×

சட்டப்பேரவை மழைக்கால கூட்ட தொடர் துவக்கம்: மறைந்த ராணி எலிசபெத், முலாயம் சிங், சேடப்பட்டி முத்தையாவுக்கு இரங்கல்; ஓபிஎஸ்சின் இருக்கையை இடம் மாற்றாததால் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களுடன் பங்கேற்கவில்லை

சென்னை: தமிழக சட்டசபையின் மழைக்கால கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. இதில் மறைந்த இங்கிலாந்து ராணி எலிசபெத், உ.பி. முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவ், சேடபட்டி முத்தையா உள்ளிட்டோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. தமிழக சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத் தொடர் நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை கூடத்தில் தொடங்கியது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் காலை 9.57 மணிக்கு பேரவை அரங்குக்கு வந்தார். அவருக்கு அமைச்சர்கள், திமுக எம்எல்ஏக்கள் மற்றும் கூட்டணி கட்சி எம்எல்ஏக்கள் அனைவரும் எழுந்து நின்று வரவேற்பு அளித்தனர். அவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்து இருக்கையில் அமர்ந்தார்.

தொடர்ந்து 9.58 மணியளவில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி துணை தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் வந்தார். அவருடன்  அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்களான வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், அய்யப்பன் ஆகியோர் வந்தனர். எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கையில் ஓ.பன்னீர் செல்வம் அமர்ந்தார். சரியாக காலை 10 மணிக்கு சட்டசபை கூட்டம் தொடங்கியது. சபாநாயகர் அப்பாவு திருக்குறள் ஒன்றை வாசித்து அதற்கான விளக்கத்தையும் கூறினார். அதனைத் தொடர்ந்து, மறைந்த முன்னாள் எம்எல்ஏக்கள் அ.மு.அமீது இப்ராகிம், கே.கே.வீரப்பன், ஏ.எம்.ராஜா, எஸ்.பி.பச்சையப்பன், எஸ்.புருஷோத்தமன், பெ.சு.திருவேங்கடம், தே.ஜனார்த்தனன், பே.தர்மலிங்கம், எம்.ஏ.ஹக்கீம், கோவை தங்கம் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று 2 மணித்துளிகள் மவுன அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து ராமநாதபுரம் இளைய மன்னர் நாகேந்திர குமரன் சேதுபதி, இந்திய விடுதலை போராளி அஞ்சலை பொன்னுசாமி அம்மாள், இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத், மலேசிய இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் எஸ்.சாமிவேலு, கேரளாவை சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் கோடியேரி பாலகிருஷ்ணன், உத்தரபிரதேச மாநில முன்னாள் முதல்வர் முலாயம் சிங் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. மேலும் மறைந்த முன்னாள் சபாநாயகர் சேடபட்டி முத்தையா மறைவுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. பின்னர் சபாநாயகர் அப்பாவு அவையை ஒத்திவைப்பதாக அறிவித்தார். காலை 10 மணிக்கு தொடங்கிய கூட்டம் காலை 10.11 மணியளவில் முடிவடைந்தது. மீண்டும் இன்று காலை 10 மணிக்கு சட்டப்பேரவை கூடும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.

நேற்றைய பேரவை கூட்டத்தில் காங்கிரஸ், பாஜ, ஒபிஎஸ் அணி அதிமுக எம்எல்ஏக்கள், பாமக, மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இந்திய, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மனித நேய மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். ஆனால் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது அணியை சேர்ந்த எம்எல்ஏக்கள் யாரும் நேற்றைய பேரவை கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்னை வெடித்துள்ள நிலையில், ஒபிஎஸ்- இபிஎஸ் அணியினர் தனித்தனியாக செயல்பட்டு வருகின்றனர். இதனால் எப்படியாவது அதிமுக பொதுச்செயலாளர் பதவியை கைப்பற்றிவிட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.

இதற்கு முட்டுக்கட்டை போடும் வகையில், ஒபிஎஸ் அணியினர் உச்சநீதிமன்றம் வரை சென்று பொதுக்குழு கூட்டம் நடத்துவதற்கு இடைக்கால தடை பெற்றுள்ளார். இதன்காரணமாக அவர்கள் இடையே மோதல் போக்கு உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இதற்கிடையில் சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியை ஒபிஎஸ்சிடம் இருந்து பறிப்பதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அத்துடன் எதிர்க்கட்சி துணைத் தலைவராக முன்னாள் அமைச்சர் ஆர்பி.உதயகுமார் செயல்படுவார். அவரை அங்கீகரிக்க வேண்டும். சட்டப்பேரவை அலுவல் ஆய்வு கூட்டத்தில் அவர் பங்கேற்க அனுமதிக்கவேண்டும் என்றும் சபாநாயகர் மற்றும் சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் ஆகியோரிடம் இபிஎஸ் அணியினர் 4 முறை மனு அளித்துள்ளனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஒபிஎஸ், ‘அதிமுக ஒருங்கிணைப்பாளர் நான் தான், அதிமுக பொதுச்செயலாளர் விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளது. எனவே, அதிமுக தொடர்பாக என்ன முடிவு எடுத்தாலும் என்னை கலந்தாலோசித்து தான் முடிவு செய்யவேண்டும்’ என்று சபாநாயகரிடம் 2 முறை மனு அளித்துள்ளார். இந்த பரபரப்பான சூழ்நிலையில் தான்பேரவை நேற்று கூடியது. எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கையில் ஒபிஎஸ் தான் அமர்ந்திருந்தார். அவரது ஆதரவு எம்எல்ஏக்களான வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன், ஐயப்பன் ஆகியோர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் அமர்ந்திருந்தனர். ஆனால் சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, ஓபிஎஸ் இருக்கை அருகில் அமரவேண்டும் என்பதற்காக நேற்றைய சட்டப்பேரவை கூட்டத்தை புறக்கணித்தார்.

அவரது ஆதரவு அதிமுக எம்எல்ஏக்கள் யாரும் கூட்டத்தில் பங்றேக்கவில்லை. இதன் காரணமாக அவர்களின் இருக்கைகள் அனைத்தும் காலியாக இருந்தது. பேரவை முடிந்தபின் சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வு குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பேரவை முன்னவர் அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, பொன்முடி, துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, அரசு தலைமை கொறடா கோவி.செழியன்,  எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அந்தந்த கட்சிகளின் சட்டப்பேரவை கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர். ஆனால் எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி.வேலுமணி ஆகியோர் கலந்து கொள்ளவில்லை.

* பவுன்சர்கள் புடைசூழ வந்த ஓபிஎஸ்
பேரவையில் பங்கேற்பதற்காக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் வந்தார். அப்போது, ஓபிஎஸ் பாதுகாப்புக்காக 3 பவுன்சர்கள் அவரை சுற்றி பாதுகாப்புக்காக வந்தனர். பவுன்சர்கள் புடைசூழ அவர் வந்தார். தொடர்ந்து அவர் எம்எல்ஏக்கள் செல்லும் நுழைவாயிலில் சட்டப்பேரவை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்றார். அப்போது ஓபிஎஸ்சுக்கு பாதுகாப்புக்கு வந்த 3 பவுன்சர்களை போலீசார் தடுத்தனர். பேரவைக்குள் செல்ல அனுமதி இல்லை. பவுன்சர்களை அனுமதிக்க முடியாது என்று திருப்பி அனுப்பினர். இதை தொடர்ந்து அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். தனது பாதுகாப்புக்காக ஓபிஎஸ் பவுன்சர்களை ஈடுபடுத்தியது பேரவை வளாகத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. அதே நேரத்தில் ஓபிஎஸ் சட்டப்பேரவைக்கு உள்ளே செல்லும் போது ஏராளமான தொண்டர்கள் ஓபிஎஸ் வாழ்க...வாழ்க... என்று கோஷங்களை எழுப்பினர்.

Tags : Monsoon Session ,Late ,Queen Elizabeth ,Mulayam Singh ,Sedapatti Muthiah ,Edappadi Palaniswami ,OPS , Legislature Monsoon Session Begins: Tribute to Late Queen Elizabeth, Mulayam Singh, Sedapatti Muthiah; Edappadi Palaniswami did not participate with his supporters as the seat of OPS was not shifted
× RELATED நெல்லை – சென்னை விரைவு ரயில் தாமதமாக புறப்படும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு