விஜிலென்ஸ் அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற பஞ்சாப் மாஜி காங். அமைச்சர் கைது: ரூ.50 லட்சத்துடன் கையும் களவுமாக சிக்கினார்

சண்டிகர்: விஜிலென்ஸ் அதிகாரிக்கு ரூ. 50 லட்சம் லஞ்சம் கொடுக்க முயன்ற பஞ்சாப் மாநில முன்னாள் அமைச்சர் சுந்தர் ஷாம் அரோரா என்பவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரும், பஞ்சாப் மாநில முன்னாள் தொழில்துறை மற்றும் வர்த்தக அமைச்சருமான சுந்தர் ஷாம் அரோரா மீது சொத்து குவிப்பு புகார் எழுந்ததால், அவர் மீது மாநில லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

தொடர்ந்து அவரிடம் கடந்த செப். 21ம் தேதி லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடத்தியது. இந்த நிலையில், லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரியான ஏஐஜி மன்மோகன் குமாரிடம் தன் மீதான வழக்குகளை சுமூகமாக முடித்துக் கொடுக்க வேண்டும் எனக்கோரி, சுந்தர் ஷாம் அரோரா பேரம் பேசியுள்ளார். அதற்காக ரூ. 50 லட்சம் லஞ்சம் தருவதாக கூறியுள்ளார்.

சுந்தர் ஷாம் அரோராவுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று விரும்பிய ஏஐஜி மன்மோகன் குமார், குறிப்பிட்ட இடத்தில் ரூ. 50 லட்சம் பணத்துடன் வருமாறு கூறியுள்ளார். அதன்படி மொஹாலி அடுத்த ஜிராக்பூருக்கு ரூ. 50 லட்சம் பணத்துடன் சுந்தர் ஷாம் அரோரா வந்தார். அப்போது அவர் ஏஐஜி மன்மோகன் குமாரிடம் பணத்தை கொடுக்க முயன்ற போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் சுந்தர் ஷாம் அரோராவை கையும் களவுமாக கைது செய்தனர்.

இதுகுறித்து விஜிலென்ஸ் பிரிவு ஏடிஜிபி வரீந்தர் குமார் கூறுகையில், ‘விஜிலென்ஸ் அதிகாரி மன்மோகன் குமாருக்கு, ரூ.50 லட்சம் லஞ்சம் கொடுக்க முயன்ற சுந்தர் ஷாம் அரோரா கைது செய்யப்பட்டார். தற்போது அவரிடம் தொடர் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன’ என்றார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சுந்தர் ஷாம் அரோரா, கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் பாஜகவில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: