×

தமிழக முதல்வர் அறிவிப்புக்கு பெருகுது வரவேற்பு திண்டுக்கல் வனப்பகுதியில் தேவாங்கு சரணாலயம்

*அழிவின் பிடியில் இருந்து பாதுகாக்கும் அரசாணை என வன ஆர்வலர்கள் மகிழ்ச்சி

வடமதுரை, : திண்டுக்கல், கரூர் வனக்கோட்டங்களை உள்ளடக்கி 11,806 ஹெக்டேர் பரப்பளவு வனப்பகுதியை தேவாங்கு சரணாலயமாக அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருப்பதற்கு வன ஆர்வலர்கள் பெரிதும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். தமிழக அரசு, திண்டுக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களை உள்ளடக்கிய 11,806 ஹெக்டேர் பரப்பளவிலான வனப்பகுதியை தேவாங்கு சரணாலயமாக அறிவிக்கை செய்து கடந்த சில நாட்களுக்கு முன்பு அரசிதழில் வெளியிட்டுள்ளது.

அழிந்து வரும் தேவாங்கு இனத்தை பாதுகாக்கும் வண்ணம் தமிழ்நாடு அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இந்தியாவில் தேவாங்குகளுக்கு அமைக்கப்படும் முதல் சரணாலயம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அறிவிப்பால் வன ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட வன அலுவலர் பிரபு கூறியதாவது: திண்டுக்கல் மற்றும் கரூர் வனக்கோட்டத்தில் உள்ள அரிய வகை அழிந்து வரும் தேவாங்கு உயிரினங்களை பாதுகாக்க சரணாலயம் அமைத்தலுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் அறிவிப்பு வெளியிடப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளித்துள்ளது. திண்டுக்கல் வனக்கோட்டத்தின் மொத்த வனப்பகுதி 817.7936 சதுர கிலோமீட்டர். கரூர் வனக்கோட்டம் 67.03 சதுர கிலோமீட்டர் ஆகும். இது மேற்குத் தொடர்ச்சி மலைகள் மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைகளை உள்ளடக்கிய கோட்டமாகும். சாம்பல் நிற தேவாங்குகள் திண்டுக்கல், கரூர் வனக்கோட்ட பகுதிகளில் மட்டுமே காணப்படுகிறது.

திண்டுக்கல் வனக்கோட்டத்திற்கு உட்பட்ட பண்ணமலை, தண்ணீர்கரடு, தொப்பா சாமிமலை, முடிமலை போன்ற வனப்பகுதிகளில் சுமார் 6106.38 ஹெக்டேர் பரப்பளவிலும் மற்றும் கரூர் வனக்கோட்டத்திற்கு உட்பட்ட டி, இடையபட்டி பகுதி 1, பகுதி 2, பகுதி 3, பகுதி 4, மற்றும் முள்ளிப்பாடி, பாலவிடுதி, செம்பியாநத்தம் ஆகிய வனப்பகுதிகளில் சுமார் 5700.18 ஹெக்டேர் பரப்பளவில் தேவாங்கு உயிரினங்கள் இருப்பது தொடர்பாக சலீம் அலி பறவையியல் - இயற்கை வரலாற்று மையம், ஆனைக்கட்டி மற்றும் வனப்பணியாளர்களுடன் இணைந்து கணக்கெடுப்பு செய்ததில் மொத்தமாக 11806.56 ஹெக்டேர் பரப்பளவில் சுமாராக 974 தேவாங்குகள் இருப்பது தெரியவந்தது.

ஆயுட்காலம் 12 ஆண்டு:

தேவாங்கு என்பது இரவில் இரைதேடும் ஒரு சிறிய பாலூட்டி விலங்காகும். உருவத்தில் இது 18-26 சென்டிமீட்டர் (7-20 அங்குலம்) நீளமும், 350 கிராம் எடையுமே உள்ள சிறு விலங்கு ஆகும். பூச்சிகளையும், பறவை முட்டைகளையும், சிறு பல்லிகளையும் உண்ணும். சில சமயங்களில் இலை தளைகளையும் உண்ணும். சுமார் 166 - 169 நாட்கள் கருவுற்று ஒன்று முதல் இரண்டு குட்டிகளை ஈனுகின்றன.

பிறந்த குட்டிகளுக்கு ஆறு முதல் ஏழு மாதம் வரை பாலூட்டி வளர்க்கின்றன. இதன் ஆயுட்காலம் 10 முதல் 12 ஆண்டுகள் ஆகும். தேவாங்குகளின் உடலில் உள்ள ஒவ்வொரு பகுதியும் மருத்துவ குணம் உடையது என உள்ளூர் மக்களால் நம்பப்படுகிறது. இதுவும் தேவாங்குகளின் அழிவுக்கு ஒரு காரணமாகும். 1972ம் ஆண்டு வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின்படி தேவாங்கு அட்டவணை ஒன்றின் கீழ் பாதுகாக்கப்படுகிறது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சட்டப்பேரவையில் விதி 110ன் கீழ் திண்டுக்கல் மற்றும் கரூர் வனக்கோட்டங்களில் தேவாங்கு அதிகம் வாழுகின்ற இடங்களை வன உயிரின சரணாலயம் ஆக அறிவிக்க செய்வதற்கான அறிவிப்பினை வன உயிரின பாதுகாப்பு சட்டம் 1972 பிரிவு 26 ஏ(1)(பி)ன் கீழ் வெளியிட்டுள்ளார்.

ரூ.5 கோடி ஒதுக்கீடு:

தேவாங்கு வன உயிரின சரணலாய அறிவிப்பு இந்த அரிய இனத்தின் பாதுகாப்பு மற்றும் அறிவியல் பூர்வமான மேலாண்மைக்கு உதவும். இந்த அறிவிப்புக்கான கணக்கெடுப்பு மதிப்பீடுகளை உள்ளடக்கிய விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பிற்கு 2022- 2023 முதல் 2025- 2026 வரை திண்டுக்கல் மற்றும் கரூர் வனக்கோட்டங்களின் பணிகள் மேற்கொள்ள ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினார்.


‘சுற்றுலா வளரும்’

சமூக ஆர்வலர் மகுடீஸ்வரன் கூறுகையில், ‘‘தமிழக அரசு எங்கள் பகுதியில் தேவாங்கு வன உயிரின சரணாலயம் அமைக்க அரசாணை அறிவித்தது இப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது. எங்கள் பகுதியில் அடையாளம் தெரியாத வாகனங்கள் மோதி காயம்பட்ட 15க்கும் மேற்பட்ட தேவாங்குகளை மீட்டு பாதுகாப்பாக அய்யலூர் வனச்சரகத்திடம் ஒப்படைத்துள்ளோம். இங்கு சரணாலயம் அமைவதன் மூலம் தேவாங்குகள் பாதுகாக்கப்படுவதுடன், எங்கள் பகுதி சுற்றுலாத்தலமாக மாறி வளர்ச்சி அடையும்’’ என்றார்.

கர்ப்பிணிகள் பார்த்தால்...?

சமூக ஆர்வலர் ஐயப்பன் கூறுகையில், ‘‘நான் 5 ஆண்டுகளாக இப்பகுதிகளில் தொண்டு நிறுவனங்களுடன் சேர்ந்து 30 கிராமங்களுக்கு மேல் சென்று தேவாங்கு பாதுகாப்பு விழிப்புணர்வு நடத்தி வருகிறேன். கருவுற்ற தாய்மார்கள் தேவாங்கினை கண்டால் தேவாங்கு போல் குழந்தை பிறக்கும் என்ற மக்களிடையே இருந்த மூடநம்பிக்கைகளை மாற்றும் வகையில் விழிப்புணர்வு மூலம் தானாக முன்வந்த கர்ப்பிணி தாய்மார்கள் தேவாங்குகளை பார்வையிட்டனர்.

அந்த பெண்களுக்கு அழகான குழந்தைகள் பிறந்தது. இதன்மூலம் மக்கள் தேவாங்கு மீது இருந்த மூடநம்பிக்கைகளை கைவிட்டனர். தேவாங்கு அழிவதற்கான காரணங்களை கண்டறியும் போது மலைக்கிராமத்தில் உள்ள பள்ளி சிறுவர்கள் ஓணானை அடிப்பது போல், தேவாங்கையும் பிடித்து கட்டி வைத்து அடித்து கொன்று வந்ததும் தெரியவந்தது. நாங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி இதனை தடுத்துள்ளோம்.
விவசாயிகள் பூச்சிக்கொல்லி மருந்து அடித்ததன் காரணமாக தேவாங்குகள் இரைக்காக விளைநிலங்களில் வந்து பூச்சிகளை உட்கொள்ளும் போது இறக்க நேரிட்டது. விவசாயிகளிடம் இயற்கை முறையில் பயிர்களுக்கு ஏற்ப சில மூலிகை தாவரங்களை தெளிப்பதன் மூலம் பூச்சிகளை கட்டுப்படுத்தலாம் எனக்கூறி விழிப்புணர்வு செய்ததன் காரணமாக தேவாங்குகளின் எண்ணிக்கையை உயர்த்தியுள்ளோம். இந்தியாவிலேயே முதல் தேவாங்கு சரணாலயம் தமிழநாட்டில் இப்பகுதிகளில் அமைத்த தமிழக முதல்வருக்கு சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் சார்பாக தங்களின் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்’’ என்றார்.

Tags : Chief of Tamil Nadu ,Devangu Sanctuary ,Thintugul , Slender loris,Dindigul,Slender loris Sanctuary, Tamilnadu Government
× RELATED வதிலை கணவாய்பட்டியில் மாவட்ட கூடை பந்தாட்ட போட்டி