×

துப்பாக்கி சூடு சம்பவத்தில் அப்பட்டமாக விதிமீறல் நடந்துள்ளது கலெக்டர், ஐஜி உட்பட 17 பேர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்: சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கையில் தகவல்

சென்னை: ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கு எதிராக 100வது நாள் நடந்த போராட்டத்தின்போது, போராட்டக்காரர்கள் மீது கண்மூடித்தனமாக போலீஸ் நடத்திய துப்பாக்கி சூட்டிற்கு உத்தரவிட்ட ஐஜி சைலேஷ்குமார் யாதவ் உட்பட 17 அதிகாரிகள் மீது தமிழக அரசு கிரிமினல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் வைக்கப்பட்ட விசாரணை அறிக்கையில் நீதிபதி அருணா ஜெகதீசன் பரிந்துரை செய்துள்ளார். தமிழக சட்டப்பேரவை 2 நாள் மழைக்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. முதல் நாளில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கு எதிராக 100 வது நாள் போராட்டத்தின்போது கடந்த 22.5.2018ம் தேதி துப்பாக்கி சூடு நடந்தது. இந்த துப்பாக்கி சூடு குறித்து தமிழக அரசு சார்பில் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. விசாரணை ஆணையத்தின் அறிக்கை நேற்று சட்டப்பேரவையில் வைக்கப்பட்டது.

அதன் விபரம் வருமாறு: தூத்துக்குடியில் 22.5.2018 மற்றும் 23.5.2018 ஆகிய 2 நாட்கள் நடந்த துப்பாக்கி சூட்டின் விளைவாக ஏற்பட்ட உயிரிழப்பு மற்றும் காயங்கள் பொறுத்து ஒவ்வொரு சந்தர்ப்ப சூழ்நிலையையும் மற்றும் அதன் தொடர்பாக நடந்த சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் மற்றும் பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்து விரிவாக ஆணையம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. துப்பாக்கி பிரயோகம் செய்தததில் ஏதேனும் காவல்துறையினர் மீது வரம்பு மீறல் இருந்ததா? அவ்வாறு இருந்தது என்றால் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்ன? என்று விசாரணை நடத்தப்பட்டது. அதில், முக்கிய சூழ்நிலைகள் மற்றும் சம்பவங்கள், துப்பாக்கி சூடு பிரயோகம் செய்த காவல் துறையினர் மீது நிச்சயமான வரம்பு மீறுதல் இருந்தது என ஆணையம் முடிவுக்கு வர ஏதுவாக உள்ளது.

கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள்ளே நடந்த துப்பாக்கி சூட்டில், 5 போராட்டக்காரர்கள் உயிரிழந்தனர். இறந்தவர்களின் கையில் ஆயுதம் இல்லை. அவர்கள் கல்லெறிதலில் ஈடுபட்டு இருந்திருக்கிறார்கள். காவல்துறையினருக்கு உயிரிழக்கும் வகையிலான அல்லது கொடுங்காயம் அடைவதற்கான உடனடி அச்சுறுத்தல் எதுவும் இருக்கவில்லை. மணிகண்டன் என்ற ஒரு காவலர் தவிர, மற்ற யாருக்கும் காயம் ஏற்படவில்லை. மணிகண்டனுக்கு ஏற்பட்ட காயம் கொடுங்காயமானது,  கல்லெறிதலில் உதடு கிழிந்து சில நாட்கள் சிகிச்சையில் இருந்து இருக்கிறார். காவல் துறையில் பலர் காயமடைந்ததாக கூறி கொண்டாலும் மருத்துவ சான்றுகளின் படி, மிக சாதாரண காயங்களாகவும், சிலருக்கு வெளிப்புற காயங்கள் எதும் இல்லாமலும் இருந்திருக்கிறது.

குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், துப்பாக்கி சூட்டின்போது உயிரிழப்பு ஏற்பட்ட பின்பு தான், தூத்துக்குடி கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள்ளே இருந்து ஒரு சில வாகனங்களும், ஸ்டெர்லைட் ஆலை குடியிருப்புவாசிகளின் வாகனங்களுக்கு ஒரு சில போராட்டக்காரர்கள் தீவைத்துள்ளனர். மாறாக தீ வைக்கப்பட்ட பின்பு துப்பாக்கி சூடு நடைபெறவில்லை. துப்பாக்கி சூட்டின்போது, காவல்துறையினர் போராட்டக்காரர்கள் மீது அபாயகரம் அல்லாத ஆயுதங்களான கண்ணீர் புகை குண்டுகள், தீயணைப்பு வாகனங்களை கொண்டு தண்ணீர் பீய்ச்சி அடித்தல் ஆகியவற்றை உபயோகிப்பதில் கவனம் செலுத்தி இருக்க வேண்டும். அவை எதுவும் எதிர்பார்த்த பயன் தராத பட்சத்தில் குறைந்த அபாயகரம் உள்ள ஆயுதங்களையோ, வெடி மருந்துகளையோ காவல் துறை உபயோகப்படுத்தி இருக்க வேண்டும். ஆனால் காவல்துறையினர் இந்த அணுகுமுறையை கையாளவில்லை.
 
இந்து துப்பாக்கி சூடு சம்பவத்தில் ‘பிஎஸ்ஓ’வில் சொல்லப்பட்டுள்ள விதி அப்பட்டமாக மீறிப்பட்டு இருக்கிறது. இறந்து போனவர்களுக்கு ஏற்பட்ட காயங்கள் அனைத்தும் இடுப்புக்கு மேல் காணப்பட்டிருக்கிறது. ‘பிஎஸ்ஓ’வில் சொல்லப்பட்டுள்ள விதிகளின் படி, இடுப்புக்கு கீழே துப்பாக்கி சூடு பிரயோகம் செய்யப்படவில்லை என்பது விசாரணையின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கி சூடு செய்வதற்கு முன்பு ‘மெகா போன்’ மூலமாக போராட்டக்காரர்களை எச்சரிக்கை செய்யவில்லை. துப்பாக்கி சூடு செய்யப்படும் என்பதை வெளிப்படுத்தும் வகையில் ‘கலவரக்கொடு’ ஏற்றி காண்பிக்கவில்லை. உயர் காவல் துறை அதிகாரிகளுக்கிடையே ஒருங்கிணைப்பு இல்லை.
மாவட்ட ஆட்சியர் வளாகத்துக்குள்ளேயே டிஐஜி கபில் குமார் சராட்கர் மற்றும் எஸ்பி லிங்க திருமாறன் ஆகியோர் உத்தரவின் பேரில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு, உச்சப்பட்ச காவல் துறை அதிகாரியான தென் மண்டல ஐஜி சைலேஷ்குமார் யாதவுக்கு தெரியவில்லை.

அதேபோல், இன்ஸ்பெக்டர் திருமலை உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரென்னீஸ் நடத்திய துப்பாக்கி சூடும் ஐஜிக்கு தெரியவில்லை. அதுதவிர ஐஜி சைலேஷ்குமார் யாதவ் மற்றும் எஸ்பி லிங்க திருமாறன், முதல் நிலை காவலர் சுடலைக்கண்ணுவிற்கு சுடுவதற்கு உத்தரவிட்டது, மற்ற அதிகாரிகளுக்கு தெரியவில்லை. இன்னும் சொல்லப்போனால் டிஐஜியின் கன்மேன் சங்கருக்கு டிஐஜி உத்தரவிட்டதும், ஐஜி சைலேஷ் குமார் யாதவுக்கு தெரியவில்லை. அப்போது தென் மண்டல ஐஜி சைலேஷ்குமார் யாதவ் மாவட்ட ஆட்சியர் வளாகத்திற்குளே இருந்தார். காவல் துறை டிஐஜி கபில் குமார் சராட்கர் அவராகவே அதிகாரத்தை தானாக எடுத்து கொண்டு துப்பாக்கி சூடை நடத்தியிருக்கிறார். இதற்கு காவல்துறை ஐஜி சைலேஷ்குமார் யாதவ் ஒரு விதத்தில் பொறுப்பாகிறார்.

பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கக்கூடிய சாத்தியக்கூறு அதிகம் உள்ளதாக உளவுத்துறை ஐஜி போதிய அளவு எச்சரித்தும் அதற்கேற்றவாறு சூழ்நிலைக்கு ஏற்ப பொருத்தமான உத்திகளை மேற்கொள்ளாதது அவருடைய தவறு.
மாவட்ட ஆட்சியர் வளாகத்துக்குள்ளே நடைபெற்ற முதல் துப்பாக்கி சூட்டில் 5 பேர் பலியானார்கள். அதன் பின்பு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெளியே இன்ஸ்பெக்டர் வந்த வாகனத்தை போராட்டக்காரர்கள் தாக்கக்கூடும் என்று எண்ணி ஐஜி சைலேஷ்குமார் யாதவ் உதவி ஆய்வாளர் சொர்ணமணி என்பவரை வைத்து துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிட்டுள்ளார். அதே சமயத்தில் அதே இடத்தில் முதல் நிலை காவலர் சுடலைக்கண்ணுவை டிஐஜி கபில் குமார் சராட்கர் துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிட்டதும் அதன் மூலம் 3 பேர் பலியானதும் விசாரணையில் உறுதியாகியுள்ளது.

இந்த முக்கியமான நேரத்தில் தூத்துக்குடி மாவட்ட எஸ்பி மகேந்திரனும், திருநெல்வேலி மாவட்ட எஸ்பி அருண்சக்திகுமாரும் துப்பாக்கி சூடு நடைபெற்ற மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் இல்லாமல் மதியம் 1.15 மணி வரை வெளியே இருந்துவிட்டு, தமிழ் தெரியாத, தூத்துக்குடி ஸ்தல விபரம் பற்றி அவ்வளவாக பரிச்சயம் இல்லா காவல்துறை ஐஜி மற்றும் டிஐஜி ஆகியோரை போராட்டத்தை தடுத்துக்கொள்ளும் நிலையை உண்டாக்கிவிட்டார்.  மற்றொரு காவல்துறையினர் தனியார் மருத்துவமனையான ஏவிஎம் மருத்துவமனையில் உள்ளே அத்து மீறி நுழைந்து கண்ணில் பட்டோரையெல்லாம் கண் மண் தெரியாமல் லத்தி, கம்பு கொண்டு தாக்கியுள்ளனர்.

அண்ணாநகரில் கடந்த 23.5.2018ம் அன்று நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு முன்பு ஏற்பட்ட கல்லெறிதலில்  எஸ்பி மகேந்திரனின் தலைக்கவசம் முன் கண்ணாடி உடைக்கப்பட்டதால், சற்று நிலை குலைந்து போனார். மேலும், அவருடைய இடது காலில் கல்லெறிதலால் ரத்த காயம் ஏற்பட்டது. சில இளைஞர்கள் முந்தைய 22ம் தேதி நடந்த துப்பாக்கி சூடு மற்றும் உயிரிழப்பு காரணமாக மனகிளர்ச்சியுற்று தொடர் கல்லெறிதலில் ஈடுபட்டார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.ஆனால் உணர்ச்சி வசப்பட்டு தன்னுடைய கன்மேன் ஸ்டாலினிடம் இருந்த கை துப்பாக்கியை பெற்று மொத்தம் 9 ரவுண்டுக்ள எஸ்பி மகேந்திரன் சுட்டது சரியானது அல்ல. அந்த துப்பாக்கி சுடுதலில் யாரும் காயம் பட்டிருக்க முடியாது  என்று திட்டவட்டமாக கூறமுடியாது. ஏனென்றால் அண்ணாநகரில் சில இளைஞர்களுக்கு துப்பாக்கி சூட்டில் காயம் ஏற்பட்டிருக்கிறது.

காவல்துறையினர் வரம்பு மீறி செயல்பட்டிருக்கின்றனர் என்பது ஆணையத்தின் தீர்க்கமான முடிவாகும். எனவே, காவல்துறை போராட்டக்காரர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்திய ஐஜி, டிஐஜி எஸ்பி, டிஎஸ்பி முதல் காவலர்கள் வரை மொத்தம் 17 பேர் 22, 23 ஆகிய தேதிகளில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு தனித்தனியாகவும், கூட்டாகவும் பொறுப்பாகிறார்கள். எனவே இந்த 17 உயர் அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க இந்த ஆணையம் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்வதாக விசாரணை ஆணைய அதிகாரியான நீதிபதி அருணா ஜெகதீசன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

* உயிருக்கு பயந்து ஓடியவர்கள் மீது துப்பாக்கி சூடு
காவல்துறை உயர் அதிகாரிகள் உத்தரவுப்படி  காவலர்கள், தப்பி ஓடிக்கொண்டிருந்த போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு பிரயோகம் செய்திருக்கிறார்கள். இதை இறந்து போனவர்களின் உடலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து வெளியேறிய விதத்தை வைத்து தெரிந்து கொள்ளலாம். அதாவது இறந்தவர்கள் பின்னந்தலை வழியாக குண்டு துளைத்துள்ளது. சிலருக்கு  முதுகின் பின்பகுதியில் குண்டு துளைத்து இதயம் போன்ற முக்கிய பகுதியை சிதைத்து மார்பின் முன்பகுதி வழியாக வெளியேறியுள்ளது.

* 17 ரவுண்ட் சுட்ட காவலர்
கலெக்டர் அலுவலகத்தில் பிரச்னை நடந்தபோது அந்த இடத்துக்கு எஸ்பி மகேந்திரன் சாவகாசமாக வந்தார். உயரதிகாரியான ஐஜியிடம் எந்த அறிவுரையும் பெறவில்லை. மேலும் காவலர் சுடலைக்கண்ணுவை அழைத்து சென்று  போராட்டக்காரர்கள் மீது தொடர் துப்பாக்கி சூடை நடத்தி இருக்கிறார். போராட்டக்காரர்களை துப்பாக்கியால் சுட காவலர் சுடலைக்கண்ணு விருப்பத்துடனும், ஆர்வத்துடனும் தூத்துக்குடி எஸ்பி மகேந்திரனுடன் சென்றார். அப்போது அவர் நடத்திய துப்பாக்கி சூட்டில் திரேஸ்புரத்தில் பெண் உட்பட 2 பேர் பலியாகியுள்ளனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அங்கும் இங்குமாக நின்று கொண்டிருந்தவர்களை நோக்கிதான் எஸ்.பி. மகேந்திரன் சுட்டார். அதில் காவலர் சுடலைக்கண்ணு மட்டும் துப்பாக்கியால் 17 ரவுண்டுகள் போராட்டக்காரர்கள் மீது சுட்டு இருக்கிறார்.

* 17 அதிகாரிகள் மீது அரசு நடவடிக்கை
தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: ‘நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த பரிந்துரைபடி, காவல்துறை உள்ளிட்ட அதிகாரிகள் அத்துமீறியதை ஏற்று அவர்கள் 17 பேர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். உயிரிழந்தவர்கள் மற்றும் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் ஏற்கனவே வழங்கப்பட்ட நிவாரண உதவியே இறுதியானது. இதை உயர்த்த தேவையில்லை. எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் அந்தந்ததுறைகளுக்கு உத்தரவிடப்படுள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது.

* உளவுத்துறை எச்சரித்தும் நடவடிக்கை எடுக்காத டிஜிபி
தூத்துக்குடி துப்பாக்கி சூடுக்கு 3 நாட்களுக்கு முன்பு உளவுத்துறை ஐஜி சத்யமூர்த்தி, டிஜிபி டி.கே.ராஜேந்திரனை சந்தித்து, தூத்துக்குடி நகரில் மக்கள் அதிகார அமைப்பின் முன்னணியாளர்கள் நடமாட்டம் இருப்பதாகவும், காவல்துறை டிஜிபி அவரது பங்கிற்கு தூத்துக்குடி மாவட்ட எஸ்பியிடமும், திருநெல்வேலி சரக டிஐஜியிடமும் உடனடியாக செல்போனில் ேபசி சூழ்நிலையை தணிக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டி கட்டாயப்படுத்தியுள்ளார். அரிராகவன், வாஞ்சிநாதன் ஆகியோர் போராட்டத்தை தீவிரப்படுத்துவதில் ஈடுபட்டுள்ளார்கள் என்பதை 20ம் தேதி டிஜிபி கவனத்திற்கு உளவுத்துறை ஐஜி கூறியுள்ளார். அதோடு இல்லாமல் ‘க்யூ’ பிாிவு எஸ்பி சில நபர்களின் பெயர் அடங்கிய பட்டியலையும் டிஜிபி கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

உளவுத்துறையின் எச்சரிக்கைப்படி ‘முன்னெச்சரிக்கை கைது’ என போராட்டத்தை தூண்டுபவர்களை அடையாளம் கண்டு நடவடிக்கை ஏன் எடுக்கப்படவில்லை என்ற ஆணையத்தின் கேள்விக்கு, ‘டிஜிபி டி.கே.ராஜேந்திரன்’ அவ்வாறு முன்னெச்சரிக்கை கைது நடவடிக்கையில் ஈடுபட்டால் போராட்டம் மேலும் தீவிரமாகிவிடும் என்று விளக்கம் அளித்துள்ளார். ஆனால் உளவுத்துறை முன்னெச்சரிக்கை படி கைது செய்து இருந்தால், மற்ற போராட்டக்காரர்களுக்கு இது ஒரு அச்சத்தை ஏற்படுத்தி போராட்டத்தில் ஈடுபடுவதை தவிர்க்க ஒரு சரியான நடவடிக்கையாக இருந்திருக்கும். ஆனால் அவ்வாறு செய்திருந்தால் போராட்டம் தீவிரமடைந்திருக்கும் என்ற டிஜிபி டி.ேக.ராஜேந்திரனின் விளக்கம் ஏற்கதக்கதல்ல என்று ஆணையம் தெரிவித்துள்ளது.

* கூடுதல் பாதுகாப்பு வாகனங்கள் தராத டிஐஜி
போராட்ட பாதுகாப்புக்காக தூத்துக்குடி எஸ்பி மகேந்திரன் 5 வஜ்ரா வாகனங்கள், 5 காவல்துறை பேருந்துகள், 10 ஈச்சர் வாகனங்கள், 5 டாடா சுமோ, பொலிரோ வாகனங்கள், 150 தடுப்புகள் மற்றும் 5 கதவு நிலைகளுடன் கூடிய உலோகம் கண்டுபிடிக்கும் கருவிகளை கேட்டிருக்கிறார். கூட்டத்தை கலைப்பதற்காக தண்ணீர் பீச்சியடிக்கும் வருண் வாகனங்கள் தருமாறு டிஐஜியிடம் கேட்டுள்ளார். ஆனால், டிஐஜி கபில் குமார் சராட்கர் எஸ்பி கேட்ட எண்ணிக்கையை குறைத்து 2 வஜ்ரா வாகனங்கள், 3 காவல்துறை பேருந்துகள், 6 ஈச்சர் வாகனங்கள், 3 டாடா சுமோ வாகனங்கள் தருவதற்கு இசைந்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கலவரத்தின்போது 2 வஜ்ரா வாகனத்தில் ஒன்று ஸ்டெர்லைட் தொழிற்சாலை முன்பு மற்றொன்று கலவரம் நடந்த பகுதியில் நிறுத்தப்பட்டிருந்தது. ஒரு வஜ்ரா வாகனத்தை வைத்து போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறியுள்ளனர். எஸ்பி கேட்ட 5 வஜ்ரா வாகனம் கொடுத்து இருந்தால், போராட்டக்காரர்களை கண்ணீர் புகைகுண்டுகள் வீசி கலைத்து இருக்கலாம். இதன் மூலம் துப்பாக்கி சூடு சம்பவத்தை தடுத்து இருக்க வாய்ப்பு ஏற்பட்டு இருக்கும் என்று ஆணையம் தெரிவித்துள்ளது.

துப்பாக்கி சூட்டிற்கு காரணமான 17 உயர் காவல்துறை அதிகாரிகள் பட்டியல்
பதவி    பெயர்    இடம்
ஐஜி    சைலேஷ் குமார் யாதவ்    மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
டிஐஜி    கபில்குமார் சி.சராட்கர்    மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
தூத்துக்குடி எஸ்பி    மகேந்திரன்    அண்ணாநகர்
டிஎஸ்பி    லிங்கதிருமாறன்    மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
இன்ஸ்பெக்டர்    திருமலை    மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
இன்ஸ்பெக்டர்    ஹரிகரன்    மாவட்ட ஆட்சியர் வெளிப்புறம்
இன்ஸ்பெக்டர்    பார்த்திபன்    தெரஸ்புரம்
சப்-இன்ஸ்பெக்டர்    ரென்னீஸ்    மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
சப்-இன்ஸ்பெக்டர்    சொர்ணமணி    மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
2ம் நிலை காவலர்    ராஜா    கலெக்டர் அலுவலகம் உள்ளே
முதல்நிலை காவலர்    சங்கர்    கலெக்டர் அலுவலகம் உள்ளே
முதல் நிலை காவலர்    சுடலைக்கண்ணு    மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
2ம் நிலை காவலர்    தாண்டவமூர்த்தி    மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
முதல் நிலை காவலர்    சதீஷ்குமார்    கலெக்டர் அலுவலகம் உள்ளே
தலைமை காவலர்    ராஜா    கலெக்டர் ஆபீஸ் முன்பு வேனில்
முதல் நிலை காவலர்    கண்ணன்    அண்ணாநகர்
காவலர்    மதிவாணன்    அண்ணாநகர்

* கலெக்டரின் அலட்சியமே துப்பாக்கிச்சூட்டுக்கு காரணம்
மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் நடவடிக்கை மிகுந்த வேதனை அளிப்பதாக ஆணையம் குற்றம்சாட்டியுள்ளது. தூத்துக்குடியிலேயே தன்னுடைய முகாம் அலுவலகத்தில் இருந்திருந்தும் 20.5.2018 அன்று நடந்த அமைதி பேச்சுவார்த்தையை தான் முன்னிலை வகித்து நடத்தாமல், தனக்கு அடுத்த 3ம் நிலையில் உள்ள சார் ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் அந்த சூழ்நிலையை கையாளுமாறு விட்டு, அவர் தன் பொறுப்பை தட்டி கழித்திருக்கிறார். அதேநேரம், 21ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை போராட்டக்காரர்கள் முற்றுகையிட இருந்த விபரமே தனக்கு தெரியாது என்று கூறுகிறார்.

பிரச்னை குறித்து காவல்துறை ஐஜி, டிஐஜி மற்றும் மாவட்ட எஸ்பி ஆகியோர் தூத்துக்குடி மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் இருந்துள்ளனர். இந்த 3 அதிகாரிகளுக்கும் உளவுத்துறை ஐஜி சத்தியமூர்த்தி பிரச்னை ஏற்படும் என்று தெரிவித்துள்ளனர். ஆனால் கலெக்டர் வெங்கடேஷ் தன்னிடம் ஐஜி, டிஐஜி மற்றும் எஸ்பி என யாரும் அந்த தகவல்களை பரிமாறவில்லை என்று கூறியுள்ளார். 21ம் தேதி நடந்த அமைதி பேச்சுவார்த்தையில் கலெக்டர் முன்னிலையில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று தீர்மானம் போடப்பட்டுள்ளது. எனவே, கலெக்டர் வெங்கடேஷின் செயலின்மை, அக்கறையின்மை மற்ற அதிகாரிகளுடன் இணக்கமின்மையே காண்பிக்கிறது. அவர்தம் கடமையிலிருந்து தவறிவிட்டார். எனவே தூத்துக்குடி கலெக்டர் வெங்கடேஷ் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க தகுந்த முகாந்திரம் உள்ளது என்று ஆணையம் கருதுகிறது.

* ஒதுக்கப்பட்ட பகுதியில் பணி செய்யாத அதிகாரிகள்
போராட்டம் நடக்க இருக்கும் என தெரிந்து சார் ஆட்சியர் பிரசாந்த் முந்திய நாள் 21ம் தேதி காவல்துறையினருடன் இணைந்து பணியாற்ற துணை வட்டாட்சியர் சேகர், தூத்துக்குடி கலால் அதிகாரி சந்திரன், மண்டல துணை தாசில்தார் கண்ணன் ஆகியோரை சிறப்பு நிர்வாக அதிகாரிகளாக பல்வேறு பகுதிகளுக்கு நியமனம் செய்து இருந்தார். ஆனால் அவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் பணியாற்றாமல் நியமிக்கப்படாத பகுதிகளுக்கு தன்னிச்சையாகவோ அல்லது அவர்களின் மேல் அதிகாரி உத்தரவு இருப்பதாக சொல்லிக்கொண்டோ சென்று பணியில் ஈடுபட்டது சான்றுகள் மூலம் தெரிய வருகிறது.

இதன் மூலம் அவர்கள் வரம்புக்கு உட்படாத பகுதிகளுக்கு வந்து துப்பாக்கி பிரயோகம் செய்ய உத்தரவிட்டதாக ஒரு தோற்றம் உருவாக்கப்பட்டுள்ளது. அவ்வாறு மாறி பணி செய்ததற்கு மாவட்ட ஆட்சியரோ, சார் ஆட்சியரோ அல்லது தலைமையிடத்து வட்டாட்சியர் உத்தரவிடாத போது, அவர்களின் அதிகார வரம்பிற்கு உட்படாத பகுதிகளுக்கு சென்று காவல்துறையினருக்கு துப்பாக்கி பிரயோகத்திற்கு உத்தரவிட்டதாக கூறியிருப்பது காவல்துறையினரின் கோரிக்கைக்கு இணங்கி செயல்பட்டிருக்கின்றனர் என்பது வெளிப்படுத்துகிறது. எனவே, இந்த 3 அதிகாரிகள் மீது துறை ரீதியாகவும், வேறு தகுந்த நடவடிக்கைகள் எடுக்க அரசுக்கு ஆணையம் பரிந்துரைக்கிறது.

Tags : Collector ,IG ,Justice ,Aruna Jagatheesan ,Legislative Assembly , Criminal action should be taken against 17 people including Collector, IG in the firing incident: Justice Aruna Jagatheesan's report tabled in the Legislative Assembly
× RELATED பறவைக் காய்ச்சல் எதிரொலி: நாமக்கல்...