×

ஊட்டி - கல்லட்டி மலைப்பாதையில் ரோலர் கிரஸ் பேரியர் அமைக்கும் பணி விரைவில் முடியுமா?

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில் அபாயகர சாலையாக விளங்கும் கல்லட்டி மலைப்பாதையில் பாதியில் நிற்கும் ரோலர் கிரஸ் பேரியர் அமைக்கும் பணிகளை முழுமையாக மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.  நீலகிாி மாவட்டத்தில் உள்ள சாலைகளிலேயே கல்லட்டி மலைப்பாதை மிகவும் செங்குத்தாகவும், அதிக வளைவுகளை கொண்டதாகவும் காணப்படுகிறது.

 ஊட்டியில் இருந்து கூடலூர் வழியாக மைசூர் செல்வதை காட்டிலும் மசினகுடி - கல்லட்டி மலைப்பாதை வழியாக செல்வதால் நேரம் மற்றும் தூரம் குறைவு என்பதால் பெரும்பாலானோர் இச்சாலையை பயன்படுத்துகின்றனர். இச்சாலையில் 12 கி.மீ., தூரம் வரை அபாயகரமான மற்றும் மிகவும் குறுகிய 36 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன.

செங்குத்தாக உள்ள இச்சாலையில் விபத்துகளை குறைக்கும் வகையில், ஒவ்வொரு கொண்டை ஊசி வளைவுகளிலும் அபாயகரமான இடங்களில் இரும்பு தடுப்புகள், வேகத்தடைகள், வளைவுகளில் எதிரே வரும் வாகனம் தெரியும் வண்ணம் கான்வெக்ஸ் கண்ணாடிகள் போன்றவை அமைக்கப்பட்டாலும் விபத்துகள் குறைந்தபாடில்லை.

இதுதவிர, இச்சாலையில் சரிவாக கீழ் நோக்கி செல்லும் போது கண்டிப்பாக இரண்டாவது கியரில் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு எச்சரிக்கை பலகைகளும் வைக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் அதனை பொருட்படுத்தாமல் 3 மற்றும் 4வது கியரில் வாகன ஓட்டிகள் பயணிக்கின்றனர். அவ்வாறு செல்லும் போது பிரேக் டிரம் சூடாகி கார் பிரேக் பிடிக்காமல் விபத்திற்குள்ளாக நேரிடுகிறது. இதனால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.

குறுகிய வளைவுகளையும், சரிவுகள் நிறைந்த அபாயகரமான இச்சாலை வழியாக ஊட்டியில் இருந்து பயணிக்கும் வெளியூர் சுற்றுலா பயணிகள் வாகனங்களை முறையாக இயக்க தெரியாமல் விபத்தில் சிக்குவதும், உயிரிழப்புகள் ஏற்படும் தொடர்கதையான நிலையில், கடந்த 2018ம் ஆண்டு ஏற்பட்ட விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.

இதனை தொடர்ந்து உள்ளூர் வாகனங்களை தவிர வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநில வாகனங்கள் இச்சாலை வழியாக ஊட்டியில் இருந்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தலைக்குந்தா பகுதியில் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு காவல்துறையினர் மூலம் வெளியூர் வாகனங்கள் கூடலூர் வழியாக திருப்பி விடப்படுகின்றன.

இதுதவிர, கல்லட்டி மலைப்பாதையில் ஏற்படும் விபத்துகளை குறைத்திடும் வகையில் நீலகிரி மாவட்ட காவல்துறை பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒருபகுதியாக, விபத்துகள் அதிகம் நடைபெற்ற 8 இடங்கள் அடையாளம் காணப்பட்டு அப்பகுதிகளில் விபத்துகளை குறைக்கும் வகையில் ரோலர் கிரஸ் பேரியர் பொருத்த நெடுஞ்சாலை துறை திட்டமிட்டது.

 ரோலர் கிரஸ் பேரியர் அமைப்பதால் இப்பகுதியில் எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கும் வாகனங்கள் அதாவது வேகமாக வந்து பிரேக் பிடிக்காமல் தடுப்பில் மோதினால், வாகனங்கள் பள்ளங்களில் விழாமல் தடுத்து ரோலரில் சுற்றிக் கொண்டு மீண்டும் சாலைக்கே வந்து விடும்.
இதனால், வாகனங்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுவது தவிர்க்கப்படுவதுடன், லேசான காயங்களுடன்  பயணிகள் உயிர் தப்ப முடியும் என தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து 2019ம் ஆண்டு 5 பேர் விழுந்து உயிரிழந்த 34வது கொண்டை ஊசி வளைவுவில் விபத்துகளை தடுக்கும் ரோலர் கிரஸ் பேரியர் சோதனை முயற்சியாக அமைக்கப்பட்டது. அதன் பின் இப்பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் இதற்கு அடுத்துள்ள வளைவில் ரோலர் பேரியர் அமைக்கும் பணிகள் பாதியிலேயே நிற்கின்றன.

எனவே இப்பணிகளை முழுமையாக முடிப்பதுடன், தேர்வு செய்யப்பட்ட இடங்களிலும் பொருத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதேபோல் கல்லட்டி அருகே சாிவு சாலையில் மேல் இருந்து கீழாக வாகனங்கள் இடது புறமாக செல்வதை உறுதி செய்யும் வகையில் நடுவே தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் இடதுபுறம் மட்டும் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. இவற்றில் செல்ல விருப்பமில்லாத வாகன ஓட்டிகள் வலதுபுறமாக வாகனத்தை இயக்குகின்றனர். இதனை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Tags : Gallatti , Ooty, Kallati,Roller cross barrier
× RELATED கல்லட்டி மலை பாதையில்...