×

சுற்றுலாத்துறை மேம்பாட்டு திட்டங்கள் ‘ஜோரு’ சுருளி அருவியில் விரைவில் சிறுவர் பூங்கா திறப்பு

* கடந்த அதிமுக ஆட்சியில் ‘எல்லாமே’ அலங்கோலமானது
* தற்போது சீரமைக்கப்படுவதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி

கம்பம் : தேனி மாவட்டத்தில், கம்பம் அருகே உள்ள புகழ் பெற்ற சுற்றுலாத்தலமான சுருளி அருவி முக்கிய சுற்றுலாத்தலமாகவும், புண்ணிய தலமாகவும் விளங்குகிறது. ஹைவேவிஸ் மலைப்பகுதியில் பெய்யும் மழைநீர் மற்றும் தூவானம் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் சுமார் 9 கிமீ தூரம் அடர்ந்த வனப்பகுதி வழியாக பல்வேறு மூலிகை செடிகளில் கலந்து சுருளி அருவியாக கொட்டுகிறது.

இதில் குளித்தால் நோய்கள் குணமாகும் என்பது ஐதீகம். இதனால் தேனி மட்டுமல்லாது திண்டுக்கல், மதுரை, சிவகங்கை உள்ளிட்ட வெளிமாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
இதே போல் இறந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யவும் ஏராளமானவர்கள் சுருளி அருவிக்கு வந்து செல்கின்றனர். இதனால் தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

சுருளி அருவிக்கு வரும் சுற்றுலாபயணிகளிடம் வனத்துறை சார்பில் நுழைவு கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ.30ம், 5 வயதுக்கு மேல் 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு ரூ.20 ம் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது. ஆனால் நுழைவு கட்டணம் செலுத்தும் அளவிற்கு போதிய வசதிகள் செய்யப்படாததால் வெளிமாநில, வெளிநாடு சுற்றுலா பயணிகள் வருகை இல்லை.

இந்நிலையில் சுற்றுலா தளத்தை மேம்படுத்தும் விதமாகவும், சுற்றுலாப் பயணிகளிடம் வன வளம், அதன் சிறப்புகளை எடுத்துக்கூறும் வகையிலும், பொழுதுபோக்கைப் பயனுள்ளதாக்கும் வகையில் சிறுவர் பூங்கா, கடைகள், வன செயல் விளக்க மையம் அமைப்பதற்கான வரைபடங்கள், திட்ட மதிப்பீடுகளை தயார் செய்த மேகமலை வன உயிரின சரணாய அதிகாரிகள் கடந்த 2018ம் ஆண்டு அப்போதைய அதிமுக அரசுக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து கடந்த அதிமுக ஆட்சியில் தமிழக அரசின் சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் துவங்கின.ஆனால் துவங்கிய வேகத்திலேயே பணிகள் முடங்கின. தற்போது உள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் உத்தரவின் பேரில் நிறுத்தப்பட்ட சிறுவர் பூங்கா மற்றும் வன செயல் விளக்க கூடம் மீண்டும் துவங்கி நடைபெற்று வருகிறது. சுருளி அருவியை மேம்படுத்துவதற்காக புலிகள் காப்பகத்தினர் பல்வேறு வளர்ச்சி பணிகளை தொடங்க உள்ளனர்.

சிறுவர் பூங்கா, கண்காட்சியகம், மூலிகை பண்ணை, சுற்றுச்சூழல் பாதுகாக்கும் வகையில் தயாரிக்கப்படும் பொருள்கள் விற்பனை மையம், உணவருந்தும் அரங்கம், முதியோர் குளிக்க ஷவர் குழாய், பேருந்து இயக்கம், பேட்டரி கார், சுற்றுலா பயணிகளுக்கான சைக்கிள் சவாரி உள்ளிட்டவைகள் அமைக்க பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது.

இதுகுறித்து சுற்றுலாப் பயணிகள் கூறுகையில், ‘‘கடந்த 2021ம் ஆண்டு மே 7ம் தேதி தமிழகத்தின் முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற முதல் நாளில் இருந்தே களப்பணியை தொடங்கி விட்டார். அவற்றில் மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளன. இதில் பல்வேறு திட்டங்கள் நாட்டிற்கே முன்னுதாரணமாக திகழ்கிறது.  

தேனி மாவட்டத்தில் போடி, கம்பம், சின்னமனூர், ஆண்டிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. குறிப்பாக சுற்றுலா மேம்பாட்டிற்கான திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. வைகை அணை, சுருளி அருவி போன்ற சுற்றுலா இடங்களில் கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட பணிகள் கடந்த அதிமுக ஆட்சியில் ஆமை வேகத்தில் இருந்ததும், தற்போது ராக்கெட் வேககத்தில் படுஜோராக நடந்து வருகிறது’’ என்றனர்.

மாதத்தோறும் ரூ.10 லட்சம் வசூல்

சுருளி அருவிக்கு நாளொன்றுக்கு சுமார் 300 முதல் 1000 நபர்கள் வரை வருகின்றனர். இவர்கள் மூலமாக நுழைவுக் கட்டணமாக மாதத்தோறும் ரூ.3 லட்சத்தில் இருந்து 10 லட்சம் வரை பணம் வனத்துறைக்கு வசூலாகிறது.இப்பணம் மூலம் சுருளி அருவியில் தற்காலிக ஊழியர்களாக பணியாற்றி வரும் நபர்களுக்கு மாத சம்பளமாக ரூபாய் கொடுக்கப்படுகிறது. நுழைவு கட்டணம் வசூலிக்கும் இடத்தில் இருந்து சுருளி அருவிக்கு செல்ல வனத்துறை சார்பில் வாகன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 2 கிலோமீட்டர் தூரமுள்ள அருவிக்கு வாகன கட்டணமாக ரூ.10 வசூலிக்கப்படுகிறது.காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை பொதுமக்கள் குளிக்க அனுமதி உண்டு.

அபூர்வ மூலிகைகள் நிறைந்துள்ளது

முப்பத்து முக்கோடி தேவர்களும், எண்ணாயிரம் ரிஷிகளும் தவம் செய்த இடமாகவும், இன்றும் சித்தர்கள் வாழும் பூமியாக சுருளிமலை உள்ளது என்று மக்களால் நம்பப்படுகிறது. அதற்கு சான்றாக அபூர்வ மூலிகைகள், கைலாசநாதர் குகை, விபூதி சித்தர் குகை, சுருளி தீர்த்தம், சன்னாசியப்பன், கன்னிமார் கோயில் கள் போன்றவைகள் மற்றும் ஆண்டு முழுவதும் நீர் வரத்து வரும் சுருளி அருவி. தமிழகத்தின் அனைத்து பகுதி மற்றும் அருகில் உள்ள கேரள மாநில மக்கள் என நாள்தோறும் பல ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் இடமாக சுருளி அருவி உள்ளது.

வனவிலங்குகள் நடமாட்டம் அதிகம்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள சுருளி அருவி தேனி மாவட்டத்தில் வனத்துறையாக கம்பம் வனச்சரகமாக இருந்தது, பின்னர் கிழக்கு மேற்கு என 2 வனச்சரகங்களாக பிரிக்கப்பட்டு, மேகமலை வன உயிரின சரணாலயமாக அறிவிக்கப்பட்டது, அதன் பின்னர் திருவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகமாக மாற்றப்பட்டு பல்வேறு நடைமுறைகள் சுருளி அருவியில் கையாளப்பட்டது.சுருளி அருவியில் இலவசமாக குளித்த மக்கள், விடுமுறை காலங்களில் சுற்றுலா வருபவர்களால் மது குடித்து தகராறில் ஈடுபடுவது, வழிப்பறி, ஆதாய கொலை போன்றவைகள் சரணாலயம் மற்றும் புலிகள் காப்பகமாக மாறியபோது முற்றிலும் தடைசெய்யப்பட்டது. இப்போது சுற்றுச்சூழல் பாதுகாப்பு பகுதியாக வன விலங்குகள் தாராளமாக நடமாடும் பகுதியாக உள்ளது.

பேட்டரி கார்க்கிள் சவாரி இயக்கப்படுமா?

சிறுவர் பூங்கா, மூலிகை தோட்டம், உணவருந்தும் அரங்கம் உள்ளிட்ட பணிகள் துரிதப்படுத்த வேண்டும். பேட்டரி கார்க்கிள் சவாரி போன்றவைகளை இயக்க வேண்டும். பெண்கள் உடை மாற்றும் அறையில் பராமரிப்பு செய்தல், புதிய கழிப்பறைகள் அமைத்தல், அருவியின் நுழைவு வாயிலில் ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், மின்சார விளக்குகள் அமைத்தல் உள்ளிட்டவைகள் தொடங்க கலெக்டர் நிர்வாகம், புலிகள் காப்பகத்தினர் மூலம் நடவடிக்கை எடுத்து, ஏற்கனவே சுற்றுலாத்துறை அறிவித்த மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.

Tags : Tourism Development ,Joru , Suruli Falls, Childrends Park,Tourist
× RELATED தாளாளர் பாராட்டு மாவட்டத்தின்...