×

கடைசி ஓவரில் ஷமி மேஜிக் பயிற்சி ஆட்டத்தில் ஆஸி.யை வீழ்த்தியது இந்தியா

பிரிஸ்பேன்: உலக கோப்பை டி20 தொடருக்கான பயிற்சி ஆட்டத்தில், ஷமி வீசிய கடைசி ஓவரின் கடைசி 4 பந்தில் 4 விக்கெட்டை பறிகொடுத்த ஆஸ்திரேலிய அணி எதிர்பாராத வகையில் அதிர்ச்சி தோல்வியை சந்தித்தது. ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உலக கோப்பை டி20 தொடரின்  தகுதிச் சுற்று ஆட்டங்கள் நடந்து வரும் நிலையில், சூப்பர் 12 சுற்றுக்கு நேரடியாக தகுதி பெற்றுள்ள அணிகளுக்கான பயிற்சி ஆட்டங்களும் நடக்கின்றன. பிரிஸ்பேனில் நேற்று நடந்த  பயிற்சி ஆட்டம் ஒன்றில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆஸி. பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்தியா 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 186 ரன் குவித்தது.  ராகுல் 57 ரன் (33 பந்து, 6 பவுண்டரி, 3 சிக்சர்),  சூரியகுமார் 50 ரன் (33 பந்து, 6 பவுண்டரி, 1 சிக்சர்),  தினேஷ் கார்த்திக் 20 (14 பந்து, 1 பவுண்டரி, 1 சிக்சர்),கோஹ்லி 19,  ரோகித் 15  ரன் எடுத்தனர்.

ஆஸி. பந்துவீச்சில் கேன் ரிச்சர்ட்சன் 4, ஸ்டார்க், மேக்ஸ்வெல், ஏகார் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 187 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸி. அணி ஆரம்பத்தில் வெளுத்துக்கட்டியது. மிட்செல் மார்ஷ் 35 ரன் (18 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்), மேக்ஸ்வெல் 23,  ஸ்டீவன் ஸ்மித் 11 ரன்  எடுத்து வெளியேறினர். பொறுப்புடன் விளையாடிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் 76 ரன் (54 பந்து, 7 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி ஹர்ஷல் படேல் வீசிய 19வது ஓவரின் முதல் பந்தில் கிளீன் போல்டானார். அடுத்த பந்தில் இங்லிஸ் (5 ரன்) கோஹ்லியால் அபாரமாக ரன் அவுட் செய்யப்பட, ஆஸி. 18.2 ஓவரில் 171 ரன்னுக்கு 6 விக்கெட் என சற்று பின்னடைவை சந்தித்தது. கடைசி ஓவரில் ஆஸி. வெற்றிக்கு 11 ரன் தேவைப்பட்ட நிலையில், அதுவரை பந்துவீசாத ஷமிக்கு வாய்ப்பு கொடுத்தார் கேப்டன் ரோகித். முதல் 2 பந்திலும் கம்மின்ஸ் தலா 2 ரன் எடுக்க, 4 பந்தில் 7 ரன் தேவைப்பட்டது.

ஆஸி. அணி எளிதாக வெற்றி பெறும் என எதிர்பார்த்த நிலையில், கடைசி 4 பந்தில் 4 விக்கெட்டையும் பறிகொடுத்த அந்த அணி 20 ஓவரில் 180 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி 6 ரன் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியை சந்தித்தது. ஆஸ்திரேலியா 9 ரன்னுக்கு கடைசி 6 விக்கெட்டை பறிகொடுத்தது குறிப்பிடத்தக்கது. இந்திய பந்துவீச்சில் ஷமி 3, புவி 2, அர்ஷ்தீப், சாஹல் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். முதல் பயிற்சி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்தியா, 2வது மற்றும் கடைசி பயிற்சி ஆட்டத்தில் நாளை நியூசிலாந்து அணியின் சவாலை சந்திக்கிறது.


Tags : India ,Aussies ,Shami magic ,match , India defeated Aussies in Shami magic practice match in the last over
× RELATED குற்ற பின்னணியில் உள்ளவர்களை...