×

ராமாபுரத்தில் அதிமுகவின் 50ம் ஆண்டு நிறைவு விழா; நலத்திட்ட உதவி, பொற்கிழி: சசிகலா வழங்கினார்

சென்னை: அதிமுகவின் 50ம் ஆண்டு பொன்விழா நிறைவு விழா சசிகலா ஆதரவாளர்கள் ஏற்பாட்டில் ராமாபுரத்தில் உள்ள முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் இல்ல வளாகத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட வி.கே.சசிகலா கட்சிக்காக உழைத்த ஆரம்ப கால அதிமுகவினர் 500க்கும் மேற்பட்டோருக்கு பொற்கிழி வழங்கி கவுரவித்தார். முன்னதாக வழியெங்கும் சசிகலாவுக்கு செண்டை மேளம் முழங்க பட்டாசு வெடித்து பிரமாண்டமான முறையில்  வரவேற்பு அளிக்கப்பட்டது. எம்ஜிஆர் தோட்டத்துக்கு வந்ததும் அங்குள்ள எம்ஜிஆர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செய்த சசிகலா எம்ஜிஆர், சத்யபாமா, ஜானகி அம்மாள் நினைவு மண்டபத்துக்கு சென்று வணங்கினார். பின்னர் விழாவில் சிறப்புரையாற்றினார்.

முன்னதாக, பூந்தமல்லி முன்னாள் நகர செயலாளர் பூவை து.கந்தன் வரவேற்று பேசினார். முன்னாள் அரசு கொறடா பள்ளிப்பட்டு நரசிம்மன் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் ஆனந்தன் முன்னிலை வகித்தார். இதையடுத்து சசிகலா சிறப்புரையாற்றினார். அப்போது, சசிகலா பேசுகையில், ”தமிழக மக்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்ற எண்ணத்தில் எம்ஜிஆர் அதிமுக என்ற  மாபெரும் இயக்கத்தை தொடங்கினார். அவரது வழியில் ஜெயலலிதா கட்சிக்கு தலைமையேற்று மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்தார்.

ஜெயலலிதா வழியில் நான் பல்வேறு நல்ல திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தினேன். எம்ஜிஆரின்  மறைவிற்கு பிறகு கட்சி இரண்டாக  பிரிந்தபோது, நிர்வாகிகளிடம் பேசி இரு அணிகளையும்  ஒன்றிணைத்தேன். ஒன்றிணைத்த நான் இப்போது செய்யமாட்டேனா, கொஞ்சம் பொறுமையாக இருங்கள்,  காலம் வரும், எப்போது செய்யவேண்டும், எப்படி செய்யவேண்டும், என்ன செய்ய வேண்டும், எந்த நேரத்தில் செய்ய வேண்டும் என்பது எனக்கு தெரியும். அதுவரை தொண்டர்களாகிய நீங்கள் எனக்கு துணையாக இருந்து ஒத்துழைக்கவேண்டும். நாளை வெற்றி நமக்கே.

மக்களுக்காக நல்ல ஆட்சியை கொடுப்போம். ஒன்றுபடுவோம், வெற்றிபெறுவோம்” என்றார்.  பின்னர், காது கேளாதோர், வாய் பேசமுடியாதவர்கள் சிறப்பு பள்ளிக்கு சென்ற சசிகலா அவர்களுக்கு உணவு பரிமாறினார். நிகழ்ச்சியில், வேலூர் மு.மா.செயலாளர் எல்.கே.எம்.பி.வாசு, திருவள்ளூர் தெ.மு.மாசெ. ஆலப்பாக்கம் ஜீவானந்தம், தஞ்சாவூர் மு.மா.செ.பொன்.தாமோதரன், த.நி.செ. சிவராஜ், எல்லாபுரம் மா.இ.அ.தலைவர் ரஜினி, திண்டிவனம் மா.அம்மா பேர.செய. முகமது செரீப், திண்டிவனம் ந.செ. சேகர், திருவெண்ணெய்நல்லூர் ஒ.செ. குமார், நாமக்கல் ஒ.செ. கோபால், வேளச்சேரி சின்னதுரை, மேடவாக்கம் காளிதாஸ், தீனதயாளன், படப்பை  குமார் உள்பட சசிகலா ஆதரவாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Adhimukha ,Ramapuram ,Welfare Project Assistance ,Polcheshi ,Sasigala , 50th anniversary celebration of AIADMK in Ramapuram; Welfare Assistance, Porkichi: Provided by Sasikala
× RELATED கடலூர் மாவட்டம் ராமாபுரம் ஊராட்சியில் பெண் அடித்துக் கொலை!!