மதுபானக் கொள்கை வழக்கில் டெல்லி துணை முதல்வர் சிபிஐ முன் ஆஜர்

புதுடெல்லி: மதுபானக் கொள்கை வழக்கில் தொடர்புடைய டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, இன்று டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார். டெல்லி அரசின் மதுபானக் கொள்கை வழக்கில் டெல்லி துணை முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவருமான மணீஷ் சிசோடியா மீது சிபிஐ வழக்குபதிவு செய்தது.

இந்த விவகாரத்தில் மணீஷ் சிசோடியா உள்ளிட்டோரின் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி இருந்தனர். அவரது வங்கி லாக்கரையும் சோதனையிட்டனர். தொடர்ந்து இன்று காலை 11 மணிக்கு டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் ஆஜராகுமாறு மணீஷ் சிசோடியாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

அதையடுத்து அவர் இன்று காலை சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகும் முன்பாக டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார். அதேபோல் அவரது தாயாரிடமும் ஆசீர்வாதம் பெற்றுவிட்டு, சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார்.

அவரிடம் மதுபானக் கொள்கை விவகாரத்தில் மணீஷ் சிசோடியாவிற்கு உள்ள தொடர்புகள் குறித்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். முன்னதாக சிபிஐ அலுவலகம் முன் ஆம்ஆத்மி கட்சியினர் அதிகளவில் குவிந்ததால், அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Related Stories: