×

விபத்து ஏற்படாமல் காக்க மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை: ஜி.கே.வாசன் வேண்டுகோள்

சென்னை: சென்னையில் விபத்து ஏற்படாமல் காக்க மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜி.கே.வாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: சென்னையில் ஒருசில மாதமாக மழைநீர் வடிகால் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆனால் அவை முழுமை பெறாமல் ஆங்காங்கே பாதியில் நிற்கிறது. அவை மக்களிடையே மிகுந்த அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. தீபாவளி பண்டிகையையொட்டி சென்னை வாழ் மக்களும், அண்டை மாவட்டங்களில் இருந்தும், பொது மக்கள் ஆடை ஆபரணங்களும் மற்றும் பல்வேறு பொருள்கள் வாங்க சென்னைக்கு வருகின்றனர்.

சென்னையில் தற்பொழுது நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியால், போக்குவரத்து மாற்றத்தாலும் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகிறார்கள். அதோடு மழைநீர் வடிகால் பணியில் பல்வேறு இடங்களில் இரும்பு கம்பிகள் நீட்டிக்கொண்டு பணி முடிவு பெறாமல் இருப்பது பார்ப்போரை பயத்திற்கு உள்ளாக்கியிருக்கிறது. பண்டிகை காலம் என்பதால் மக்களின் போக்குவரத்து, அனைத்து பகுதிகளிலும் அதிகரித்துள்ளது. வடிகால் பணி நடைபெறுவதால் சாலைகள் சேறும் சகதியாக இருக்கும் இடங்களில் வாகனங்கள் வழுக்கி விழுந்து விபத்து ஏற்படவும், அதனால் உயிர்சேதம் எற்படவும் மிகுந்த வாய்ப்புள்ளது.

ஆகவே விபத்தால் உயிரிழப்பு ஏற்படாமல் காக்க, மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். அதிகமான மழையின் போது மக்கள் இயல்பு வாழ்கை பாதிக்காமல்  இருக்க வேண்டும். அவற்றிற்கு தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் துரிதமாக செயல்பட்டு மழைநீர் வடிகால் பணியையும், துண்டுதுண்டாக நிற்கும் பணியையும் முழுமையாக முடிக்க வேண்டும்.


Tags : GK , Steps to complete rainwater drainage works to prevent accidents: GK Vasan request
× RELATED வாக்குப்பதிவு இயந்திரங்களை முறையாக...