சான் டியாகோ ஓபன் டென்னிஸ் ஸ்வியாடெக் சாம்பியன்: இந்த ஆண்டின் 8வது பட்டம்

சான் டியாகோ: அமெரிக்காவில் நடந்த சான் டியாகோ ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில், நம்பர் 1 வீராங்கனை இகா ஸ்வியாடெக் சாம்பியன் பட்டம் வென்றார். பைனலில் குரோஷியாவின் டோனா வேகிச்சுடன் (26 வயது, 77வது ரேங்க்) மோதிய ஸ்வியாடெக் (21 வயது, போலந்து) 6-3 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி முன்னிலை பெற்றார். 2வது செட்டில் கடும் நெருக்கடி கொடுத்த வேகிச் 6-3 என வென்று பதிலடி கொடுக்க சமநிலை ஏற்பட்டது.

எனினும், கடைசி செட்டில் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய ஸ்வியாடெக், வேகிச்சின் சர்வீஸ் ஆட்டங்களை எளிதாக முறியடித்து 6-3, 3-6, 6-0 என்ற செட் கணக்கில் வெற்றியை வசப்படுத்தி கோப்பையை முத்தமிட்டார். விறுவிறுப்பான இப்போட்டி 1 மணி, 47 நிமிடத்துக்கு நீடித்தது. ஸ்வியாடெக் நடப்பு சீசனில் பிரெஞ்ச் ஓபன், யுஎஸ் ஓபன் கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள் உள்பட  8 டபிள்யூ.டி.ஏ பட்டங்கள் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. தகுதிச் சுற்றில் வென்று முதன்மைச் சுற்றுக்குள் நுழைந்த டோனா வேகிச், பைனல் வரை  முன்னேறியதால் தரவரிசையில் 30 இடங்கள் முன்னேறி 47வது இடத்தை  பிடித்துள்ளார்.

Related Stories: