காங். தலைவர் தேர்தல்!: டெல்லியில் உள்ள தலைமை அலுவலகத்தில் வாக்களித்தார் மூத்த தலைவர் சோனியா காந்தி..பெல்லாரியில் வாக்களித்தார் ராகுல்காந்தி..!!

டெல்லி: காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி, மூத்த தலைவர் சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் வாக்களித்தனர். 22 ஆண்டுகளுக்கு பிறகு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கு தேர்தல் நடைபெற்று வருகிறது.  காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலில் காந்தி-நேரு குடும்பத்தைச் சேர்ந்த சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி என யாருமே போட்டியிடவில்லை. காங்கிரஸ் கட்சியின் தலைமை பதவிக்கான தேர்தலில் கட்சியின் மூத்த தலைவர்களான மல்லிகார்ஜூன கார்கே மற்றும் சசி தரூர் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. அனைத்து மாநிலங்களிலும் தற்போது வாக்குப்பதிவு தொடங்கியது.

காலை 10 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு, மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது. டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் தலைமை அலுவலகம் உட்பட நாடு முழுவதும் 65 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, பொதுச் செயலர் பிரியங்கா ஆகியோர் டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தனர். மூத்த தலைவர்கள் பலரும் வாக்களித்தனர்.

இதை தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி வாக்களித்தார். இந்திய ஒற்றுமை நடைபயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, கர்நாடகா மாநிலம் பெல்லாரியில் வாக்களித்தார். பெல்லாரி மாவட்டத்தில் உள்ள சங்கனகல்லு கிராமத்தில் ராகுல் காந்தி தனது வாக்கை பதிவு செய்தார். ராகுல் காந்தியுடன் நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.சுரஷும் தனது வாக்கை பதிவு செய்தார். 

Related Stories: