×

துரித உணவகத்தில் பதுக்கி வைத்து ஆன்லைனில் கஞ்சா விற்ற 2 பேர் கைது: 10 கிலோ கஞ்சா, ரூ.40 ஆயிரம், பைக் பறிமுதல்

சென்னை: ராயப்பேட்டையில் உள்ள துரித உணவகத்தில் கஞ்சா பதுக்கி, ஆன்லைன் மூலம் விற்பனை செய்து வந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். ராயப்பேட்டை திருவிக சாலையில் உள்ள ஒரு துரித உணவகத்தில் கஞ்சா பதுக்கி, வாடிக்கையாளர்களுக்கு ஆர்டரின் பேரில் ஆன்லைன் மூலம் விற்பனை செய்து வருவதாக ராயப்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் வாடிக்கையாளர் போல் ஆன்லைன் மூலம் அந்த துரித உணவக நிர்வாகிகளிடம் கஞ்சா கேட்டுள்ளனர். அதற்கு அவர்கள், இது உயர் ரக கஞ்சா. இதனால் ரூ.2,500  ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும் என்று கேட்டுள்ளனர். அதன்படி போலீசார் ரூ.2,500 செலுத்தி உள்ளனர்.  அதற்கு துரித உணவக நிர்வாகிகள் கோபாலபுரம் விளையாட்டு மைதானம் அருகே நில்லுங்கள், உங்களுக்கு தேவையான கஞ்சா வந்து கொடுக்கப்படும், என்று கூறினர். பிறகு போலீசார் வாடிக்கையாளர் போல் ஒருவரை விளையாட்டு மைதானம் அருகே நிற்க வைத்தனர்.

மற்றவர்கள் சாதாரண உடையில் அந்த பகுதியில் பதுங்கி இருந்தனர். ஆர்டர்படி துரித உணவகத்தில் இருந்து வாலிபர் ஒருவர் பைக்கில் வந்து விளையாட்டு மைதானம் அருகே நின்று இருந்தவரிடம், கஞ்சாவை கொடுத்தார். அப்போது அங்கு மறைந்து இருந்த போலீசார் கஞ்சா கொண்டு வந்த நபரை சுற்றி வளைத்து கைது செய்தனர். பிறகு காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்திய போது, ராயப்பேட்டை பகுதியை சேர்ந்த முன்வர் மியான் (45) என்பது தெரியவந்தது.பின்னர் முன்வர் மியான் கொடுத்த தகவலின்படி, போலீசார் துரித உணவகத்தில் அதிரடி சோதனை நடத்தி 8 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர். கஞ்சா பதுக்கி வைத்திருந்ததாக துரித உணவகம் நடத்தி வந்த அப்துல் கபார் (45) என்பவரையும் கைது செய்தனர்.

இதைதொடர்ந்து அப்துல் கபார் அளித்த தகவலின்படி அவர்கள் வீடுகளில் இருந்து 2 கிலோ கஞ்சா, ரூ.40 ஆயிரம், பைக் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டது. இருவரிடமும் நடத்திய விசாரணையில், போலீஸ் கெடுபிடியால் ஆந்திராவில் இருந்து கஞ்சா வருவதில்லை. இதனால் ஒடிசா மாநிலத்தில் இருந்து ரயில் மூலம் கஞ்சா கடத்தி வந்து, துரித உணவகத்தில் வைத்து தங்களது வாடிக்கையாளர்களுக்கு ஆன்லைன் ஆர்டர் மூலம் ரகசியமாக அவர்கள் இடத்திற்கே சென்று விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. பிறகு கைது செய்யப்பட்ட 2 பேரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags : 2 arrested for stashing in a fast food restaurant and selling ganja online: 10 kg of ganja, Rs.40 thousand, bike seized
× RELATED சென்னை புளியந்தோப்பு அருகே...