×

காரியாபட்டி, நரிக்குடி பகுதியில் தொடர் மழையால் நெல் சாகுபடி பணியில் விவசாயிகள் தீவிரம்: வயல்களில் நாற்று நடும் பணி மும்முரம்

காரியாபட்டி: காரியாபட்டி, நரிக்குடி பகுதியில் தொடர் மழையால், நெல் சாகுபடி பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதையொட்டி, வயல்களில் நாற்று நடும் பணியில் விவசாய பெண் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி, நரிக்குடி பகுதிகளில் உள்ள அல்லாளப்பேரி, சத்திரம் புளியங்குளம், முடுக்கன்குளம், இலுப்பைக்குளம், டி.வேப்பங்குளம், சித்தனேந்தல், எஸ்.மறைக்குளம், பாப்பணம், நரிக்குடி ஒன்றியம் உலக்குடி, நாலூர், இசை, பனைக்குடி உள்பட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் நெல் சாகுபடி பணி மும்முரமாக நடந்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் வயல்களில் உழவுப்பணி, நாற்று பாவும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

காரியாபட்டி, நரிக்குடி பகுதியில் கடந்த ஓரிரு மாதமாக போதிய மழை இல்லை. இதனால், போர்வெல் மூலம் தண்ணீர் எடுத்து விவசாயிகள் நெல் விதைத்து வந்தனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழையால், கண்மாய்களுக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து விவசாயிகள் தங்களது நிலங்களை உழவு செய்து வருகின்றனர். காரியாபட்டி, நரிக்குடி ஒன்றிய கிராமங்களில் நெல் நடவு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஒவ்வொரு கிராம நிர்வாக அதிகாரிகளும், விவசாயம் செய்யப்பட்ட நிலங்களை கணக்கீடு செய்து விரைவில் அடங்கல் பதிவை வழங்க வேண்டும்.

தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாய கடன் வழங்க விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காரியாபட்டி, நரிக்குடி வட்டார பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாற்றங்கால் அமைப்பது எப்படி
நீர் நில நெல் சாகுபடியில் நாற்றங்கால் முக்கிய பங்கு வகிக்கிறது. பொதுவாக, ஒரு ஏக்கர் நிலத்திற்கு, ஒரு சென்ட் அதாவது, நடவுவயல் பரப்பில் 10 சதவீதம் நாற்றங்கால் தேவை. நடவுக்கு ஒரு மாதம் முன்பாக நாற்றங்கால் தயார் செய்யப்படுகிறது. நாற்றங்கால் நில மண் கட்டிகளின்றி நன்றாக தூளாகும் வரை உழுது, நீர் பாய்ச்சப்படுகிறது. சில விவசாயிகள், உழுவதற்கு சில நாட்கள் முன், நிலத்தில் நீர் பாய்ச்சுகின்றனர்.

இது களை விதைகளை முளைக்கச் செய்கிறது. பின்னர் உழும்போது, களைச்செடிகள் நிலத்தில் புதைக்கப்படுவதால் களை எடுப்பு குறைகிறது. ஒரு சென்ட் நாற்றங்காலுக்கு சுமார் 200 கிலோ மாட்டுச்சாண உரமிட்டு, மீண்டும் ஈரநிலம் உழப்படுகிறது. பின், ஓரங்களில் வடிகால் வாய்க்கால்கள் அமைக்கப்பட்டு, நடுவில் சற்றே மேடாக ஆனால் சமமாக இருக்குமாறு நிலம் சமன் செய்யப்படும். ஒரு ஏக்கருக்கு நெல் விவசாயம் நடவு செய்ய 50 கிலோ நெல் விதைக்கப்படுகிறது.

50 கிலோ நெல்லை 5 சென்ட் பரப்பளவு நாற்றங்காலில் விதைத்து 30லிருந்து 40 நாட்கள் வளர்க்கப்பட்டு பின்பு நாட்றாங்களில் இருந்து நாற்று பிடுங்கி விளைநிலத்தில், நடவு செய்யப்படுகிறது. ஒரு ஏக்கருக்கு நல்ல முறையில் விளைந்தால் 65 கிலோ எடையுள்ள 40 மூட்டை நெல் மகசூல் கிடைக்கும்.

 ‘உலர் நில முறை’ ‘நீர் நில முறை’
நெற்பயிர் சுமார் நான்கு மாதம் வரை வளரும் தாவரமாகும். நெல், சோளம், கோதுமைக்கு அடுத்து அதிகம் பயிரிடப்படும் தானியம் நெல் ஆகும். நீராதாரத்தைப் பொறுத்து நெல் ‘உலர் நில முறை’ அல்லது ‘நீர் நில முறை’ ஆகிய முறைகளில் பயிரிடப்படுகிறது. உலர்நில முறையில், விதைகள் நேரடியாக விளைநிலத்தில் விதைக்கப்பட்டு, பின் முளைத்தலுக் கேற்ப அதிகப்படியான நெல் நாற்றுக்கள் களையப்படுகின்றன.

நீர்நில முறையில், நெல் விதைகள் நாற்றங்கால் எனப்படும் சிறிய நிலத்தில் விதைக்கப்பட்டு நாற்றுக்களான பின்னர், வயலில் சரியான இடைவெளியில் நடப்படுகின்றன. இம்முறைகளின் பெயர் குறிப்பிடுவது போல, நீர்நில முறைக்கு அதிக நீர் தேவை. நீர் நில முறையிலும் நேரடி விதைப்பு மூலம் நெல் விதைக்கப்பட்டு பின்னர் முளைத்தலுக்கேற்ப, அதிகமாக முளைத்த இடத்திலுள்ள நாற்றுகள் குறைவாக முளைத்த இடங்களில் நடப்படுகிறது.

Tags : Kariyapatti ,Narikudi , Kariyapatti, Narikudi, continuous rains, rice cultivation work, farmers intensive,
× RELATED நரிக்குடி அருகே தொழிலாளியை அரிவாளால்...