×

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது!: எதிர்க்கட்சி துணை தலைவர் பதவியில் நீடிக்கும் ஓபிஎஸ்..பேரவையை புறக்கணித்த ஈபிஎஸ் அணி..மறைந்த தலைவர்களுக்கு இரங்கல்..!!

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது. முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா உள்பட மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் கொண்டுவரப்பட்டது. ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கையில் அமர்ந்துள்ளார். எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியில் சபாநாயகர் எந்த மாற்றமும் செய்யவில்லை. சட்டப்பேரவையில் அதிமுக வரிசை இருக்கைகளில் மாற்றம் செய்யப்படவில்லை. இதன் மூலம் ஓ.பன்னீர்செல்வம் எதிர்கட்சித் துணைத் தலைவர் பதவியில் தொடர்ந்து நீடிக்கிறார்.

எதிர்கட்சித் துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமாரை அறிவிக்க வேண்டும் என்ற எடப்பாடி பழனிசாமி கோரிக்கை ஏற்கப்படவில்லை. வழக்கம் போல் எதிர்கட்சித் துணைத் தலைவர் இருக்கையில் பன்னீர்செல்வம் அமர்ந்துள்ளார். எதிர்கட்சித் துணைத் தலைவர் பதவியை ஓ.பி.எஸ். இடம் இருந்து பறிக்காததால் பழனிசாமி தரப்பு சட்டப்பேரவை கூட்டத்தை புறக்கணித்து சென்றது. சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியவுடன் இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்துக்கும் இரங்கல் தெரிவித்து தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

இந்திய விடுதலைப் போராளி அஞ்சலை பொன்னுசாமி அம்மாள் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதேபோல் மலேசிய இந்திய காங்கிரசின் முன்னாள் தலைவர் திரு எஸ்.சாமிவேலு மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து மார்க்சிஸ்ட் கட்சி மூத்த தலைவர் கொடியேரி பாலகிருஷ்ணன் மறைவுக்கும், உத்திரப்பிரதேச முன்னாள் முதல்வர் முலாயம் சிங் மறைவுக்கும்  இரங்கல் தெரிவிக்கப்பட்டு தமிழக சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டது.


Tags : Tamil Nadu Legislative Assembly Session ,OPS ,Vice President of Opposition ,EPS , Tamil Nadu Legislative Assembly Session, OPS, EPS
× RELATED பா.ஜ.க. கூட்டணியில் எத்தனை தொகுதிகளை ஏற்பது?-ஓ.பி.எஸ்.ஸுக்கு அதிகாரம்