திருவண்ணாமலையில் கோலாகலமாக தொடங்கியது மாநில இளையோர் தடகள போட்டி: 4 ஆயிரம் வீரர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு

திருவண்ணாமலை,: திருவண்ணாமலையில், 36வது மாநில இளையோர் தடகளப் போட்டி நேற்று கோலாகலமாக தொடங்கியது. அதனை, தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார்.திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட விளையாட்டு அரங்கத்தில், 36வது மாநில இளையோர் தடகளப் போட்டிகள் நேற்று தொடங்கியது.  

போட்டிகளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வி.மெய்யநாதன் தொடங்கி வைத்தார். விழாவுக்கு மாநில தடகளச்சங்க துணைத்தலைவர் எ.வ.வே.கம்பன் தலைமை தாங்கினார்.  வீரர்களின் அணிவகுப்புடன், கோலாகலமாக துவக்க விழா நடந்தது.  இப்போட்டிகள் வரும் 19ம் தேதி வரை தொடர்ந்து 4 நாட்கள் நடக்கிறது. இப்போட்டியில், 36 மாவட்டங்களை சேர்ந்த 4 ஆயிரம் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். அதையொட்டி, விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதில், 14 வயது, 16 வயது, 18 வயது மற்றும் 20 வயதுக்கு உட்பட்டவர்கள் என 4 பிரிவுகளில், ஓட்டம், குண்டு எறிதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், மும்முறை தாண்டுதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல், கம்பு ஊன்றி தாண்டுதல், தடை தாண்டிய ஓட்டம் உள்ளிட்ட போட்டிகள் நடக்கிறது. ஆண்கள் பிரிவில் 64 போட்டிகளும், பெண்கள் பிரிவில் 62 போட்டிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெறும் வீரர்கள், அசாம் மாநிலம், கவுகாத்தியில் அடுத்த மாதம் 11ம் தேதி முதல் 15ம் தேதி வரை நடைபெறும் தேசிய தடகள போட்டியில் பங்கேற்க உள்ளனர்.

Related Stories: