தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட பிரபல கொள்ளையன் குண்டாசில் கைது

சென்னை: சென்னை முகப்பேர் சுற்றுவட்டார பகுதியில் வாலிபர் ஒருவர் அதிகாலையில் பைக்கில் வந்து சாலையில் நடந்து செல்பவர்களை வழிமறித்து கத்தியை காட்டி செல்போன், பணம், நகையை பறித்து செல்வதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். அதன்பேரில், ஜெ.ஜெ நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். கடந்த 12ம் தேதி ரவுண்ட் பில்டிங் அருகே உள்ள டாஸ்மாக் கடையில் திருமங்கலம் பாடி புதூர் பகுதியை சேர்ந்த முருகன் (36) என்பவரிடம் ஒரு வாலிபர் கத்தியை காட்டி மிரட்டி பைக், செல்போன் மற்றும் 500 ரூபாயை பறித்து தப்பினார். இதுகுறித்து முருகன் கொடுத்த புகாரின்படி,  போலீசார் வழக்குபதிவு செய்து குற்றவாளியை தேடி வந்தனர்.

இதேபோல், முகப்பேர் பகுதியை சேர்ந்த பிளாஸ்டிக் வியாபாரி பிரபாகரன் (31), அதே பகுதியில் நடந்து சென்றபோது பைக்கில் வந்த ஒரு வாலிபர், அவரை வழிமறித்து கத்தியை காட்டிமிரட்டி 500 ரூபாய் மற்றும் செல்போனை பறித்து தப்பினார். அப்போது அங்கு வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார், விரட்டி சென்று அவரை மடக்கி பிடித்தனர். பின்னர், அவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.  அதில், திருமங்கலம் பாடி புதூர் பகுதியை சேர்ந்த பிரபல வழிப்பறி கொள்ளையன் பிரகாஷ் (எ) சாம்பார் பிரகாஷ் (25) என்பதும்,  இவர்மீது, மதுரவாயல், முகப்பேர், திருமங்கலம், நொளம்பூர் ஆகிய காவல் நிலையங்களில், வழிப்பறி உள்பட பல வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரிய வந்தது.

இதையடுத்து பிரபாகரனை புழல் சிறையில் அடைத்தனர். தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட பிரகாஷை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க திருமங்கலம் உதவி ஆணையர் வரதராஜன், சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலுக்கு பரிந்துரை செய்தார். அவரின் உத்தரவின்படி, பிரகாஷை நேற்று முன்தினம் குண்டர் தடுப்பு சட்டத்தில் புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories: