பிசிசிஐ புதிய தலைவராக ரோஜர் பின்னி

மும்பை: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) 36வது தலைவராக, முன்னாள் ஆல் ரவுண்டர் ரோஜர் பின்னி தேர்வாகி உள்ளார். பிசிசிஐ தலைவராக இருந்த  முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, செயலாளர் ஜெய் ஷா, பொருளாளர் அருண் துமல் உள்ளிட்ட நிர்வாகிகளின் பதவிக் காலம் முடிந்ததையடுத்து  தேர்தல் அறிவிக்கப்பட்டது. தலைவர் பதவிக்கு கங்குலி மீண்டும் போட்டியிடவில்லை. முன்னாள் ஆல் ரவுண்டர் ரோஜர் பின்னி மட்டும் தலைவர் பதவிக்கு மனுத்தாக்கல் செய்தார். செயலாளர் பதவிக்கு ஜெய் ஷா மீண்டும் களம் கண்டார். இப்படி மற்ற பதவிகளுக்கும்  ஒருவருக்கு மேல் யாரும் போட்டியிடவில்லை. இந்நிலையில், மும்பையில் நேற்று நடந்த 91வது வருடாந்திர பொதுக் குழு கூட்டத்தில் ரோஜர் பின்னி தலைவராகவும்,  ஜெய் ஷா மீண்டும் செயலாளராகவும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

ஏற்கனவே பொருளாளராக இருந்த  அருண் துமல் இப்போது பிரிஜேஷ் படேலுக்கு பதில்   ஐபிஎல் போட்டியின் தலைவராக  நியமிக்கப்பட்டுள்ளார். துமலுக்கு பதிலாக அவிஷேக் டால்மியா பொருளாளராகி உள்ளார். நேற்றைய கூட்டத்தில் கங்குலியும் பங்கேற்றார். மகளிர் ஐபிஎல் போட்டியை நடத்துவது உட்பட பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டன. உலக கோப்பை நாயகன் 1983ல் உலக கோப்பையை வென்ற கபில்தேவ் தலைமையிலான இந்திய அணியில் விளையாடியவர் பின்னி (67). ஸ்காட்லாந்தை பூர்வீகமாக கொண்ட  ஆங்கிலோ இந்தியரான இவர் பெங்களூரில் பிறந்து வளர்ந்தவர். இப்போது கர்நாடகா கிரிக்கெட் சங்க தலைவராகவும் உள்ளார். இந்திய அணிக்காக 27 டெஸ்டில் 830 ரன் (அதிகம் 83*, சராசரி 23.05), 47 விக்கெட் எடுத்துள்ளார்.

 72 ஒருநாள் போட்டியில் 629 ரன் (அதிகம் 57, சராசரி 16.12), 77 விக்கெட் எடுத்துள்ளார். குறிப்பாக, 1983 உலக கோப்பையில் இவர்தான் அதிகபட்ச விக்கெட் (18) எடுத்தவர். பின்னியின் தந்தை ரயில்வே  கார்டாக பணியாற்றியவர். இவரது மகன் ஸ்டூவர்ட் பின்னியும் இந்திய அணிக்காக சர்வதேச போட்டிகளில் விளையாடி உள்ளார். ஓய்வுக்கு பிறகு  யு19 இந்திய அணி,   பெங்கால் அணி உட்பட பல்வேறு அணிகளின் பயிற்சியாளர்,  தேர்வுக்குழு உறுப்பினர் என பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.

* ஐசிசி தலைவர்...

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக இருக்கும் பார்கிளே  பதவிக்காலமும் விரைவில் முடிகிறது. அந்த பதவிக்கான முன்மொழிவை  நாளைக்குள் அந்தந்த நாட்டு கிரிக்கெட் அமைப்புகள் பரிந்துரை செய்ய வேண்டும். போட்டியிருந்தால் தேர்தல் நடைபெறும். கங்குலியை  ஐசிசி தலைவர் பதவிக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்று  மேற்கு வங்க முதல்வர் மம்தா உட்பட பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.

Related Stories: