ஹைடெக் வசதிகளுடன் தனியார் பள்ளிகளை தோற்கடிக்கும் புளியம்பேடு அரசு பள்ளி: படிப்பிலும் அசத்துகிறது

நாட்டின் சிறந்த தலைவர்களையும், வல்லுநர்களையும், அறிஞர்களையும் உருவாக்கிய பெருமை அன்றும், இன்றும் என்றும் அரசுப் பள்ளிகளையே சாரும். தனியார் பள்ளிகள் மீதான மோகம் ஒரு பக்கம் இருந்தாலும், அண்மைக்காலமாக அரசின் திட்டங்களாலும், தன்னார்வலர்கள் சிலரின் உதவியினாலும், தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசுப் பள்ளிகள் தரத்திலும், கட்டமைப்பிலும், படிப்பிலும் உயர்ந்து வருகின்றன. அந்த வகையில் சென்னையை அடுத்த திருவேற்காடு நகராட்சி 9வது வார்டு புளியம்பேடு பகுதி பிள்ளையார் கோயில் தெருவில் உள்ள வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஹைடெக் வசதிகளுடன், படிப்பிலும் அசத்தி வருகிறது. சுமார் 75 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட இந்தப் பள்ளியில் அந்தப் பகுதியை சேர்ந்த வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள குடும்பங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

இங்கு படிக்கும் மாணவர்களைப் பார்த்தால் இவர்கள் அரசுப் பள்ளி மாணவர்களா என்று வியக்கும் அளவுக்கு வண்ண சீருடை, சாக்ஸ், ஷூ, ஐ.டி.கார்டு, பெல்ட் என்று தனியார் பள்ளி மாணவர்களைப் போல பள்ளிக்கு மகிழ்ச்சியுடன் வருகின்றனர். தனியார் பள்ளிகளுக்கு இணையாக டிவி, புரஜெக்டர், சிசிடிவி கேமரா, கம்ப்யூட்டர், சுகாதாரமான குடிநீர் என பல்வேறு நவீன வசதிகளுடன் பள்ளி இயங்கி வருகிறது. தற்போது இந்தப் பள்ளியின் தலைமையாசிரியையாக எழிலரசி, மற்றும் 3 ஆசிரியைகள் பணிபுரிந்து வருகின்றனர். 150க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். ஆசிரியர்களின் வழிகாட்டுதலால் படிப்பு, ஒழுக்கம், கட்டுப்பாடு, பொது அறிவு என எல்லாவற்றிலும் மாணவர்கள் சிறந்து விளங்குகின்றனர்.  தினசரி பள்ளி திறந்ததும் இறை வணக்கம் நிகழ்ச்சியில் கடவுள் வாழ்த்து, திருக்குறள் விளக்கம், அறநூல்கள் வாசித்தல், பள்ளி சார்ந்திருக்கும் மாவட்டம், வட்டம், ஒன்றியம், நகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் விவரம், தற்போதைய பிரதமர், குடியரசு தலைவர், முதல்வர், ஆளுநர் உள்ளிட் அரசமைப்பின் தலைவர் மற்றும் நிர்வாகிகளின் பெயர், முக்கிய நிகழ்வுகள் குறித்த செய்திகளையும் மாணவர்கள் கூறுகின்றனர்.

படிப்பிலும், தேர்ச்சி விகிதத்திலும், தனித்திறமையிலும், விளையாட்டுகளிலும் தனியார் பள்ளி மாணவர்களை காட்டிலும் ஒரு படி மேலே சென்று அசத்தி வருகின்றனர். இந்தப் பள்ளி தரத்திலும், கட்டமைப்பிலும், படிப்பிலும் சிறந்து விளங்க உதவி செய்து உறுதுணையாக இருந்து வருபவர் அந்தப் பள்ளியில் படித்த அதே பகுதியை சேர்ந்த முன்னாள் மாணவரான உமாபதி (51). இந்தப் பள்ளியில் 5ம் வகுப்புவரை படித்த இவர், பி.காம் பட்டதாரியாகி குமணன்சாவடியில் கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். திருவேற்காடு நகராட்சி கவுன்சிலராக தற்போது 3-வது முறையாக வெற்றி பெற்று பதவி வகித்து வருகிறார். தனக்கு அகரம் கற்றுத் தந்து ஆளாக்கிய அந்த அரசுப்பள்ளிக்கு உதவ வேண்டும் என்பதற்காக அந்தப் பள்ளியை கடந்த 17 ஆண்டுகளாக உமாபதி தத்தெடுத்து உதவி செய்து வருகிறார்.

ஆண்டு தோறும் தனது சொந்த செலவில் மாணவ மாணவிகளுக்கு இரண்டு ஜோடி சீருடை, டை, ஷூ, சாக்ஸ், பெல்ட், ஐ.டி.கார்டு, நோட்டு புத்தகங்கள், மாணவர்களின் கல்வி குறித்து பெற்றோருக்கு குறிப்பெழுதும் டைரி, விளையாட்டு சீருடை, பணியன் என மாணவர்களுக்கு தேவையான அனைத்தையும் வாங்கி கொடுத்து வருகிறார். மேலும், இவரது உதவியால் ஸ்மார்ட் வகுப்பறைக்காக 2 வகுப்பறைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. கழிப்பறை வசதி செய்து கொடுத்துள்ளார். மேலும் கூடுதல் வகுப்பறை கட்டுவதற்கான முயற்சிகளையும் அவர் சொந்த செலவிலும், நண்பர்கள் உதவியுடன் செய்து வருகிறார். அரசுப்பள்ளிகளில் படித்து இன்று உயர்நிலைகளில் இருந்து வரும் முன்னாள் மாணவர்கள் தாங்கள் படித்த அரசுப் பள்ளிகளுக்கு உதவி செய்தாலே அரசுப் பள்ளிகள் இன்னும் சிறப்பாக செயல்படும் என்பதற்கு இந்த வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியே சிறந்த உதாரணமாகும்.

Related Stories: