×

தர்மபுரியில் இடி மின்னலுடன் கனமழை 50 ஆண்டுக்கு பிறகு கல்லாற்றில் வெள்ளம்: கால்நடைகள், மின் மோட்டார்கள் அடித்துச் செல்லப்பட்டன

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் இடி மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. அரூர் அருகே 50 ஆண்டுக்கு பிறகு கல்லாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ள நீரில் கால்நடைகள், மின் மோட்டார், ஆயில் மோட்டார், கார் அடித்துச் செல்லப்பட்டன. மேலும், மஞ்சள், நெல், மரவள்ளி, வாழை சேதமடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். வடகிழக்கு பருவமழை தொடங்கியதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் மழை பெய்து வருகிறது.

தர்மபுரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு பெய்த மழை நேற்று அதிகாலை வரை நீடித்தது. தர்மபுரி, நல்லம்பள்ளி, தொப்பூர், காரிமங்கலம், பென்னாகரம், ஒகேனக்கல், பாலக்கோடு, மாரண்டஅள்ளி, மொரப்பூர், கடத்தூர், பாப்பிரெட்டிப்பட்டி, அரூர், கோட்டப்பட்டி, தீர்த்தமலை, நரிப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் இடி, மின்னல் காற்றுடன் கனமழை பெய்தது. இம்மழையால் பஞ்சப்பள்ளி சின்னாறு அணை மீண்டும் நிரம்பி உபரிநீர் வெளியேறியது. ராமாக்காள் ஏரி, கடகத்தூர், சோகத்தூர் ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

மேலும் பஞ்சப்பள்ளி சின்னாறு அணையின் உபரிநீர் பாப்பாரப்பட்டி, இண்டூர் உள்ளிட்ட 17 ஏரிகளுக்கு புதிய இணைப்பு கால்வாய் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. புதிய இணைப்பு கால்வாய் ஏற்படுத்தி 9 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், பல இடங்களில் விளை நிலங்களில் மழைநீர் தேங்கியது. தர்மபுரி அடுத்த ஏ.ஜெட்டிஅள்ளி அருகே பருத்தி வயலில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதேபோல் அந்த பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் மழைநீர் தேங்கியுள்ளது.

ராமன்நகர், ராயல்நகர் தெருக்களில் குட்டைபோல் மழைநீர் தேங்கி நிற்கிறது. அரூர் அருகே கோட்டப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட ஆவலூர் சிலம்பை, தாதுகொட்டை, தேக்கம்பட்டி, கொள்ளுநத்தம் ஆகிய கிராம பகுதியில் நேற்று முன்தினம் பெய்த கன மழையால் கல்லாற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப்பெருக்கால் கரையோரம் வசிக்கும் மலைவாழ் மக்களின் வீடு, கால்நடைகள் மற்றும் ஆயில் மோட்டார், மின் மோட்டார் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. மேலும் விளை நிலங்களில் மஞ்சள், நெல், மரவள்ளி, வாழை ஆகிய பயிர்களில் மழை நீர் தேங்கியால் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.

கோட்டப்பட்டி செலம்பை ஆற்றின் கரையோரத்தில் உள்ள ஆசிரமத்தின் அருகே கார் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. நேற்று இப்பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில், அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார் சுமார் 4 கி.மீ அடித்து செல்லப்பட்டு, அப்பளம் போல் நொறுங்கி சேதமடைந்தது. அரூர் மற்றும் சுற்றுப்புற பகுதியில் பெய்துவரும் கனமழையால், அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வருகிறது. அரூர் வாணியாற்றிலும் அதிகளவில் தண்ணீர் செல்கிறது. ஆனால், அதனை ஒட்டிய சுமார் 100 ஏக்கர் பரப்பிலான ஏரி தண்ணீர் வரத்தின்றி காணப்படுகிறது. வெள்ள பாதிப்புகளை அதிகாரிகள் இன்று பார்வையிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், 1972 ஆண்டு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதன் பிறகு 50 ஆண்டுக்கு பிறகு இப்போது தான் நாங்கள் வெள்ளத்தை பார்க்கிறோம். கடுமையாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அரசு வெள்ள சேத நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். தர்மபுரி மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் அளவு விபரம்: அரூர்- 5.20 சென்டி மீட்டர், பென்னாகரம்-0.70 செ.மீ, பாலக்கோடு- 8.62 செ.மீ, தர்மபுரி-1.70 செ.மீ, மாரண்டஅள்ளி-4.60 செ.மீ, ஒகேனக்கல்-1 செ.மீ, பாப்பிரெட்டிப்பட்டி-4.90 செ.மீ என மொத்தம் 26.72 செ.மீ மழை பதிவாகியுள்ளது.


Tags : Dharmapuri ,Kallar , Dharmapuri, heavy rain with thunder and lightning, floods in kalaaru,
× RELATED வாகனம் மோதி பெயிண்டர் பலி