×

உக்ரைன் போரில் ரஷ்யா புதிய உத்தி ஈரான் டிரோன்கள் மூலம் தாக்குதல்: பீதியில் கீவ் நகர மக்கள்

மாஸ்கோ: ஈரானிடம் இருந்து வாங்கிய ‘கமிஹாசி’ டிரோன் விமானங்கள் மூலம் உக்ரைன் தலைநகர் கீவ்வில் ரஷ்யா தீவிர தாக்குதல் நடத்தியதால் மீண்டும் பீதி ஏற்பட்டுள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நேற்றுடன் 237வது நாளை எட்டியது. போரில் கைப்பற்றிய லுஹான்ஸ்க் உள்ளிட்ட நகரங்களை ரஷ்யா இணைத்துக் கொண்டது. இதனால் 3ம் உலகப்போருக்கு வழிவகுக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது. உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஆயுதம் மற்றும் நிதி உதவி அளித்து வருகின்றன. இந்நிலையில், போரில் ஏராளமான ஆயுதங்களை ரஷ்யா இழந்து விட்ட நிலையில், தனது தாக்குதலில் புதிய பாணியை கையில் எடுத்துள்ளது. உக்ரைன் தலைநகர் கீவ் நோக்கி நேற்று காலை ரஷ்யா வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட ஏராளமான டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்தியது. அவை பல குடியிருப்புகள், கட்டிடங்களை தகர்த்தது.

இதில் ஏற்பட்ட பலி விவரங்கள் குறித்து வெளியிடப்படவில்லை. ஆனால், இந்த டிரோன் தாக்குதலால் மின் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதிகளில் டிரோன்கள் சரமாரி தாக்குதல் நடத்தப்பட்டதால் கீவ் மக்களும் பீதி அடைந்துள்ளனர். கமிஹாசி எனப்படும் இந்த டிரோன்களை ஈரானிடமிருந்து ரஷ்யா கடந்த சில மாதங்களுக்கு முன் வாங்கியதாக அமெரிக்கா தகவல் வெளியிட்டது. இந்த டிரோன்களை ரேடார் மூலம் கண்டறிவது மிகவும் கடினம். மிக தாழ்வாக பறக்கக் கூடியது. மிக வேகமாக தொலைதூர இலக்கையும் தகர்க்க முடியும். இது, சுமார் 2000 கிமீ வரை கூட பயணிக்கும் என ஈரான் கூறியுள்ளது. இந்த ஆளில்லா டிரோன் விமானங்ககளை ரஷ்யா பயன்படுத்தியது இதுவே முதல்முறையாகும்.


Tags : Russia ,Ukraine ,Iran ,Kyiv , Russia's New Strategy in Ukraine War Strikes with Iran Drones: Kyiv City Residents in Panic
× RELATED உக்ரைனில் ரஷ்யா நடத்திய ஏவுகணைத்...