடத்தியதாக கிருஷ்ணமூர்த்தி, அவரது மனைவியும் கவுன்சிலருமான விமலா, செந்தமிழ், மனோகரன் உள்பட 10 பேர் மீது சட்டவிரோதமாக ஒன்று கூடுதல், சிறை பிடித்து சொத்துகளை அபகரித்தல், காயம் ஏற்படுத்துதல், கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: