×

சத்தியமங்கலம் - மைசூர் நெடுஞ்சாலையில் சோதனைச்சாவடியில் கரும்புகளை ருசி பார்த்த காட்டு யானைகள்: வன ஊழியர்கள், வாகன ஓட்டிகள் அச்சம்

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் - மைசூர் நெடுஞ்சாலையில் ஆசனூர் அருகே காரப்பள்ளம் சோதனைச்சாவடியில் காட்டு யானைகள் லாரிகளில் இருந்து சாலையில் சிதறி  விழுந்த கரும்புகளை ருசி  பார்த்த சம்பவம் வன ஊழியர்கள், வாகன ஓட்டிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளன.

இந்த வனப்பகுதி வழியாக தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பகல் மற்றும் இரவு நேரங்களில் காட்டு யானைகள் அதிகளவில் நடமாடுகின்றன. இந்நிலையில், தாளவாடி மலை பகுதியில் விளையும் கரும்புகள் வெட்டப்பட்டு லாரியில் பாரம் ஏற்றி சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அடர்ந்த வனப்பகுதி வழியாக சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு கொண்டு செல்லப்படுகிறது.

கரும்பு லாரிகளில் அதிக உயரத்திற்கு கரும்பு பாரம் ஏற்றி செல்வதால் ஆசனூர் அருகே தமிழக -கர்நாடக எல்லையில் காரப்பள்ளம் வன சோதனைச்சாவடியில் உயர தடுப்பு கம்பியில் லாரியின் பாரம் உரசுவதால் கரும்பு துண்டுகள் சிதறி விழுந்து சாலையில் கொட்டி கிடக்கும். நேற்று காலை அப்பகுதியில் 4 காட்டு யானைகள் சாலையின் நடுவே முகாமிட்டு லாரியில் இருந்து கீழே விழுந்த கரும்பு துண்டுகளை தும்பிக்கையால் எடுத்து தின்றபடி வாகனங்களை வழிமறித்து நின்றன.

இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. காட்டு யானைகள் சாலையில் நிற்பதை கண்ட வாகன ஓட்டிகள் பெரும் பீதியும், அச்சமும் அடைந்தனர். சோதனைச்சாவடியில் பணியில் இருந்த வனத்துறை ஊழியர்கள் காட்டு யானைகளை விரட்ட முயற்சித்தும், யானைகள் கரும்பு துண்டுகளை தின்பதில் ஆர்வம் காட்டியதால் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தனர். இதையடுத்து, சிறிது நேரம் அங்கேயே நின்றிருந்த காட்டு யானைகள் பின்னர் வனப்பகுதிக்குள் சென்றதையடுத்து அவ்வழியே மீண்டும் போக்குவரத்து சீரானது.

Tags : Satyamangalam ,Mysore highway , Sathyamangalam - Mysore highway, check post, wild elephants tasting sugarcane,
× RELATED கடம்பூர் மலைப்பகுதியில் அரசு பஸ்சை வழிமறித்த யானையால் பரபரப்பு