×

கோமுகி அணையில் 10 ஆயிரம் கனஅடிநீர் வெளியேற்றம்: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

சின்னசேலம்: கல்வராயன்மலையில் பெய்த கனமழையின் காரணமாக கோமுகி அணையில் இருந்து 10,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையடிவாரத்தில் கச்சிராயபாளையம் அருகே கோமுகி அணை உள்ளது. இந்த அணையின் நீர்மட்டம் 46 அடியாகும். இருப்பினும் கரைகளின் பாதுகாப்பு கருதி 44 அடி நீர் மட்டும் சேமிப்பது வழக்கம். இந்த அணையின் முதன்மை கால்வாய் மூலம் 5000 ஏக்கர் விவசாய நிலமும், ஆற்று பாசனத்தின் மூலம் 5860 ஏக்கர் விவசாய நிலமும் பாசன வசதி பெறுகிறது.

மேலும் இரு பாசனத்தின் மூலமும் சுமார் 40 கிராமங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் கோமுகி அணை கடந்த 2ம்தேதி பாசனத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது. கோமுகி அணையின் நீர்மட்டம் கடந்த 2ம்தேதி அணை திறப்பிற்கு முன் நிலவரப்படி 43.60 அடியாக இருந்தது. இந்நிலையில் அணை திறக்கப்பட்டு ஆற்றில் வினாடிக்கு 60 கனஅடியும், கால்வாயில் வினாடிக்கு 50 கனஅடியும் பாசனத்திற்கு திறந்து விடப்பட்டது. இதனால் அணையின் நீர்மட்டம் 40 அடியாக குறைந்து இருந்தது. இந்நிலையில் கல்வராயன்மலையில் கடந்த 4 நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது.

இதனால் கடந்த 3 நாட்களுக்கு முன்பு அணையின் நீர்மட்டம் 43 அடியாக இருந்தது. மேலும் அணைக்கு 3,700 கனஅடி நீர்வரத்து இருந்தது. அதை அப்படியே ஆற்றில் திறந்து விடப்பட்டது. நேற்று இரவு கல்வராயன்மலையில் பெய்த கனமழையின் காரணமாக கோமுகி அணைக்கு வினாடிக்கு 10,000கனஅடி நீர்வரத்து இருந்தது. இதனால் நள்ளிரவு ஒரு மணி அளவில் அணையின் நீர்மட்டம் 44 அடியாக உயர்ந்தது. இதையடுத்து கரைகளின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் 10,000 கனஅடி நீரையும் அப்படியே ஆற்றில் திறந்துவிடப்பட்டது.

இதனால் கச்சிராயபாளையம், கள்ளக்குறிச்சி ஆற்று பாலங்களில் பொதுமக்கள் கூடி நின்று வேடிக்கை பார்த்தனர். கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் கோமுகி அணையில் இருந்து நள்ளிரவு ஒரு மணியில் இருந்து காலை 10 மணிவரை தொடர்ந்து 10,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வந்தது. அதன்பிறகு நீர்வரத்தின் அளவை பொருத்து நீர் வெளியேற்றப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.


Tags : Komukhi Dam , 10,000 cubic feet of water released in Komuki Dam: Flood warning for coastal people
× RELATED சம்பா பருவம் முடிந்த நிலையிலும் கோமுகி அணையில் 41 அடி தண்ணீர் இருப்பு