×

கட்டி முடித்து 4 ஆண்டுகளாகியும் பயன்பாட்டிற்கு வராத ஆர்ஐ அலுவலகம்

திருவொற்றியூர்: மணலியில் ரூ.30 லட்சத்தில் கட்டப்பட்ட வருவாய் ஆய்வாளர் அலுவலகம் 4 ஆண்டுகளாக பயன்பாட்டுக்கு திறக்கப்படாமல் பூட்டி கிடக்கும் அவல நிலை, இதனை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். திருவொற்றியூர் தாசில்தார் சரகத்திற்குட்பட்ட மணலி வருவாய்த்துறை ஆய்வாளருக்கு தனியாக அலுவலகம் இல்லை. இதனால் பொதுமக்கள் வாரிசு சான்று, பட்டா மற்றும் வருவாய் துறை தொடர்பான பிரச்னைகளுக்கு வருவாய் ஆய்வாளரை செல்போனில் தொடர்புகொண்டு அவர் எங்கே இருக்கிறார் என்று கேட்டறிந்து அந்த இடத்திற்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இந்நிலையில், கடந்த 2018ம் ஆண்டு பொதுப்பணித்துறை சார்பில் ரூ.30 லட்சம் செலவில் மணலி ஜாகிர் உசேன் தெருவில் வருவாய்த்துறை ஆய்வாளர் அலுவலகம் கட்டப்பட்டது.

ஆனால் பணி முடிந்து சுமார் 4 ஆண்டுகள் ஆகியும், இதுவரை இந்த கட்டிடம் பயன்பாட்டுக்கு திறக்கப்படாமல் பூட்டிய கிடக்கிறது. இதனால் வருவாய் ஆய்வாளரை சந்திக்க பொதுமக்கள் வழக்கம்போல் அல்லல்பட வேண்டியதாக உள்ளது. மேலும், பல ஆண்டுகளாக திறக்கப்படாமல் அலுவலகம் பூட்டி கிடப்பதால் பயன்படுத்தப்படாமலேயே பாழாகிக் கொண்டிருக்கிறது.
இந்த வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தை திறக்க வேண்டும் என்று வார்டு கவுன்சிலர் ஸ்ரீதர், வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும், இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை.

இதுகுறித்து, பொதுமக்கள் கூறுகையில், ‘‘மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்ட இந்த வருவாய் ஆய்வாளர் அலுவலகம் 4 ஆண்டுகளாக பூட்டி கிடக்கிறது. கட்டுமான பணி முடிந்தும் ஏன் திறக்கப்படவில்லை என்று வருவாய் துறை அதிகாரிகளை கேட்டால், புதிதாக கட்டப்பட்ட இந்த அலுவலகம் அருகில் பள்ளமாகவும், அதில் மழைநீர் தேங்கி இருப்பதால் பாதுகாப்பில்லாத நிலை உள்ளது. அலுவலகத்திற்கு செல்லக்கூடிய சாலை பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத அளவிற்கு குண்டும், குழியுமாக உள்ளது. அதனால் எங்களால் இந்த வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தை திறந்து பணியாற்ற முடியவில்லை என்று தெரிவிக்கின்றனர். இதனால், இங்குள்ள பிரச்னைகளை சரிசெய்து, வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தை திறக்க பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறை உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.

Tags : RI , RI office not in use even after 4 years of construction
× RELATED ஆர்.ஐ., லஞ்சம் கேட்பதாக திமுக கவுன்சிலர் குற்றச்சாட்டு