சிவகாசி மாநகராட்சிக்கு சிறப்பு நிதி ரூ.49.2 கோடி வழங்க அரசு ஒப்புதல்: சாலை சீரமைப்பு பணிகளை தொடங்க முடிவு

சிவகாசி: சிவகாசி மாநகராட்சிக்கு   நூற்றாண்டு நிதியாக ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.49.2 கோடி வழங்க தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. சிவகாசி நகராட்சியாக இருந்தபோது, அதன் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, நகரில் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்காக கடந்த அதிமுக ஆட்சியில் ரூ.49.2 கோடி சிறப்பு நிதி ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.  அதன்பின் சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டதால், அவசர கதியில் தவறாக அரசாணை வெளியிடபட்டது. இதனால், நூற்றாண்டு  நிதி வரவில்லை.

கடந்த 2021 அக்.21ல் சிவகாசி, திருத்தங்கல் நகராட்சிகள் மற்றும் சுற்றியுள்ள ஆணையூர், விஸ்வநத்தம், தேவர்குளம் உள்ளிட்ட 7 ஊராட்சிகள் இணைக்கப்பட்டு சிவகாசி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. அப்போது புதிய மாநகராட்சியில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த ரூ.10 கோடி நிதி வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி இந்த ஆண்டு பட்ஜெட்டிலும்  நிதி ஒதுக்கப்பட்டது.  நிதிக்குழு ஒப்புதல் பெற வேண்டும் என்பதால், ரூ.10 கோடி வருவதில் தாமதம் ஏற்பட்டது.

இந்நிலையில், நூற்றாண்டு நிதியில் மாநகராட்சி பகுதியில் உள்ள 22.16 கி.மீ தூர சாலைகள் சீரமைப்பு, நீர்நிலைகள் புனரமைப்பு உள்ளிட்ட 55 திட்டப்பணிகளுக்கு ஒப்பந்தம் விடப்பட்டு ஆரம்ப கட்ட பணிகள் ஏற்கனவே நடைபெற்று வந்தன. ஆனால், அரசாணையில் எந்த தலைப்பின் கீழ், சிவகாசி நகராட்சி நூற்றாண்டு நிதி ஒதுக்கப்படுகிறது  என  குறிப்பிடாததால்  நிதி ஒதுக்கப்பட வில்லை என அதிகாரிகள் தெரிவித்ததால் அந்த பணிகள் அனைத்தும் கிடப்பில் போடப்பட்டது. இது குறித்து தொழில்துறை அமைச்சரான தங்கம் தென்னரசு கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அதன்பின் 2020ம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணை திருத்தப்பட்டு  இந்த ஆண்டு ஆக.3ம் தேதி  உரிய தலைப்பின் கீழ், நூற்றாண்டு நிதி ஒதுக்கப்பட்டது.   ஆனால், திருத்தப்பட்ட அரசானைக்கு சட்டப்பேரவையில் ஒப்புதல் பெற வேண்டும்.

இந்நிலையில், தற்போது நடைபெறும் சட்டப்பேரவை கூட்டத் தொடரில், நூற்றாண்டு நிதி அரசாணைக்கு அரசு ஒப்புதல் பெறப்பட்டு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளதாக நகராட்சி நிர்வாக  துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிதியில் வடகிழக்கு பருவமழைக்காலம் முடிந்த பின்,  மாநகராட்சி பகுதிகளில் சாலைகள் சிரமைப்பு, மழைநீர் வடிகால் பணிகள் தொடங்கபடும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: