×

பழைய குற்றவாளிகளை அடையாளம் காண எப்ஆர்எஸ் கேமரா மூலம் 1,875 பேரிடம் சோதனை: 730 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் சிக்கினர்

சென்னை: சென்னை மாநகரில் பழைய குற்றவாளிகளை அடையானம் காணும் வகையில் எப்ஆர்எஸ் கேமரா மூலம் 1,875 நபர்களிடம் சோதனை நடத்தப்பட்டு, பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய 730 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் பிடிபட்டனர். சென்னை மாநகர காவல் எல்லையில் குற்றப் பின்னணி உள்ள நபர்களை கண்காணித்து, நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி போலீசார் ஒவ்வொரு வார இறுதி நாட்களிலும் மாநகரம் முழுவதும் அதிரடி வாகன சோதனை மற்றும் ‘ரவுடிகளுக்கு எதிரான நடவடிக்கை’ என்ற பெயரில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.அந்த வகையில், சென்னை மாநகரம் முழுவதும் நேற்று முன்தினம் பழைய குற்றவாளிகளை அடையாளம் காணும் (எப்ஆர்எஸ்) கேமரா மூலம் போலீசார் வாகன சோதனை நடத்தினர்.

 இந்த சோதனையில் பைக், ஆட்டோ, கார் மற்றும் கனரக வாகனங்கள் என மொத்தம் 4,116 வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டது. அதில் மது போதையில் வாகனம் ஓட்டியதாக ஒரு வாகனமும், முறையான ஆவணங்கள் இல்லாமல் வாகனங்கள் இயக்கியதாக 30 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. அப்போது முக அடையாளத்தை கொண்டு பழைய குற்றவாளிகளை அடையாளம் காணும் (எப்ஆர்எஸ்) கேமரா மூலம் 1,875 நபர்களை சோதனை செய்தனர். அதில், 730 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டது. அதில் சட்டம் ஒழுங்குக்கு குந்தகம் விளைவித்த 1 ரவுடி கைது செய்யப்பட்டார்.

நீதிமன்றம் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக இருந்த 7 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். நீண்ட நாட்கள் பல்வேறு வழக்கில் தலைமறைவாக இருந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். 41 குற்றவாளிகள் திருந்தி வாழ்வதாக அந்தந்த துணை கமிஷனர்கள் முன்பு நன்னடத்தை பிணை பத்திரம் எழுதி கொடுத்துவிட்டு சென்றனர். இதுவரை சென்னை மாநகரில் பல்வேறு குற்ற வழக்கில் தொடர்புடைய 2,417 குற்றவாளிகளிடம் நன்னடத்தை பிணை பத்திரம் பெற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Tags : FRS , 1,875 people screened by FRS camera to identify ex-offenders: 730 criminals nabbed
× RELATED தீபாவளி பண்டிகைக்கு துணிகள் வாங்க...