×

விசாகப்பட்டினம் விமான நிலையம் எதிரே நள்ளிரவில் பரபரப்பு நடிகை ரோஜாவை கொல்ல முயற்சி: தாக்குதலில் உதவியாளர், போலீசார் படுகாயம்: ஜனசேனா கட்சி நிர்வாகிகள் 25 பேர் கைது

திருமலை: விசாகப்பட்டினம் விமான நிலையம் எதிரே அமைச்சர் ரோஜா உள்ளிட்டவர்களை தாக்கி கொல்ல முயற்சி நடந்துள்ளது. இது தொடர்பாக ஜனசேனா கட்சி நிர்வாகிகள் 25 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ஆந்திர மாநில அரசு ராயலசீமா, கடலோர ஆந்திரா, வட ஆந்திரா ஆகிய 3 பகுதிகளுக்கும் சம வளர்ச்சி அளிக்கும் விதமாக 3 தலைநகர் என்ற கொள்கையுடன் விசாகப்பட்டினத்தை நிர்வாக தலைநகராகவும், கர்னூலை நீதிமன்ற தலைநகராகவும், அமராவதியை சட்டப்பேரவை தலைநகராகவும் அறிவித்தது.

இதற்கு தெலுங்கு தேசம் கட்சி எதிர்ப்பு தெரிவித்து வருவதோடு, ஒரு மாநிலத்துக்கு ஒரு தலைநகரம் மட்டும் போதும் என வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில், மாநிலத்திற்கு 3 தலைநகரம் அமைக்க வேண்டும் என வட ஆந்திரா கூட்டு நடவடிக்கை குழுவினர் நேற்றுமுன்தினம் விசாக கர்ஜனை என்ற பெயரில் விசாகப்பட்டினத்தில் பிரமாண்ட பேரணி நடத்தினர். இதில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி நேரடி ஆதரவு தெரிவித்ததோடு, நடிகையும் அமைச்சருமான ரோஜா,  அமைச்சர் ஜோகிரமேஷ், எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர்.

பேரணி முடிந்த பின்னர் ரோஜா, ஜோகிரமேஷ், திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி உள்ளிட்டவர்கள் விசாகப்பட்டினம் விமான நிலையத்திற்கு வந்தனர். அதேபோல், ஜனசேனா கட்சியின் தலைவரான நடிகர் பவன் கல்யாண், விசாகப்பட்டினத்தில் மூன்று நாள் ஜனவாணி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக விசாகப்பட்டினம் விமான நிலையம் வர இருந்தார். அவரை வரவேற்பதற்காக 300க்கும் மேற்பட்ட ஜனசேனா கட்சி தொண்டர்கள் கூடியிருந்தனர்.

அப்போது, ஜனசேனா கட்சியினர் அமைச்சர்கள் மற்றும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினருக்கு எதிராக கோஷங்களை எழுப்பி, அவர்களின் வாகனங்களை தாக்கினர். இதில், ரோஜாவின் உதவியாளருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இன்ஸ்பெக்டர் நாகேஸ்வர ராவ், போலீசாரும் காயம் அடைந்தனர். பொதுமக்கள் பலரும் காயம் அடைந்தனர். விமான நிலையத்தில் வெளியே இருந்த பொருட்கள் சேதமாகின. கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இந்த தாக்குதல் தொடர்பாக ஜனசேனா கட்சியை சேர்ந்த 25 பேரை போலீசார் கைது செய்தனர். காவல்துறை பணிக்கு இடையூறு விளைவித்ததாகவும், அமைச்சர்களை கொல்ல முயன்றதாகவும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். நேற்று காலை ஸ்டேடியத்தில் நடைபெற இருந்த ஜனவாணி நிகழ்ச்சியில் பவன் கல்யாண் பங்கேற்க நேற்று முன்தினம் இரவு வந்தார். இதற்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை. அப்போது, பவன் கல்யாண் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் முற்றுகையிட்டனர்.

அப்போது, பவன் கல்யாண் திரும்ப செல்ல வேண்டும் என வலியுறுத்தியும், மூன்று தலைநகர் வேண்டும் எனக்கூறி ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, பவன் கல்யாணின் பேரணிக்கு தடை விதித்த போலீசார், நேற்று மாலை 4 மணிக்குள் புறப்பட்டு செல்லும்படி அவருக்கு நோட்டீஸ் வழங்கினர். இது குறித்து பவன் கல்யாண் கூறுகையில், ‘அரசு தான் எடுத்த முடிவை மக்களிடையே திணிக்க பார்க்கிறார்கள். பொதுமக்கள் எதிர்க்கட்சியினர் பேசமுடியாதபடி நெருக்கடி கொடுத்து அராஜக போக்கை அரசு கையாண்டு வருகிறது’ என்றார்.

தாக்குதல் குறித்து ரோஜா கூறுகையில், ‘விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற விசாக கர்ஜனை பேரணி 100 சதவீதம் வெற்றி பெற்ற நிலையில், இதனை பொறுத்துக் கொள்ள முடியாத பவன் கல்யாண் ஆதரவாளர்கள் எங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதற்கு பயப்பட மாட்டோம். பவன் கல்யாணின் சகோதரர் சிரஞ்சீவி, பிரஜா ராஜ்யம்  கட்சியை ஆரம்பித்து அவருக்கு ஒரு பெரிய பரிசு கிடைத்தவுடன் கட்சியை கலைத்து விட்டு சென்றார். அதேபோன்று பவன் கல்யாணும் மக்களுக்காக வரவில்லை. அவருக்கு உரிய பரிசு வந்து விட்டால் அவரும் கட்சியை கலைத்து விட்டு சென்று விடுவார். எங்கள் மீது கொலை முயற்சி செய்யும் விதமாக தாக்குதல் நடத்தியுள்ளனர்,’ என்றார்.


Tags : Roja ,Visakhapatnam airport ,Janasena , Actress Roja, attempt to kill, attack police injured, Janasena party executive, 25 people arrested
× RELATED ஆந்திராவில் மே 13ம் தேதி தேர்தல்...