×

தீபாவளிக்கு புத்தாடை, பட்டாசு வாங்க அலைமோதும் கூட்டம் தி.நகர், புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்: கண்காணிப்பு கோபுரங்கள், நவீன கேமராக்கள் உதவியுடன் கொள்ளையர்களை கண்காணிப்பு

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புத்தாடைகள், இனிப்புகள், பட்டாசுகள் வாங்க தி.நகர், புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை பகுதிகளில் நேற்று ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டதால் ஷாப்பிங் களை கட்டியது. கூட்ட நெரிசலை பயன்படுத்தி கைவரிசையில் ஈடுபடும் கொள்ளையர்களை கைது செய்யும் வகையில் கண்காணிப்பு கோபுரங்கள், மற்றும் எப்ஆர்எஸ் கேமரா மூலம் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். தீபாவளி பண்டிகை வரும் 24ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் புத்தாடை, இனிப்பு, பட்டாசுகள் வாங்க கடைகளுக்கு படையெடுத்து வருகின்றனர். கொரோனா ஊரடங்கால் கடந்த 2 ஆண்டுகளாக வேலை இழந்து, வருவாய் இழந்து பலர் தவித்தனர். இதனால், தீபாவளி பண்டிகையை கொண்டாட முடியாமல் வீடுகளிலேயே முடங்கினர்.

இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகளை அரசு திரும்ப பெற்றதை தொடர்ந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளனர். எனவே, வழக்கத்தை விட இந்த ஆண்டு தீபாவளிக்கு வீட்டிற்கு தேவையான பொருட்கள், புத்தாடைகள் வாங்க தற்போது கடைகளில் மக்கள் அலைமோதி வருகிறது. குறிப்பாக, தி.நகர், புரசைவாக்கம், மயிலாப்பூர், பாண்டிபஜார், பாரிமுனை, வண்ணாரப்பேட்டை எம்சி ரோடு மற்றும் கோயம்பேடு போன்ற பகுதிகளில் ஷாப்பிங் களைகட்டி வருகிறது. வார விடுமுறை நாளான நேற்று மேற்கண்ட பகுதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. விழா காலங்களில் ஆந்திர மாநிலத்தில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட கொள்ளையர்கள் சென்னையில் முகாமிட்டு, கூட்ட நெரிசல் மிகுந்த பகுதிகளில் கைவரிசை காட்டி நகை, பணம் கொள்ளையடித்து செல்வது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு வழக்கம் போல் அதிகளவில் ஆந்திர மாநிலத்தில் இருந்து கொள்ளையர்கள் சென்னையில் முகாமிட்டுள்ளதாக கைவரிசை காட்ட திட்டுமிட்டு சுற்றி வருவதாக உளவுத்துறை மாநகர போலீசாருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.  

எனவே, போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவுப்படி கூடுதல் கமிஷனர்கள் அன்பு, பிரேம் ஆன்ந்த சின்ஹா தலைமையிலான போலீசார், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் சென்னையின் வர்த்தக பகுதிகளாக உள்ள தி.நகர், புரசைவாக்கம், மயிலாப்பூர், பாண்டிபஜார், பாரிமுனை, வண்ணாரப்பேட்டை, கோயம்பேடு உள்ளிட்ட இடங்களில் எப்ஆர்எஸ் மற்றும் சிசிடிவி கேமராக்கள் அமைத்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக துணை கமிஷனர் தலைமையில் சிசிடிவி கேமராக்கள் இணைக்கப்பட்ட சிறப்பு காவல் கட்டுப்பாட்டு அறைகள் அமைத்து, பொதுமக்களை போலீசார் கண்காணித்து வருகின்றனர். தி.நகர், புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை என பல்வேறு வர்த்த பகுதிகளில் உதவி கமிஷனர்கள் தலைமையில் சாதாரண உடையில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண் காவலர்கள் மற்றும் காவலர்கள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

தி.நகர், பாண்டிபஜார் பகுதிகளில் கொள்ளயைர்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கொள்ளையர்கள்  மற்றும் ஆந்திரா கொள்ளையர்களின் புகைப்படங்களுடன் ஆங்காங்கே பொதுமக்கள் பார்க்கும் வகையில் பேனர்கள் வைத்து ஒலிப்பெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இதுதவிர பெண்கள் கூட்ட நெரிசலில் தங்களது நகைகளை பாதுகாத்து கொள்ளும் வகையில் கழுத்தில் அணியும் வகையில் கவச துணிகள் வழங்கப்பட்டு வருகிறது. கூட்ட நெரிசலில் பெண்களிடம் சில்மிஷம் செய்யும் நபர்கள், பிக்பாக்கெட் அடிக்கும் கொள்ளையர்களை அடையாளம் காணும் வகையில் தி.நகர் ரங்கநாதன் தெரு, பாண்டிபஜார், புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை பகுதிகளில் கண்காணிப்பு கோபுரங்கள் அத்து போலீசார் தொலைநோக்கி மூலம் கண்காணித்து வருகின்றனர்.

தி.நகர் மற்றும் பாண்டிபஜார் பகுதிகளில் நேற்று ஆயிரக்கணக்கான மக்கள் தங்களது குடும்பத்துடன் வந்து தங்களுக்கு தேவையான பொருட்கள், துணிகள், இனிப்புகள், பட்டாசுகளை வாங்கினர். ஒரே நேரத்தில் அதிகளவில் பொதுமக்கள் ஒன்று கூடியதால் அந்த பகுதியில் தி.நகர் துணை கமிஷனர் தலைமையில் ஆயுதப்படை போலீசார் என 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட போலீசார் நேற்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். காவல்துறை சார்பில் செய்யப்பட்டுள்ள சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளை நேற்று முன்தினம் இரவு போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் நேரில் சென்று பார்வையிட்டார். திருட்டு, வழிப்பறி சம்பவங்களை தடுப்பது குறித்து உயர் அதிகாரிகளுக்கு ஆலோசனை நடத்தினர். தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ள நிலையில் நேற்று தி.நகர் பகுதி மக்கள் வெள்ளத்தில் ஷாப்பிங் களைகட்டியது.

Tags : Diwali ,T. Nagar ,Purasaivakkam ,Vannarpet , Crowds throng to buy firecrackers and crackers for Diwali Security arrangements intensified in T. Nagar, Purasaivakkam, Vannarpettai: Watchtowers, surveillance of robbers with the help of modern cameras
× RELATED 15 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெற...