×

சபரிமலைகோயில் புதிய மேல்சாந்தியாக ஜெயராமன் நம்பூதிரி தேர்வு

திருவனந்தபுரம்: சபரிமலை கோயில் புதிய மேல்சாந்தியாக கண்ணூரைச் சேர்ந்த ஜெயராமன் நம்பூதிரியும், மாளிகைப்புரம் கோயில் மேல்சாந்தியாக வைக்கம் பகுதியைச் சேர்ந்த அரிகரன் நம்பூதிரியும் இன்று தேர்வு செய்யப்பட்டனர். ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. தொடர்ந்து இன்று முதல் வரும் 22ம் தேதி வரை பூஜைகள் நடைபெறுகிறது. இந்த நிலையில் வரும் மண்டல காலம் முதல் அடுத்த ஒரு வருடத்திற்கான சபரிமலை, மாளிகைப்புரம் கோயில் மேல்சாந்தி தேர்வுகள் இன்று காலை சபரிமலை சன்னிதானத்தில் நடந்தது.

சபரிமலைக்கு 10 பேரும், மாளிகைப்புரம் கோயிலுக்கு 8 பேரும் ஏற்கனவே நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் இன்று காலை உஷபூஜைக்குப் பிறகு சுமார் 8 மணி அளவில் மேல்சாந்திகளை குலுக்கல் மூலம் தேர்வு செய்யும் நிகழ்ச்சி தொடங்கியது. முதலில் சபரிமலை மேல்சாந்தி தேர்வு செய்யப்பட்டார். அதன்படி சபரிமலை மேல்சாந்தியாக கண்ணூர் மாவட்டம் தளிப்பரம்பு பகுதியைச் சேர்ந்த ஜெயராமன் நம்பூதிரி தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து மளிகைப்புரம் கோயில் மேல்சாந்தியாக வைக்கம் பகுதியைச் சேர்ந்த அரிகரன் நம்பூதிரி தேர்வு செய்யப்பட்டார்.

சபரிமலை மேல்சாந்தியை பந்தளம் அரண்மனையை சேர்ந்த கிருத்திகேஷ் வர்மாவும், மளிகைப்புரம் மேல்சாந்தியை பவுர்ணமி வர்மாவும் தேர்ந்தெடுத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் சபரிமலை தந்திரி கண்டரரு ராஜீவரரு, திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் அனந்தகோபன், தேவசம் போர்டு ஆணையாளர் பிரகாஷ், மேற்பார்வையாளர் நீதிபதி பாஸ்கரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். புதிய மேல்சாந்திகளாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் கார்த்திகை 1ம் தேதி முதல் சபரிமலையில் பூஜைகளை தொடங்குவார்கள்.

Tags : Jayaraman Namboothiri ,Melasanthi ,Sabarimala , Jayaraman Namboothiri chosen as the new Melasanthi of Sabarimala temple
× RELATED ஆனி மாத பூஜை சபரிமலை கோயில் நடை நாளை திறப்பு