வரும் டிசம்பரில் ஹன்சிகா காதல் திருமணம்?

மும்பை: வரும் டிசம்பர் மாதம் ஹன்சிகா காதல் திருமணம் நடக்கும் என்றும், இதற்காக ஜெய்ப்பூரில் 450 ஆண்டுகள் பழமையான அரண்மனை ஒன்றில் தடபுடல் ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தி டி.வி தொடர்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஹன்சிகா, பிறகு தெலுங்கு படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். பிறகு சில இந்தி மற்றும் கன்னடப் படங்களில் நடித்தார். தமிழில் வெளியான ‘மஹா’ படத்தின் மூலம் 50 படங்களை முடித்துள்ள அவர், தற்போது தமிழிலும், தெலுங்கிலும் பல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், அவருக்கு வரும் டிசம்பர் மாதம் புகழ்பெற்ற ஜெய்ப்பூர் அரண்மனையில் திருமணம் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக 450 ஆண்டுகள் பழமையான ஜெய்ப்பூர் கோட்டை மற்றும் அரண்மனை புதுப்பிக்கப்பட்டு வருகிறதாம்.

டிசம்பர் மாதம் திருமணம் என்பது உறுதி செய்யப்பட்டாலும், எந்த நாளில் நடக்கும்? மணமகன் யார் என்ற தகவல் வெளியாகவில்லை. ஆனால், அவர் காதல் திருமணம் செய்வார் என்றும், மணமகன் ஒரு தொழிலதிபர் என்றும் கூறப்படுகிறது. இதுவரை ஹன்சிகா தரப்பில் இச்செய்தி உறுதி செய்யப்படவில்லை. கடந்த 2013ல் சிம்புவுடன் ஹன்சிகாவை இணைத்து செய்திகள் வெளியானது. ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டனர். தற்போது வெளியாகியுள்ள செய்திப்படி, ஏதாவது சினிமா படம் அல்லது பிரமாண்டமான விளம்பரத்துக்காக ஹன்சிகா திருமண செய்தி பரப்பப்படுகிறதா என்று பலர் முணுமுணுத்து வருகின்றனர்.

Related Stories: