×

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ராமநாதபுரம்-கீழக்கரை பாலப்பணி மீண்டும் துவக்கம்: விரைந்து முடிக்க தீவிரம்

ராமநாதபுரம்: ராமநாதபுரம்-கீழக்கரை சாலை ரயில்வே மேம்பாலம் பணி இரண்டு ஆண்டுகளுக்கு பின் மீண்டும் தொடங்கியது. இதனை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க ரயில்வே அதிகாரிகள் முனைப்பு காட்டி பணியை துரிதப்படுத்தி உள்ளனர். ராமநாதபுரத்தில் இருந்து கன்னியாகுமரி,நெல்லை,திசையன்விளை, தூத்துக்குடி, சாயல்குடி, ஏர்வாடி, கீழக்கரை செல்லும் அரசு, தனியார் பேருந்துகள், சரக்கு வாகனங்கள் கீழக்கரை ரயில்வே கேட்டை கடந்து செல்ல வேண்டிய நிலை இருந்தது.

இந்த வேளையில் ராமேஸ்வரத்தில் சென்னை, கன்னியாகுமரி, திருச்சி, மதுரை, திருப்பதி, கோவை நகர் ரயில்கள், வட மாநில தொலைதூர ரயில்கள் செல்லும் போது ரயில்வே கேட் மூடப்படுகிறது. அப்போது ரயில்வே கேட்டின் இருபுறமும் நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் அடிக்கடி அணிவகுத்து நின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல், தேவையற்ற தாமதம் ஏற்பட்டது. இச்சிரமம் போக்க கீழக்கரை சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைக்க மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

நீண்ட கால கோரிக்கையை ஏற்று ராமநாதபுரம் நகரிலிருந்து சக்கரக்கோட்டை வழியாக திருப்புல்லாணி - கீழக்கரை செல்லும் வகையில் ரூ.30.74 கோடி மதிப்பில் மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது. இப்பணி கடந்த 2018 அக்.18ல் பூமி பூஜையுடன் தொடங்கியது. இரண்டு ஆண்டுகளில் முடிக்க காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டது. கடந்த 2020 அக்.10ல் பாலம் அரசிடம் ஒப்படைக்க இருந்தது.

இந்நிலையில் 2020 மார்ச் 25ம் தேதி கொரோனா தொற்று பேரிடர் பரவல் தடுப்பு நடவடிக்கையால் கட்டுமானப் பணி தடைபட்டது. கொரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்டதால் 3 மாதம் கிடப்பில் கிடந்த மேம்பாலம் கட்டுமான பணி மீண்டும் தொடங்கி மந்தகதியில் நடந்தது. இப்பணியில் 45 சதவீதம் நிறைவடைந்த நிலையில், பழைய ஸ்டாண்ட் அருகே பெட்ரோல் பங்க் உள்ளிட்ட தனியாா் கட்டிடங்களை அப்புறப்படுத்தினால் மட்டுமே பாலம் பணி முழுமை பெறும் நிலை ஏற்பட்டது.

இதனால் மேம்பால பணிகளுக்கு தடை கோரி கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதனால் கடந்த 2 ஆண்டாக பாலம் கட்டுமான பணி நிறுத்தப்பட்டது. இப்பணியை துரிதமாக முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டுமென பல்வேறு தரப்பினர் போராட்டங்கள் நடத்தினர். கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இது குறித்து அரசின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டது.

சம்பந்தப்பட்ட கட்டிட உரிமையாளர்களிடம் சமரசம் பேசி பணியை துரிதப்படுத்த வருவாய் துறையினரை அரசு அறிவுறுத்தியது. இதையடுத்து. ராமநாதபுரம் கலெக்டர் ஜானிடாம் வா்கீஸ் பாலப்பணியை துரிதப்படுத்த உத்தரவிட்டாா். தடை கோரி வழக்கு தொடா்ந்தோரிடம் நவாஸ் கனி எம்பி, அப்போதைய கோட்டாட்சியர் ஷேக் மன்சூர், தாசில்தார் முருகேசன் உள்ளிட்டோரின் கோரிக்கையை ஏற்று மக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு வழக்கு தொடர்ந்தோர் வழக்கை திரும்ப பெற்றனர். இதையடுத்து மேம்பாலத்தின் இருபுறமும் அஸ்திரமாக தலா 10 தூண்கள், இதன் மேல் தலா 5 தூண்கள் அமைக்கும் பணி கடந்த சில வாரங்களுக்கு முன் துவங்கியது.

கலெக்டரின் உத்தரவுபடி இப்பணியை விரைந்து முடிக்க ரயில்வே இன்ஜினியர்கள் முனைந்துள்ளனர். இப்பணியை முடிக்க 11 மாதம் காலமாகும் என கூறப்படுகிறது. இன்னும் ஒரு சில வாரங்களில் பருவ மழை துவங்க உள்ளதால், மேலும் தாமதமாகக்கூடும். இதனால், 100 சதவீத பணி அடுத்தாண்டு நவம்பரில் தான் நிறைவடையும் வாய்ப்புள்ளது.

Tags : Ramanathapuram ,Chilakarai bridge , After two years, the Ramanathapuram-Chilakarai bridge work is in full swing
× RELATED நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற...