×

கயத்தாறில் இரவில் பயங்கரம்; வெள்ளாளர் முன்னேற்றக்கழக நிர்வாகி குத்திக்கொலை: வீடு புகுந்து கும்பல் வெறிச்செயல்

தூத்துக்குடி: கயத்தாறில் நேற்றிரவு வெள்ளாளர் முன்னேற்றக் கழக நிர்வாகி வீடுபுகுந்து சரமாரியாக குத்திக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 7 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு சக்திவிநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவரது மனைவி ரேவதி. இவர்களது மகன் சுரேஷ் (20). திண்டுக்கல்லில் கேட்டரிங் படித்து வந்த இவர், கொரோனா ஊரடங்கால் படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு தற்போது பெயின்டிங் மற்றும் சமையல் வேலைக்கு சென்று வந்தார். மேலும் வெள்ளாளர் முன்னேற்றக்கழக தூத்துக்குடி மாவட்ட பொருளாளராகவும் இருந்து வந்தார். பாலசுப்பிரமணியன் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.

இந்நிலையில் நேற்றிரவு சுரேஷ், வீட்டில் இருந்தார். அப்போது காரில் வந்த கும்பல், அவரது வீடுபுகுந்து சுரேஷை சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு தப்பினர். இதில் படுகாயமடைந்த அவரை, நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சுரேஷை பரிசோதித்த டாக்டர்கள் அவர், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

தகவல் அறிந்து கயத்தாறு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், வெள்ளாளர் முன்னேற்றக்கழக மாநில அமைப்பு செயலாளர் பாளை சாந்திநகரைச் சேர்ந்த பந்தல்ராஜா, தென் மாவட்ட மகளிர் அணி தலைவி மதுரை அன்னலட்சுமி ஆகியோர் இருகோஷ்டிகளாக செயல்பட்டு வந்தனர்.

இதில் கொலையுண்ட சுரேஷ், அன்னலட்சுமிக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தார். மேலும் கடந்த ஒரு மாதத்திற்கு முன் கயத்தாறில் வஉசி பேரவை என்ற அமைப்பை தொடங்கினார். இந்த அமைப்பின் தலைவராக கயத்தாறு அருகே உள்ள பன்னீர்குளத்தைச் சேர்ந்த சங்கரும், பொருளாளராக சுரேசும் செயல்பட்டு வந்தனர். இதற்கு பந்தல்ராஜா எதிர்ப்பு தெரிவித்து போனில் அழைத்து கண்டித்ததாக தெரிகிறது. மேலும் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இருவரும் கருத்துக்களை பதிவிட்டு மோதிக் கொண்டனர். பந்தல்ராஜாவுக்கு ஆதரவாக கயத்தாறைச் சேர்ந்த வெயில்முத்து, அஜித் கண்ணன் ஆகியோர் செயல்பட்டு வந்தனர்.

இந்நிலையில் நேற்றிரவு 9.45 மணியளவில் சுரேஷ் வீட்டிற்கு சென்ற கும்பல், வீட்டின் வெளியில் அமர்ந்திருந்த அவரது தாய் ரேவதியிடம் ‘உனது மகன் எங்கே’? என்று கேட்டுள்ளனர். அதற்கு அவர், வீட்டிற்குள் இருப்பதாக கூறியதையடுத்து அந்த கும்பல் அதிரடியாக நுழைந்து அங்கிருந்த சுரேஷை சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு சென்று விட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதுதொடர்பாக கயத்தார் போலீசார் வழக்கு பதிந்து பந்தல்ராஜா, இசக்கிராஜா, கிறிஸ்டோர்மார்ட்டின், மாரியப்பன், வெயில்முத்து, அஜித்கண்ணன், ஆரோக்கியராஜ் ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தையடுத்து அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Tags : Gayathar ,Vellalar Munnetra Kazhagam , Terror at night in Gayathar; Vellalar Munnetra Kazhagam executive stabbed to death: Home invasion gang rampage
× RELATED கயத்தாறில் துணை ராணுவத்தினர் போலீசார் கொடி அணிவகுப்பு