செய்யாறு அடுத்த பழஞ்சூர் கிராமத்தில் விஜயநகர கால கல்வெட்டு கண்டெடுப்பு

செய்யாறு : செய்யாறு அடுத்த பழஞ்சூர் கிராமத்தில் கி.பி. 15ம் நூற்றாண்டின் விஜயநகர காலத்து தானம் வழங்கிய தகவல் அடங்கிய கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், பழஞ்சூர் கிராமத்தில் பழமையான மரகதாம்பிகை சமேத மாவடி ஈஸ்வரன் கோயில் உள்ளது. சிதிலமடைந்திருந்த இக்கோயிலை புனரமைக்கும் பணி சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது. அப்போது, கோயிலுக்குள் புதைந்த நிலையில் கல்வெட்டு கிடைத்தது.

இதுகுறித்து ஊராட்சி எழுத்தர் கார்த்திகேயன் கொடுத்த தகவலின் பேரில், வரலாற்று ஆய்வாளர் செல்வகுமார் நேரில் சென்று ஆய்வு செய்தார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது: பழஞ்சூர் கிராமம், சோழர் காலத்தில் தொண்டை மண்டலம், காழியூர் கோட்டம், புரிசை வளநாட்டில் இருந்ததாக அறிய முடிகிறது. பழமலை நாயகி சமேத பழமலைநாதன் சிவன் கோயில் இருந்ததாகவும் அக்கோயில் விஜயநகர அரசு காலத்தில் மேலும் பொலிவடைந்திருப்பதும் தெரியவந்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் பல இடங்களில் விஜயநகர அரசின் காலத்தை சேர்ந்த கோயில் கட்டிடங்களும், தடயங்களும் கிடைத்துள்ளது. அந்த வகையில் இந்த ஊரில் கல்வெட்டு கிடைத்துள்ளது. இந்த கல்வெட்டு கி.பி. 15ம் நூற்றாண்டை சேர்ந்தவை என்றாலும், அதற்கு முற்பட்டதாகவும் கருத வாய்ப்பு உண்டு.

இக்கல்வெட்டில் தானம் கொடுத்த வகையில், 40 பாகமாக பிரித்து கொடுத்த தகவலை அறிய முடிகிறது. இதன் தொடர்ச்சியான கல்வெட்டு காணவில்லை. அதில், மேலும் தகவல்கள் இருக்க வாய்ப்புண்டு. அறப்பணிக்கு தானம் வழங்கிய தகவல், காலத்தால் அழியாத ஆவணமாக உள்ளது.  இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: