×

மூணாறில் இருந்து பெரியாறு புலிகள் சரணாலயத்தில் விடப்பட்ட புலி சாவு

கூடலூர்: மூணாறில் இருந்து பிடித்து பெரியாறு புலிகள் சரணாலயத்தில் விடப்பட்ட புலி இறந்தது. புலி நீரில் மூழ்கி இறந்ததாக முதற்கட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிய வந்துள்ளது. கேரள மாநிலம் மூணாறு நயமக்காடு எஸ்டேட் பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்திவந்த புலி கடந்த 4ம் தேதி இரவு வனத்துறையினர் அமைத்த கூண்டில் சிக்கியது. பின் கடந்த 7ம் தேதி பெரியாறு புலிகள் சரணாலயத்தில் விடப்பட்டது. புலியின் நடமாட்டத்தை கண்காணிக்க ரேடியோ காலர் பொருத்தப்பட்ட நிலையில், கடந்த 13ம் தேதி அதன் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் இந்த புலி பெரியாறு புலிகள் சரணாலயத்தில் உள்ள சீனியர் ஓடை பகுதியில் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து இறந்த புலியின் உடல் நேற்று தேக்கடி கொண்டுவரப்பட்டு, தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் விதிமுறைகளின்படி அமைக்கப்பட்ட சிறப்புக் குழு முன்னிலையில், பெரியார் புலிகள் சரணாலய கால்நடை மருத்துவர் டாக்டர் அனுராஜ் தலைமையிலான 3 பேர் கொண்ட குழுவினர் பிரேத பரிசோதனை செய்தனர். பரிசோதனையில், புலியின் வயிற்றில் வேட்டையாடி உண்ட முள்ளம்பன்றியின் எச்சங்கள் இருந்தன. முள்ளம்பன்றியை வேட்டையாடும்போது, அதன் முள் குத்தியதில் புலியின் காலில் காயம் ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.  

இது அதிகாரிகள் கூறுகையில், ‘‘தேக்கடி வனப்பகுதியில் இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. ஏரியில் நீந்தி மறுகரைக்கு குதித்த போது புலி மீண்டும் தண்ணீரில் விழுந்து இறந்திருக்கலாம். புலியின் உள் உறுப்புகளின் மாதிரி மூன்று ஆய்வகங்களுக்கு பரிசோதனைக்காக அனுப்பப்படும். அறிக்கை கிடைத்த பின்னரே புலி இறந்ததற்கான காரணத்தை தெளிவாக கூற முடியும்’’ என்றனர். பிரேத பரிசோதனைக்கு பின், புலியின் உடல் தகனம் செய்யப்பட்டது.

Tags : Periyar ,Tiger ,Sanctuary ,Munnar , A tiger left in Periyar Tiger Sanctuary from Munnar has died
× RELATED ஊழல் பல்கலைக்கழகங்களும்… கைதாகும்...