
குலசேகரம்: கன்னியாகுமரி மாவட்டத்தின் முக்கியமான சுற்றுலாத்தலமாக திற்பரப்பு அருவி விளங்குகிறது. இதை குமரியின் குற்றாலம் என்று அழைக்கின்றனர். மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து உற்பத்தியாகும் கோதையாறு இங்கு அருவியாக விழுகிறது. இதனால் ஆண்டின் பெரும்பாலான நாட்களிலும் அருவியில் தண்ணீர் கொட்டுகிறது. இதற்கிடையே கடந்த சில வாரங்களாக கடும் வெயில் கொழுத்தியதாலும், மழை இல்லாததாலும் கோதையாற்றில் தண்ணீர் வருகை குறைவாக இருந்தது. இதனால் திற்பரப்பு அருவியில் மிதமான அளவு தண்ணீர் கொட்டியது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக குமரி மாவட்டத்தில் மழை பெய்து வருகிறது. மலை பகுதிகள், மலையோர பகுதிகளிலும் தொடர்ந்து சாரல் மழை, கனமழை என்று மழை பெய்து வருகிறது. இதனால் நீர் நிலைகளுக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்து உள்ளது. திற்பரப்பு அருவியிலும் சில நாட்களாக தண்ணீர் அதிகரித்து எல்லா பகுதிகளிலும் பரந்து விரிந்து ஆர்ப்பரித்து கொட்டுகிறது. தண்ணீர் தெளிந்த நிலையில் பால் போன்று வெண்மை நிறத்துடன் கொட்டுகிறது. மதிய நேரத்திலும் குளிர்ச்சியாக இருக்கும் தண்ணீரில் குளிப்பது சுற்றுலா பயணிகளை குதுகலப்படுத்துகிறது.
நேற்று ஞாயிற்று கிழமை விடுமுறை நாள் என்பதால் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. வானம் எப்போதும் மேகமூட்டமாகவும், மப்பும் மந்தாரமுமாக காட்சியளித்தது. அவ்வப்போது இதமான தென்றலும் வீசியதால் ரம்மியமான சூழல் நிலவியது. நேற்று இரவு தொடங்கி இன்று காலை வரை திற்பரப்பு அருவி பகுதியில் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் குளு, குளு சீசன் நிலவுகிறது. மழை காரணமாக இன்று காலையில் பயணிகள் கூட்டம் குறைவாக இருந்தது.