×

தமிழகத்தில் உள்ள கேந்திரியா வித்யாலயா பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்கள் இல்லை: ஆர்டிஐ தகவல்

சென்னை: தமிழகத்தில் உள்ள கேந்திரியா வித்யாலயா பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்கள் இல்லை என்று ஆர்டிஐ தகவல் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் ஒன்றிய, மாநில அரசு ஊழியர்கள், பொதுத் துறை பணியாளர்கள், ராணுவத்தினர் ஆகியோரின் குழந்தைகளுக்காக கேந்திரிய வித்யாலயா பள்ளிகள், மத்திய அரசு கல்வி அமைச்சகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகின்றன. இந்தியா முழுவதும் 1,245 கேந்திரியா வித்யாலயா பள்ளிகள் உள்ளது. தமிழ்நாட்டில் இயங்கி வரும் 49 கேந்திரியா வித்யாலயா பள்ளிகளில் 14 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் படித்து வருகின்றனர்.

சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் செயல்படும் இவைகளில் குறைந்த கட்டணமே வசூலிக்கப்படுகிறது. இப்பள்ளிகளில் பயிற்று மொழியாக ஆங்கிலம் மற்றும் இந்தி உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் இயங்கி வரும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. இதற்கு கிடைத்துள்ள பதிலில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதன்படி கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு, சமஸ்கிருதம் மற்றும் இந்தி மொழிப் பாடங்கள், கட்டாய பாடங்களாக உள்ளன என்றும், 9-ம் வகுப்பு முதல் அவை விருப்பப் பாடங்களாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் மொழி பாடம், 6 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாயப் பாடமாக இல்லை எனவும், தமிழகத்தின் எந்த கேந்திரிய வித்யாலயா பள்ளிகளிலும், தமிழ் ஒரு மொழிப்பாடமாக இடம்பெறவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சமஸ்கிருத மொழிக்குப் பதிலாக தமிழை மொழிப் பாடமாக பயில முடியாது என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் கேந்திரியா வித்யாலயா பள்ளிகளில் 109 இந்தி கற்பிக்கும் ஆசிரியர்களும், 53 சமஸ்கிருதம் கற்பிக்கும் ஆசிரியர்களும் பணிபுரிந்து வருகின்றனர். தமிழ் கற்பிக்கும் ஆசிரியர்கள் ஒருவர் கூட இல்லை என்ற அதிர்ச்சி தகவலும் தெரிய வந்துள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் இப்பதில்கள் இடம்பெற்ற  புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.


Tags : Kendriya Vidyalaya ,Tamil Nadu ,RTI , No Tamil teachers, Kendriya Vidyalaya schools , Tamil Nadu, RTI information
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்