×

கல்லூரி மாணவியை கொலை செய்த விவகாரம் கொலையாளி சதீஷின் வாட்ஸ்அப் குழு நண்பர்களிடம் சிபிசிஐடி விசாரணை: சத்யாவுடன் படிக்கும் தோழிகளிடம் விசாரிக்க முடிவு

சென்னை: கல்லூரி மாணவியை ரயில் முன்பு தள்ளி கொலை செய்த விவகாரத்தில், அவர் வசித்து வந்த வசித்து வந்த ஆலந்தூர் குடியிருப்புவாசிகள் மற்றும் கொலையாளி சதீஷின் வாடஸ்அப் குழு நண்பர்களிடம் எஸ்ஐ தலைமையிலான சிபிசிஐடி போலீசார் நேற்று விசாரணை நடத்தி முக்கிய தகவல்களை பதிவு செய்து கொண்டனர். சென்னை ஆலந்தூரில் உள்ள காவலர் குடியிருப்பை சேர்ந்தவர் மாணிக்கம்(47). கால் டாக்சி டிரைவரான இவருக்கு, மனைவி ராமலட்சுமி (43), சத்யா(20), தரணி(16), செல்வி(3) என மூன்று மகள்கள். மனைவி ராமலட்சுமி ஆதம்பாக்கம் காவல் நிலைய தலைமை காவலராக பணியாற்றி வருகிறார். மூத்த மகள் சத்யா, தி.நகரில் உள்ள ஜெயின் கல்லூரியில் பி.காம் 2ம் ஆண்டு படித்து வந்தார். சத்யாவை அதே பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற சிறப்பு உதவி ஆய்வாளர் தயாளன் என்பவரின் மகன் சதீஷ்(24) என்பவர் காதலித்தார். இதனால் சதீஷுடன் பழகுவதை சத்யா நிறுத்தினார். இதனால் சதீஷ் கடந்த ேம மாதம் சத்யாவிடம் தகராறு செய்துள்ளார்.

இதுகுறித்து சத்யா பெற்றோர் சார்பில் சதீஷ் மீது மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேநேரம் சத்யாவுக்கு மாப்பிள்ளை பார்த்து அவரது பெற்றோர் நிச்சயதார்த்தம் செய்ய முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளை செய்து வந்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த சத்யா கடந்த வியாழக்கிழமை கல்லூரிக்கு செல்ல பரங்கிமலை ரயில் நிலையத்திற்கு வந்த சத்யாவிடம் தகராறு செய்து, அவரை ரயில் முன்பு தள்ளி கொலை செய்தார். இதுகுறித்து மாம்பலம் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து சதீஷை கைது செய்து நீதிமன்ற உத்தரவுப்படி வரும் 28ம் தேதி வரை புழல் சிறையில் அடைத்தனர்.

பின்னர் மாம்பலம் ரயில்வே காவல் நிலையத்தில் இருந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டார். அதைதொடர்ந்து சிபிசிஐடி போலீசார் கடந்த சனிக்கிழமை முதல் கல்லூரி மாணவி சத்யா வழக்கை எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்டமாக சம்பவம் நடந்த பரங்கிமலை ரயில் நிலையம் மற்றும் சத்யா வசிக்கும் ஆலந்தூர் காவலர் குடியிருப்பு வரை உள்ள சிசிடிவி பதிவுகளை பெற்று விசாரணை நடத்தி வருகின்றனர். அதில் சத்யாவை சதீஷ் ரயில் முன்பு தள்ளி விடும் வீடியோ பதிவு ரயில்வே நடைபாதையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது. அந்த வீடியோவை வைத்து சிபிசிஐடி போலீசார் நேரில் விசாரணை நடத்தினர்.

இதைத்தொடர்ந்து ஆலந்தூர் காவலர் குடியிருப்புவாசிகளிடம் சிபிசிஐடி உதவி ஆய்வாளர் ஒருவர் தலைமையிலான போலீசார் சத்யா மற்றும் சதீஷ் குறித்து நேற்று விசாரணை நடத்தினர். சதீஷின் வாட்ஸ்அப் குழுவில் உள்ள நெருங்கிய நண்பர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. பிறகு, சம்பவத்தன்று மின்சார ரயிலை இயக்கிய டிரைவர் கோபாலிடம் விசாரணை நடத்தமுடிவு செய்யப்பட்டது. அதன்படி, நேற்று மாலை அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, சத்யா தள்ளி கொலை செய்யப்பட்டது குறித்து விசாரித்து வாக்குமூலமாகவும் பதிவு செய்யப்பட்டது. மாணவி சத்யா வழக்கை சிபிசிஐடி எஸ்பி தலைமையில் இரண்டு டிஎஸ்பிக்கள் செல்வகுமார், புருசோத்தமன் மற்றும் 4 பெண் இன்ஸ்பெக்டர்கள் தனித்தனியாக விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும் திட்டமிட்டுள்ளனர். அடுத்தகட்டமாக சத்யாவுடன் கல்லூரியில் படித்து வரும் தோழிகள், வீட்டின் அருகே உள்ள நெருங்கிய தோழிகளிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Tags : CBCID ,Satish ,WhatsApp ,Satya , CBCID probes killer Satish's WhatsApp group friends in college student murder case: Decides to interrogate Satya's classmates
× RELATED ஆருத்ரா மோசடி வழக்கில் கைது...