வாட்ஸ்அப், செல்போன் அழைப்பில் ஆர்டர் பெற்று பைக்குகளில் வீதி வீதியாக சென்று கஞ்சா விற்ற 7 வாலிபர்கள் கைது: 5 கிலோ கஞ்சா, 4 பைக் பறிமுதல்

அண்ணாநகர்: அமைந்தகரை சுற்றுவட்டார பகுதியில், ஒரு மர்ம கும்பல் பைக்கில் தெரு தெருவாக சென்று கஞ்சா விற்பனை செய்து வருவதாக அமைந்தகரை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் தனிப்படை போலீசார் அமைந்தகரை சுற்றுவட்டார பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இந்நிலையில், அமைந்தகரை மெட்ரோ ரயில்நிலையம் அருகே நேற்று முன்தினம் 4 பைக்குகளில் 7 பேர், தனித்தனியாக கஞ்சா விற்பனை செய்தபோது, அங்கு மாறுவேடத்தில் இருந்த போலீசார் அவர்களை பிடிக்க முயன்றனர். போலீசாரை பார்த்ததும் அந்த கும்பல் பைக்கில் ஏறி தப்ப முயன்றது. ஆனால், போலீசார் அவர்களை விரட்டி சென்று சுற்றிவளைத்து மடக்கி பிடித்தனர். பின்னர்,  அவர்களை அமைந்தகரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

இதில், பிரபல ரவுடிகளான முகப்பேர் நக்கீரன் தெருவை சேர்ந்த  வின்சென்ட் (27), பெரும்பாக்கம் எழில்நகரை சேர்ந்த பிரகாஷ் (எ) பாம்பு பிரகாஷ் (25), மதுரவாயல் வி.ஜி.பி.அமுதா நகரை சேர்ந்த பிரேம் (எ) தமிழ்வாணன் (22), அரும்பாக்கம் என்.எஸ்.கே. நகரை சேர்ந்த மணிகண்டன் (எ) பூனை மணிகண்டன் (20), அமைந்தகரை பாரதிபுரம் பகுதியை சேர்ந்த சரவணன் (24), விஜய் (22), ஆகாஷ்குமார் (25) என்பதும், இவர்கள் வேலூர் மாவட்டத்துக்கு பைக்கில் சென்று அங்கிருந்து கஞ்சா கடத்தி வந்து, சிறுசிறு பொட்டலமாக பிரித்து அமைந்தகரை, கோயம்பேடு, அம்பத்தூர், புளியந்தோப்பு, அயப்பாக்கம், பெரும்பாக்கம் உள்பட பல பகுதிகளில் விற்பனை செய்தது தெரிந்தது.

மேலும், வாட்ஸ்அப் குழு அமைத்து, அதில் கஞ்சா கேட்பவர்களுக்கு கூகுள்பே மூலம் பணம் பெற்றுக்கொண்டு, டோர் டெலிவரி செய்து வந்ததும் தெரிந்தது. இதையடுத்து, அவர்களிடம் இருந்து 4 பைக்குகள் மற்றும் 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர், அவர்களை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.   இந்த வழக்கில் வின்சென்ட் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதுதொடர்பாக, போலீசார் வழக்கு பதிவு செய்து, பிடிபட்டவர்கள் வேலூரில் யாரிடமிருந்து கஞ்சா வாங்கி வந்தனர் என விசாரித்து வருகின்றனர். கஞ்சா விற்பனை கும்பலை உடனடியாக கைது செய்த அண்ணாநகர் துணை ஆணையர் விஜயகுமார், ஆய்வாளர் கிருபாநிதி ஆகியோரை சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் பாராட்டினார்.

Related Stories: